குமாரபுரம் சேசாத்ரி ஐயர் | |
---|---|
மைசூர் இராச்சியத்தின் 15ஆவது திவான் | |
பதவியில் 1883 பிப்ரவரி 12 – 1901 மார்ச் 18 | |
ஆட்சியாளர்கள் | பத்தாம் சாமராச உடையார், நான்காம் கிருட்டிணராச உடையார் |
முன்னையவர் | செ. வீ. இரங்காச்சார்லு |
பின்னவர் | தி. ஆர். ஏ. தம்புச் செட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பாலக்காடு, கேரளா | 1 சூன் 1845
இறப்பு | 13 செப்டம்பர் 1901 மைசூர் | (அகவை 56)
துணைவர் | தர்மசம்வர்தினி (1865-1901) |
முன்னாள் கல்லூரி | மாநிலக் கல்லூரி, சென்னை |
தொழில் | அரசு ஊழியர், நிர்வாகி |
சர் குமாரபுரம் சேசாத்ரி ஐயர் (Sir Kumarapuram Seshadri Iyer) (1845 சூன் 1 - 1901 செப்டம்பர் 13), ஓர் வழக்கறிஞரான இவர் 1883 முதல் 1901 வரை மைசூர் திவானாக பணியாற்றினார். 1881 ஆம் ஆண்டில் உடையார் குடும்பத்தை மீண்டும் அரியணையில் அமர்த்தியதிலிருந்து மைசூர் மாநிலத்தின் இரண்டாவது திவான் ஆவார். மேலும் சுதேச அரசின் மிக நீண்ட கால திவானாகவும் இருந்தார். இவர் நவீன பெங்களூரைக் கட்டமைத்தவராகக் கருதப்படுகிறார்.
சென்னை மாகாணத்திலிருந்த நவீன கேரளாவில் உள்ள மலபார் மாவட்டத்தின் பாலகாட்டில் இவர் பிறந்தார். கோழிகோட்டில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர், 1868 இல் சென்னையின் மாநிலக் கல்லூரியில் கலைகளில் பட்டம் பெற்றார். மேலும், இவர் ஒரு தகுதி வாய்ந்த வழக்கறிஞராகவும் இருந்தார்.
இவர் 1868 இல் மைசூர் இராச்சியத்தில் பனியில் சேர்ந்தார். மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் திவானின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றினார். இவர் மைசூர் இராச்சியத்தில் மிக நீண்ட காலம் திவானாக 1883 முதல் 1901 வரை பணியாற்றினார்.
மைசூர் அரசுப் பணித் தேர்வுகள் முதன்முறையாக 1891 இல் நடைபெற்றன. மேலும், 1894. 1898 ஆம் ஆண்டுகளில் புவியியல் துறையும் வேளாண்மைத் துறையும் ஆகியவை நிறுவப்பட்டன. வேதவதி ஆற்றின் குறுக்கே வாணிவிலாச சாகர் அணை, 1899 ஆம் ஆண்டில் சிவசமுத்திரம் நீர்மின் திட்டத்தைத் தொடங்கியது (இந்தியாவில் இது முதல் பெரிய முயற்சி), மின்சாரம், குடிநீர் (குழாய்கள் வழியாக கொண்டு சேர்த்தது) ஆகியவை குறிப்பிடத்தக்க சாதனைகள். மைசூர் தொல்பொருள் ஆய்வகம் (1890), கீழைநாட்டுவியல் கையெழுத்துப் பிரதி நூலகம் நிறுவப்பட்டது.
இவர் கோலார் தங்க வயல்களையும் விக்டோரியா மருத்துவமனையையும் நிறுவி சிவசமுத்ரா நீர்மின் மின்சார திட்டத்தை தொடங்கினார். இவர் 1898 ஆம் ஆண்டில் பெங்களூரை பாதித்த பேரழிவு தரும் பிளேக்கைச் சமாளிக்க வேண்டியிருந்தது. மேலும் தெருக்களை விரிவுபடுத்தியும், பிளேக்குக்குப் பின்னர் நகரத்தை புனரமைத்தும் இருந்தார்.
இவர் 1845 சூன் 1 ஆம் தேதி அனந்தநாராயணன் ஐயர், அவரது இரண்டாவது மனைவி வெங்கடலட்சம்மா ஆகியோருக்கு பாலக்காடு அருகேயுள்ள குமாரபுரம் என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார். இவரது தாத்தா கௌரி சேசன் பட்டு 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரகாரத்தில் இருந்து குமாரபுரத்திற்கு குடிபெயர்ந்தார்.
