குஜராத்தின் வரலாறு (History of Gujarat), கி மு 5,000 ஆண்டிற்கு முந்தைய உலகின் பழமையான சிந்துவெளி நாகரீகத்தின் ஹரப்பா குடியிருப்பு பகுதிகளான லோத்தல் மற்றும் தோலாவிரா (கட்ச் மாவட்டம்), குஜராத்தில் கண்டெடுக்கப்பட்டன. மௌரியர்கள், சாதவாகனர்கள் குப்தர்கள், மைத்திரகர்கள் மற்றும் மேற்கு சத்ரபதிகள் காலத்தில் குஜராத்தின் தொன்மையான பரூச் துறைமுகமும், வணிக மையமும் சிறப்புடன் விளங்கியது. குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் குப்தப் பேரரசின் படைத்தலைவர், வல்லபி நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு மைத்திரகப் பேரரசை நிறுவி, குஜராத்தை கி பி 6 - 8ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனர். கி பி 7ஆம் நூற்றாண்டில் சில காலம் குஜராத் பகுதி ஹர்ஷவர்தனர் ஆட்சியில் இருந்தது. சிந்துப் பகுதியின் அரேபிய ஆளுநர் கி பி 770இல் வல்லபி நகரத்தை வீழ்த்தி மைத்திரகப் பேரரசை முடிவுக்கு கொண்டுவந்தார். பின்னர் வந்த கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு குஜராத்தை கி. பி 650 –1036 முடிய ஆண்டனர். குஜராத்தின் சில பகுதிகள் இராஷ்டிரகூடர் மற்றும் பாலர்களின் பேரரசில் சில காலம் இருந்தன. 775இல் சரத்துஸ்திர சமயத்தை பின்பற்றும் பார்சி இன மக்கள் பாரசீகத்திலிருந்து அகதிகளாக குஜராத்தில் குடியேறினர்.[1]
பத்தாம் நூற்றாண்டில் சோலாங்கிப் பேரரசு வலிமையுடன் குஜராத்தை ஆட்சி செய்தது. 30 சனவரி 1025 அன்று கஜினி முகமது குஜராத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் உள்ள சோமநாதர் கோயிலை இடித்துப் பின் அதன் சொத்துக்களை கொள்ளையடித்து, 50,000 அப்பாவி மக்களின் உயிரை மாய்த்துச் சென்றார். .[2]
கி பி 14ஆம் நூற்றாண்டின் முடிவில் (1297 -1300) தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைகள் பதான் மாவட்டத்தின் அங்கில்வாரா நகரத்தை சீரழித்தும், சோமநாதர் கோயிலை இடித்தும், குஜராத்தை தில்லி சுல்தானகத்தில் இணைத்தார். இராஜபுத்திர இசுலாமிய ஆளுநர் அகமது ஷா அகமதாபாத் நகரை நிறுவி, 1411 முதல் 1442 முடிய குஜராத்தை ஆண்டார். பின்னர் 1576 முடிய தன்னாட்சியுடன் விளங்கிய குஜராத் சுல்தானகம், அக்பர் காலத்தில் மொகாலாயப் பேரரசில் இணைக்கப்பட்டது. சூரத் துறைமுகம் மொகலாயர் காலத்தில் சிறப்புடன் விளங்கியது. பின்னர் குஜராத்தின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளை மராத்தியர்கள் கைப்பற்றி 18ஆம் நூற்றாண்டு முடிய ஆண்டனர். சௌராட்டிர தீபகற்பம், கட்ச் பகுதிகளை உள்ளூர் சுதேச சமஸ்தான பிரித்துக் கொண்டு ஆண்டனர். மராத்தியர்களுக்கும், கம்பெனி ஆட்சியாளர்களுக்கும் 1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் தோற்ற மராத்தியப் பேரரசின் படைத்தலைவர்களான பேஷ்வாக்கள், மராத்தியப் பேரரசின் குஜராத் பகுதிகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு தன்னாட்சியுடன் ஆண்டனர். பரோடா அரசு மற்றும் பவநகர் அரசுகள், இந்தியப் பிரிவினை முடிய குஜராத்தின் பெரும் பகுதிகளை ஆண்டனர்.
