கீதா கபூர் (Geeta Kapur ; பிறப்பு 1943) ஒரு புகழ்பெற்ற இந்திய கலை விமர்சகரும், கலை வரலாற்றாசிரியரும், புது தில்லியைச் சேர்ந்த கண்காணிப்பாளரும் ஆவார் .[1][2] இவர் இந்தியாவில் கலை விமர்சன எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர்.[3] மேலும், இந்தியன் எக்சுபிரசு குறிப்பிட்டது போல், "மூன்று தசாப்தங்களாக இந்திய சமகால கலை கோட்பாட்டின் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்".[4] இவரது எழுத்துக்களில் கலைஞர்களின் தனிவரைநூல்கள், கண்காட்சி பட்டியல்கள், புத்தகங்கள், கலை, திரைப்படம், கலாச்சாரக் கோட்பாடு பற்றிய பரவலாக தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கும்.[5] நாடக இயக்குநர் அனுராதா கபூர் இவரது தங்கையாவார்.
கலைக்கான பங்களிப்புக்காக 2009ஆம் ஆண்டில் இந்திய அரசால் இவருக்கு பத்மசிறீ விருது[6] வழங்கப்பட்டது.
இவர், புதுதில்லியின் நவீனப் பள்ளியின் முதல்வராக இருந்த எம். என். கபூருக்கும் அவரது மனைவி அமிர்தா கபூருக்கும் மகளாக 1943இல் பிறந்தார். நவீனப் பள்ளியில் இவரது தந்தை 1947 முதல் 1977 வரை முதல்வராக இருந்தார்.[7] கீதா நியூயார்க் பல்கலைக்கழகத்திலிருந்தும், இலண்டன் அரசகழக கலைக்கல்லூரியிலிருந்தும் கலையில் இரு முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவரது கணவர் விவன் சுந்தரம் இந்தியாவைச் சேர்ந்த சமகால கலைஞராவார்.
ஜர்னல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஐடியாஸ் நிறுவனத்தின் (தில்லி) நிறுவனர்-ஆசிரியர்களில் ஒருவரான இவர், தேர்ட் டெக்ஸ்ட் (இலண்டன்), மார்க் (மும்பை) மற்றும் ARTMargins ஆகியவற்றின் ஆலோசனைக் குழுக்களிலும் இருந்தார். இவர் வெனிஸ் பினேல்ஸ் (2005), தக்கார் (2006), ஷார்ஜா (2007) ஆகிய கலைக்கண்காட்சிகளின் நடுவர் உறுப்பினராக இருந்தார். இவர் குகன்ஹெய்ம் அருங்காட்சியகம், ஆங்காங்கில் உள்ள ஆசிய கலை காப்பகம், கொச்சி-முசிரி பினாலேயில் ஆசிய கலை மன்றத்தில் உறுப்பினராக உள்ளார்.
2011 இல், ஆங்காங்கை தளமாகக் கொண்ட ஆசியா கலை காப்பகம் (AAA) அவர்களின் காப்பகத்தை எண்ணிமப்படுத்தி, பிப்ரவரி 2011 இல் புதுதில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் "மற்றொரு வாழ்க்கை" [8] என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை நடத்தியது.
இவர் 1967 முதல் 1973 வரை தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் கற்பித்தார். இவர் சர்வதேச அளவில் விரிவுரை செய்கிறார். சிம்லாவில் உள்ள இந்திய மேம்பட்ட ஆய்வு நிறுவனம், கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தில் கிளார் ஹால், புது தில்லி தீன் மூர்த்தியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் & நூலகத்தில் வருகை தரும் ஆசிரியராக கற்பித்துள்ளார்.