அனந்தநாராயணன் ஐயர் கோழிகோட்டில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். சேசாத்ரி ஐயரைத் தவிர, அவருக்கு முதல் மனைவியிடமிருந்து வெங்கடசுப்ப ஐயர் என்ற ஒரு மகன் பிறந்தார். வெங்கடசுப்ப ஐயரும் கோழிக்கோட்டில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1846 இல் அனந்தநாராயண ஐயரின் இறப்பிற்குப் பின்னர் குடும்பத்தை 20 வயதான வெங்கடசுப்ப ஐயர் கவனித்து வந்தார்.
இவர் கொச்சியில் உள்ள இலவச தேவாலயப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டு பதினொன்றாம் ஆண்டு வரை கல்வி பயின்றார். சேசாத்ரி தனது உயர் கல்வியை கோழிக்கோடு மாகாணப் பள்ளி, திருவனந்தபுரம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அங்கிருந்து 1863 ஆம் ஆண்டில் முடித்தார். பின்னர், சேசாத்ரி சென்னை, மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு வருக்கு ஈ.பி. பவல் என்பவர் வழிகாட்டினார். சேசாத்ரி 1866 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
1868 ஆம் ஆண்டில், மைசூர் இராச்சியத்தின் அஷ்டகிராம் பிரிவில் இவர் நீதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் நீதித்துறை ஆணையரின் நீதிமன்றத்தின் தலைமை சிரஸ்தார், மைசூர் உதவி ஆணையர், துணை ஆணையர், தும்கூர் மாவட்ட நீதிபதி, அஷ்டகிராம் பிரிவின் மாவட்ட நீதிபதி, அமர்வு நீதிபதி ஆகிய பொறுப்புகளில் பணியாற்றினார்.
1874 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். 1881 முதல் 1883 வரை மைசூரில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார். 1883 ஆம் ஆண்டில், இரங்காச்சார்லு என்பவரின் பதவிக்காலம் முடிவடைந்தபோது, இவர் மைசூரின் திவானாக நியமிக்கப்பட்டார்.
இவர் 1883 ஆம் ஆண்டில் மைசூரின் திவானாக பதினெட்டு ஆண்டுகள் மைசூரை நிர்வகித்தார். இவர் சுதேச அரசின் மிக நீண்ட கால திவானாக பணியாற்றினார். இராச்சியத்தில் போக்குவரத்து, நீர்ப்பாசனம், சுரங்கத் துறைகளை மேம்படுத்தினார். இரயில் பாதைகளை 270 கிலோமீட்டர்கள் (170 mi) நீட்டித்தார். கர்நாடகாவின் கோலார் தங்க வயல்கள் இவரது ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டன. 1889 ஆம் ஆண்டில் லால் பாக்கில் புகழ்பெற்ற கண்ணாடி மாளிகையையும், 1900 ஆம் ஆண்டில் பெங்களூரில் விக்டோரியா மருத்துவமனையையும் கட்டினார்.
1902 ஆம் ஆண்டில் கோலார் தங்க வயல்களுக்கும் 1905 ஆம் ஆண்டில் பெங்களூருக்கும் மின்சாரம் அளிக்ககூடிய ஆசியாவிலேயே முதல் சிவசமுத்ர நீர் மின்சாரத் திட்டத்தைத் தொடங்குவதற்கு இவர் பொறுப்பேற்றார். பின்னர், 1930 களில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது, சிவசமுத்ரத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டது. சர் சேசாத்ரி நீர்மின்நிலையத்திற்கு மே 2006 இல் ஒரு தேசிய பாரம்பரிய மையத்தின் அந்தஸ்து வழங்கப்பட்டது.