குஜராத்தின் போர்பந்தரில் பிறந்த மகாத்மா காந்தி, பிரித்தானிய காலனி ஆட்சிக்கு எதிராக இந்திய விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்தி, இந்தியாவின் விடுதலைக்கு வழிவகுத்தார்.[3]
மும்பை மாகாணத்தில் இருந்த குஜராத், 1960இல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் பொழுது, குஜராத் தனி மாநில உரிமை பெற்றது.
1960 முதல் 1995 முடிய குஜராத் மாநிலத்தை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. பின்னர் 1995 முதல் பாரதிய ஜனதா கட்சி குசராத்து மாநிலத்தின் ஆளும் சக்தியாக மாறியது.
பாகவத புராணம் மற்றும் மகாபாரத காவியத்தின் படி, கிருட்டிணன் பிறந்த யாதவ குலத்தினர்கள் குஜராத்தின் சௌராட்டிரா கற்பத்தின் கடற்கரையில் துவாரகை நகரை நிறுவி ஆண்டனர்.
5.000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரீகத்தின் ஹரப்பா குடியிருப்புகள், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் லோத்தல் மற்றும் தோலாவிரா பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரீக காலத்தில் லோத்தல் முக்கிய துறைமுகமாக விளங்கியது.
அசோகர் கல்வெட்டுக்கள், கிர்நார் மலை மற்றும் ஜூனாகத் நகரில் உள்ளது. அசோகரின் பேரன் சந்திரகுப்த மௌரியர் குஜராத்தை கைப்பற்றி புஷ்யமித்திரனை சௌராட்டிரா நாட்டிற்கு ஆளுனராக நியமித்தார். ஜூனாகத் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு புஷ்யமித்திரன் கி மு 322 முதல் 294 முடிய ஆண்டார். அசோகரது ஆணைகளை பவநாத் அருகே உள்ள கிர்நார் மலை மற்றும் ஜூனாகத் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டள்ளது.
இந்தோ-பார்த்தியப் பேரரசை நிறுவிய பேரரசர் கோண்டபோரஸ் , கிறித்தவ திருத்தூதரான தாமசுடன் குஜராத்திற்கு கடல் வழியாக வருகை தந்தார்.[4][5]
பேரரசர் அசோகர் காலத்திய ஜூனாகத் மற்றும் கிர்நார் மலையில் அசோகரின் கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றது. கிமு முதல் நூற்றாண்டிலிருந்து 300 ஆண்டுகள் வரை சகர்கள் எனும் மேற்கு சத்ரபதிகள் குஜராத் வரலாற்றில் முக்கிய இடம் வகித்தனர். மேற்கு சத்ரபதியின் முதலாம் ருத்திரதாமன் குஜராத்தின் பெரும் பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர்.
கிபி இரண்டாம் நூற்றாண்டில் சாதவாகனர் குல கௌதமிபுத்ர சதகர்ணி மேற்கு சத்திரபதிகளை வென்று குஜராத்தின் சில பகுதிகளை கைப்பற்றி ஆண்டார்.[6] வல்லபி நகரத்தை தலைநகராகக் கொண்ட மைத்திரகர்கள் கிபி 475 முதல் 767 முடிய ஆண்டனர். கூர்ஜர-பிரதிகாரர்கள் கி. பி 650–1036 முடிய குஜராத்தை ஆண்டனர்.
எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தென்னிந்தியாவின் சாளுக்கியர்கள் குஜராத்தின் சில பகுதிகளை ஆண்டனர். அரேபிய இசுலாமியர்களின் உமையா கலீபகம், மேற்கில் எசுப்பானியம் முதல் கிழக்கில் ஆப்கானித்தான் மற்றும் பாகிஸ்தான் வரை விரிவு படுத்திய போது, குஜராத் பகுதியை, சாளுக்கியப் பேரரசர் இரண்டாம் விக்கிரமாதித்தியனின் படைத்தலைவர் புலிக்கேசி, அரேபியப் படைகளிடமிருந்து குஜராத்தை காத்தார்.
எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பரத கண்டத்தின் தெற்கில் இராஷ்டிரகூடர்கள், வடமேற்கில் கூர்ஜர-பிரதிகார்கள், கிழக்கில் பாலர்கள் இணைந்த மூன்று பேரரசுகளின் கன்னோசி முக்கோணக் காலம் துவங்கியது. இம்முக்கோண காலத்தில் குஜராத்தின் வடக்குப் பகுதிகள் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசின் கீழும், தெற்கு குஜராத்தின் பகுதிகள் இராஷ்டிரகூடர்களின் ஆளுகையின் கீழ் இருந்தன.[7] இராஷ்டிரகூடர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், குஜராத்தின் தெற்கு பகுதிகளை மேலைச் சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலப்பன் கைப்பற்றி ஆண்டார்.[8]
அங்கில்வாரா நகரத்தை தலைநகராகக் கொண்டு சோலாங்கிப் பேரரசர்கள் [9] குஜராத்தை 960 முதல் 1243 முடிய ஆண்டனர். இந்தியத் துணைக் கண்டத்தின் கடல்சார் வணிக மையமாக குஜராத்தின் துறைமுகங்கள் விளங்கியது. 1026இல் ஆப்கானித்தானின் கஜினி முகமதுவின் இந்தியப் படையெடுப்பின் போது குஜராத்தின் புகழ் பெற்ற சோமநாதர் கோயிலை இடித்து, அதன் செல்வங்களை கொள்ளையிட்டுச் சென்றான்.
1243க்குப் பின்னர் சோலாங்கிப் பேரரசு வீழ்ச்சியடைந்த போது, இராஜபுத்திர வகேலா குல மன்னர்களால் குஜராத் ஆளப்பட்டது. தக்காணத்தின் தேவகிரியை தலைநகராகக் கொண்ட தேவகிரி யாதவப் பேரரசின் கீழ் வகேலா குல மன்னர்கள் 1243 முதல் 1304 குஜராத்தின் சௌராட்டிர தீபகற்ப பகுதிகளை ஆண்டனர்.
வகேலா குல மன்னர் முதலாம் கர்ணதேவன் குஜராத்தின் இறுதி இந்து மன்னராக இருந்தார். 1297இல் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைகள் குஜராத்தை கைப்பற்றி ஆண்டனர்.
கர்ணதேவனின் வீழ்ச்சிக்குப் பின்னர், 1758இல் மராத்தியர்கள் குஜராத் கைப்பற்றும் வரை, 1297 முதல் 1758 முடிய இசுலாமிய தில்லி சுல்தான்களும், முகலாயர்களின் ஆட்சிப் பகுதியில் 400 ஆண்டுகள் குஜராத் இருந்தது. பரூச், சூரத், காம்பத் போன்ற துறைமுக நகரங்கள் செழிப்புடன் விளங்கியது.
தில்லி சுல்தானகத்தின் குஜராத் ஆளுனர் ஜாபர் ஷா, தன்னாட்சியுடன் கூடிய குஜராத் சுல்தானகத்தை 1407ல் நிறுவினார். ஜாபர் ஷா மகன் அகமது ஷா சபர்மதி ஆற்றாங்கரையில் தனது பெயரில் அகமதாபாத் எனும் புது தலைநகரத்தை நிறுவி குஜராத்தை ஆண்டார். 1573ல் அக்பர் குஜராத்தை கைப்பற்றும் வரை குஜராத் சுல்தான்கள் ஆண்டனர்.
முகமது ஷாவின் வழித்தோன்றலான சிக்கந்தர் ஷாவின் கொலைக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த குஜராத் சுல்தான், அக்பரின் படைகளால் வெல்லப்பட்டதால் குஜராத் சுல்தானகத்தின் 200 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. குஜராத் மொகலாயப் பேரரசில் இணைக்கப்பட்டது.
