கீதாப்பிரியா | |
---|---|
பிறப்பு | லட்சமண் ராவ் மொஹித் 15 சூன் 1932 |
இறப்பு | 17 சனவரி 2016 பெங்களூர், கர்நாடகா, இந்தியா | (அகவை 83)
தேசியம் | இந்தியன் |
பணி | பாடலாசிரியர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் |
கீதபிரியா (Geethapriya) என்கிற புனைபெயரில் அழைக்கப்படும், லட்சுமன் ராவ் மொகிட்டி ( ஜூன் 15, 1932 - ஜனவரி17, 2016 ), ஓர் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் கன்னட திரையுலகின் பாடலாசிரியர் ஆவார். இவர் 40 படங்களை இயக்கியுள்ளார். மேலும், கன்னடத் திரைப்படங்களில் 250 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 1992-93 ஆம் ஆண்டில், கன்னட சினிமாவுக்கு இயக்குனராக பங்களித்ததற்காக அவருக்கு புட்டண்ணா கனகல் விருது வழங்கப்பட்டது.[1]
கீதபிரியா 1931 ஆம் ஆண்டில் லட்சுமன் ராவ் மொகிட்டியாக,[2] ராமராவ் மொகிட்டி மற்றும் லட்சுமிபாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை மைசூர் லான்சர்ஸ் என்று அழைக்கப்படும் மைசூர் மாநில துருப்புக்களின் குதிரைப்படை படைப்பிரிவில் பணியாற்றினார். இது பெங்களூரில் நிறுத்தப்பட்டிருந்தது. இவரது தாய்மொழி மராத்தி என்றாலும், இவர் எப்போதும் கன்னட மொழியில் ஆர்வம் கொண்டிருந்தார், கன்னட-நடுத்தர பள்ளியில் அனுமதிக்கப்பட்டார். கவிஞர் பி.டி. நரசிம்மச்சார் கீதபிரியாவின் குடும்பம் இருக்கும் அதே பகுதியில் வசித்து வந்தார். அதனால், அவர், கீதபிரியாவின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். மேலும், கே. சிவராம காரந்த், மஸ்தி வெங்கடேஷ் ஐயங்கார், டிஆர் சுப்பா ராவ் மற்றும் ஏ. என். கிருஷ்ணா ராவ் ஆகியோரின் படைப்புகளும் இவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் தனது இடைநிலைப்பள்ளியில் பயிலும் போது, தன் கைப்பட எழுதிய கவிதைகள் மற்றும் சிறுகதைகளை, தாயிநாடு, ராமராஜ்யா போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பினார்.
சி.ஏ. இடைநிலை படிப்பு முடிந்ததைத் தொடர்ந்து, கீதபிரியா சிறிய எழுத்துப் பணிகளை மேற்கொண்டார். பின்னர் பெங்களூரில் உள்ள கப்பன் பார்க் உணவகத்தில் எழுத்தராக பணியாற்றினார். அங்கு அவருக்கு மாத சம்பளம் 35 ரூபாய் ஆகும். .நாடக சங்கத்தில் அறிமுகமாயிருந்த இவர், இசை இயக்குநர் விஜயா பாஸ்கர் மற்றும் திரைப்பட இயக்குநர் எம்.பி. சிங் ஆகியோரை நண்பர்களாகக் கொண்டிருந்தார். மாதம் 40 ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்த தனது நண்பர் பாஸ்கரின் மூலமாக, 1954 இல், கீதபிரியா ஒரு பாடலாசிரியராக திரைப்படங்களில் நுழைந்தார்.
கீதபிரியா தனது வாழ்க்கையின் கடைசி சில ஆண்டுகளில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டார். பல்வேறு உடல்நல சிக்கல்களின் காரணத்தால், ஜனவரி 17, 2016 அன்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.[3]
கீதபிரியா, 1954 ஆம் ஆண்டில் பாடலாசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஸ்ரீ ராம பூஜை படத்திற்காக ஒரு பாடலை எழுதினார். பின்னர் அவர் சென்னைக்குச் சென்றார். ஒய்.வி.ராவ் உடன் பாக்ய சக்ரா (1956) படத்திற்காக வசனங்களையும் பாடல்களையும் எழுதி பணியாற்றினார். ஸ்ரீ ராமாஞ்சநேய யுத்தா (1963) திரைப்படத்தில், கீதபிரியா எழுதிய "ஜகதீசனடுவா ஜாகவே நாடகரங்கா " என்ற பாடலும், அதைத் தொடர்ந்த பதினொரு பாடல்களும் பெரும் வெற்றியைப் பெற்றது.. இதைத் தொடர்ந்து "ஆதுதிருவ மொடகலே" என்ற பாடலை, பெட்டாடா ஹுலி (1965) திரைப்படத்திற்காகவும், மற்றும் ஒன்டே பல்லியா ஹூகலு (1967) படத்திற்காக , "நீனெல்லி நடேவ் தூரா" பாடலை எழுதியுள்ளார். கன்னடத் திரைப்படத்திற்காக முகமது ரஃபி பாடிய ஒரே பாடல்"நீனெல்லி நடேவ் தூரா" ஆகும்.
கீதபிரியா தனது முதல் படமான மன்னினா மகா வை, 1968 இல் இயக்கியுள்ளார். அதில் ராஜ்குமார் மற்றும் கல்பனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு, கன்னடத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது [4] மேலும் சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்றது. இத் திரைப்படம் பெங்களூரின் கபாலி மற்றும் பாரத் திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடியது.
யாவா ஜன்மதா மைத்ரி, (1972), பெலுவலடா மாடிலல்லி (1975), பெசுஜ் (1976), ஹோம்பிசிலு (1978), புதானி முகவர் 123 (1979) மற்றும் மௌன கீதே (1985) போன்ற வெற்றிகரமான படங்களை இயக்கியுள்ளார். தனது தொழில் வாழ்க்கையில் 40 திரைப்படங்களை இயக்கிய இவர், இயக்கம் குறித்த நிபுணத்துவத்திற்காக புட்டண்ணா கனகல் விருது பெற்றார் .[1] அவர் மூன்று துளுவம் மொழிப் படங்களையும், ஓர் இந்தி படமான அன்மோல் சித்தாரையும் இயக்கியுள்ளார்.