1898 ஆம் ஆண்டில், ஒரு பிளேக் நோய் பெங்களூர் நகரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியது. மேலும் அதன் மக்கள் தொகையில் பெரும் பகுதியை அழித்தது. மீதமுள்ள மக்கள் கிராமப்புறங்களில் திறந்த விளைநிலங்களில் அமைக்கப்பட்ட முகாம்களுக்கு சென்றனர். மிகவும் நெரிசலான பழைய நகரப் பகுதி, மிகவும் குறுகிய, ஒழுங்கற்ற பாதைகளில் கட்டப்பட்ட சிறிய வீடுகளைக் கொண்டிருந்தது, பெரும்பாலான இந்தியர்கள் வாழ்ந்த இடமாக இருந்தது. இந்த பகுதி பிளேக் நோயால் மோசமாக பாதிக்கப்பட்டது. மைசூர் அரசாங்கம், பிரிட்டிசு இராச்சியத்துடன் கலந்தாலோசித்து, அந்த நாட்களில் பிளேக்கும், பிற தொற்று நோய்களும் மீண்டும் வருவதைத் தடுக்க இந்த பகுதியை இடமாற்றம் செய்ய இடிக்க முடிவு செய்தது. இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்காக ஐயரின் நிர்வாகம் 1898 முதல் பசவனகுடி, மல்லேசுவரம் புறநகர் பகுதிகளை உருவாக்கியது. காலி மனைகள் ஒதுக்கப்பட்டன. மேலும் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு காற்றோட்டமான புதிய வீடுகளைக் கட்டுவதற்கு பிற உதவிகள் வழங்கப்பட்டன. நீட்டிப்புகள் நகரத்தின் நெரிசலைத் தணிப்பது மட்டுமல்லாமல், பல புதிய தொழில்துறை அலகுகள் அருகிலேயே நிறுவப்பட்டன. மேலும் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளும் கிடைத்தன. விடுதிகளும் உணவகங்களும் முதன்முதலில் தோன்றின. இதற்கிடையில், பழைய நகரம் இடிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது. வீதிகள் நீக்கப்பட்டன, சாலைகள் அகலப்படுத்தப்பட்டு நேராக்கப்பட்டன; சுகாதாரம் மேம்படுத்தப்பட்டது. 1894 ஆம் ஆண்டில், இவர் ஹெசரகட்டா ஏரியிலிருந்து நகரத்திற்கு நீர் வழங்குவதற்காக சாமராசேந்திர நீர் பணிகளைத் தொடங்கினார். அந்த காலத்தில் இது நகரத்திற்கு வெளியே 18 கி.மீ. தூரம் கொண்டிருந்தது.
பிளேக்கின் போது, ஐரோப்பிய பாணியிலான மருத்துவத்தில் சிகிச்சையை வழங்கும் நன்கு கட்டமைக்கப்பட்ட மருத்துவமனையின் அவசியத்தையும் ஐயர் உணர்ந்தார். விக்டோரியா மருத்துவமனை 1900 ஆம் ஆண்டில் இவரால் தொடங்கப்பட்டது. முன்னதாக, இவர் 1889 இல் லால் பாக்கில் உள்ள கண்ணாடி மாளிகையை நிறுவினார்.
குமார கிருபா என்ற சேசாத்ரி ஐயரின் இல்லம் இப்போது மாநில விருந்தினர் மாளிகையாக உள்ளது. சேசாத்ரிபுரம் (1892 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நகர நீட்டிப்பு), சேசாத்ரி சாலை, சேசாத்ரி நினைவு நூலகம், கப்பன் பூங்காவில் உள்ள சிலை ஆகியவற்றின் மூலம் நகரம் இவரை நினைவு கூர்கிறது .
இவர் 1865 இல் தர்மசம்வர்தினி என்பவரை மணந்தார். இந்த தம்பதியருக்கு நான்கு மகன்கள் (கே.எஸ். துரைசாமி ஐயர், கே.எஸ். கிருட்டிண ஐயர், கே.எஸ். விசுவநாத ஐயர், கே.எஸ். இராமசாமி ஐயர்) 1901 செப்டம்பர் 13, 1901 அன்று சேசாத்ரியின் மரணத்திற்கு சற்று முன்னர் இவரது மனைவி தர்மசம்வர்தினி இறந்தார்.
துரைசாமி ஐயர் மைசூரின் ஆட்சிப்பணியில் வருவாய் ஆணையராக பணியாற்றினார். அவர் 1881 முதல் 1891 வரை சேசாத்ரி ஐயரின் தனிச் செயலாளராகவும் இருந்தார். 1912 ஆம் ஆண்டில், மைசூர் சட்டமன்றத்தின் கூடுதல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கே.எஸ். கிருட்டிண ஐயர் மைசூர் மாநிலச் சேவையில் துணை ஆணையர் பதவிக்கு உயர்ந்தார்.