குஜராத்தை மையமாகக் கொண்ட இந்தியாவின் மேற்கு பகுதிகளின் ஆளுநர்களாக இருந்த மொகலாயப் பேரரசின் இளவரசர்களில் முராத் பக்ஷ், ஷாஜகான், தாரா சிக்கோ, அவுரங்கசீப், முகம்மது ஆசாம் ஷா புகழ் பெற்றவர்கள். 1758இல் மராத்தியர்கள் குஜராத்தை கைப்பற்றி, குஜராத்தில் இசுலாமிய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
17ஆம் நூற்றாண்டின் நடுவில் முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த காலத்தில், சத்ரபதி சிவாஜி தலைமையிலான மராத்தியர்கள் தங்களின் ஆட்சி நிலப்பரப்புகளை வடக்கில் குஜராத், இராஜஸ்தான், அரியானா வரை விரிவு படுத்தினர்.
சிவாஜியின் மறைவிற்குப் பின்னர் பேஷ்வாக்கள் மராத்தியப் பேரரசின் பகுதிகளை பிரித்துக் கொண்டு ஆண்டனர். 1803–1805இல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர், குஜராத்தின் பெரும்பகுதிகளை ஆங்கிலேய கம்பெனி ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட போதிலும், மராத்திய பேஷ்வா கெயிக்வாட் குல பரோடா அரசர்கள் பிரித்தானியாவின் இந்திய அரசின் துணைப்படைத் திட்டத்தில் சேர்ந்து, பரோடா அரசை 1949 முடிய ஆண்டனர்.
குஜராத் கடற்கரைப் பகுதிகளான தாமன் மற்றும் தியூ, தாத்ரா மற்றும் நகர் அவேலி பகுதிகளில் போர்த்துகீசியர்கள் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்தை நிறுவினர். பின்னர் ஆங்கிலேய பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் பரோடா போன்ற சுதேச சமஸ்தானங்களைத் தவிர தெற்கு குஜராத்தின் அகமதாபாத், பரூச், கைரா, பஞ்சமகால், கட்ச் மற்றும் சூரத் பகுதிகளை 1818 முதல் 1947 முடிய தங்கள் நேரடி ஆட்சியில் வைத்துக் கொண்டனர்.
இந்திய விடுதலை இயக்கத்தில் வல்லபாய் படேல், கே. எம். முன்ஷி, மொரார்ஜி தேசாய், யு. என். தேபர், மகாதேவ தேசாய், போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் மகாத்மா காந்தியைப் பின்பற்றி உப்புச் சத்தியாகிரகம் போன்று, பிரித்தானிய இந்தியாவிற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டனர்.
இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1948இல் குஜராத்தை இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரித்தனர். கட்ச் மாவட்டம் மற்றும் சௌராட்டிர தீபகற்ப பகுதிகளை இணைத்து சௌராஷ்டிர மாகாணம் நிறுவப்பட்டது. சௌராஷ்டிர மாகாணத்தின் முதல் முதல்வராக யு. என். தேபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத்தின் எஞ்சிய பகுதிகள் மும்பை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
1956இல் சௌராஷ்டிர மாகாணத்தை மும்பை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
1 மே 1960இல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கும் போது, மும்பை மாகாணத்துடன் இருந்த குஜராத்தின் பகுதிகள், அகமதாபாத் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய குஜராத் மாநிலம் உதயமானது.
கட்ச் மாவட்டத்தின் அஞ்சார் பகுதியில் 1956இல் உண்டான பெரும் நிலநடுக்கத்தால் அஞ்சார் நகரம் அழிந்தது. இந்தியப் பிரிவினைக்கு பின் பாகிஸ்தான் நாட்டில் வசித்த இந்து சிந்தி மக்களின் புகழிடமாக குஜராத்தின் காந்திதாம், சர்தார் நகர், குபேர நகரம் விளங்கியது.
132 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டமன்றம் அமைக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ஜீவராஜ் நாராயண மேத்தாவின் தலைமையில் முதல் குஜராத் சட்டமன்றக் கூட்டம் கூடியது. பின்னர் முதலமைச்சாராக பதவியேற்ற பல்வந்தராஜ் மேத்தா 1965 இந்திய-பாகிஸ்தான் போரின் போது, இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியான கட்ச் பகுதியை பார்வையிட விமானத்தில் சென்ற போது, எதிரிகளால் விமானம் சுடப்பட்டு இறந்தார்.[10][11]
1969இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி. மொரார்ஜி தேசாய் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் (நிறுவனம்) என்றும் இந்திராகாந்தி தலைமையில் இந்திய தேசிய காங்கிரசு (ஐ) என இரண்டாக பிளந்தது.[12] அதே நேரத்தில் குஜராத் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் கிளைகளைப் பரப்பி வலுவடைந்தது.
1969இல் செப்டம்பர் முதல் அக்டோபர் முடிய குஜராத்தில் பெரிய அளவில் கலவரம் பரவி மனித உயிர்களும், உடமைகளும் சேதமடைந்தது. 1971 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரசு கட்சி குஜராத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது. குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபாத் நகரத்திலிருந்து காந்திதாம் நகரத்திற்கு 1971இல் மாற்றப்பட்டது.[13]
மார்ச் 1976இல் இந்திராகாந்தி நெருக்கடி நிலை நடைமுறை படுத்தியதன் விளைவாக, குஜராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நிறுவப்பட்டதால், குஜராத்தை ஆண்டு கொண்டிருந்த ஜனதா மோர்ச்சா அரசு பதவியேற்ற ஒன்பது மாதங்களில் கலைக்கப்பட்டது. டிசம்பர் 1976இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாதவ் சிங் சோலாங்கி முதவ்ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நூற்றுக்கணக்க்கானவர்களை கொன்ற மச்சு அணை உடைப்பால், ஜனதா கட்சியின் பாபுபாய் படேல் தலமையிலான அரசு மோர்பிக்கு இடம் மாற்றப்பட்டது.[14]
1980இல் ஜனதா மோர்ச்சா அரசை நீக்கி விட்டு குடியரசுத் தலவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. பின்னர் 1980 முதல் மாதவ சிங் சோலாங்கி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் கட்சி மார்ச் 1990 முடிய குஜராத்தை ஆண்டது.
அக்டோபர் 1990இல் ஜனதா கட்சியின் சிமன்பாய் படேல் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது. பிப்ரவரி 1994இல் சிமன்பாய் படேல் மறைவுக்குப் பின் முதல்வராக பதவியேற்ற சபில்தாஸ் மேத்தா, மார்ச் 1995 முடிய ஆட்சியில் இருந்தார்.
1994இல் சூரத் நகரில் பிளேக் நோய் பரவி 52 பேர் இறந்தனர்.[15]
1995இல் கேசுபாய் படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி குஜராத்தின் ஆட்சியை முதன் முறையாக கைப்பற்றியது. எட்டு மாதங்களில் சங்கர்சிங் வகேலா தலைமையில் குஜராத் சட்டமன்ற பாரதிய ஜனதா கட்சி இரண்டாக பிரிந்ததால், கேசுபாய் படேல் பதவி விலக நேர்ந்தது. சங்கர் சிங் வகேலா தலைமையிலான புதிய இராஷ்டிரிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. 1998இல் சங்கர்சிங் வகேலாவிற்கு வழங்கிய ஆதரவை,காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டதால், வகேலா ஆட்சி கலைக்கப்பட்டது. 1998இல் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் கேசுபாய் படேல் குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16]
1998இல் உண்டான கடும் புயலில் கண்ட்லா துறைமுகம், சௌராட்டிரம் மற்றும் கட்ச் பகுதிகள் கடும் சேதமடைந்தது. [17]
26 சனவரி 2001இல் குஜராத்தின் புஜ் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட கடும் புஜ் நிலநடுக்கத்தால், 20,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இரண்டு இலட்சம் மக்கள் காயம் அடைந்தனர். 2001இல் உடல் நலம் குன்றிய கேசுபாய் படேலுக்கு மாற்றாக நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவியேற்றார்.[18][19][20] 2002இல் கோத்ரா தொடருந்து எரிப்பால் குஜராத் முழுவதும் வன்முறை மூண்டது.[21] செப்டம்பர், 2002இல் காந்திநகரில் உள்ள அக்சர்தாம் கோயிலில் தீவிரவாதிகள் புகுந்து சுட்டதில் பலர் பலியானர்கள்.[22] 2002 குஜராத் சட்டமன்ற தேர்தலில் வென்று நரேந்திர மோடி மீண்டும் குஜராத் முதல்வரானார்.
சூலை 2008இல் அகமதாபாத் நகரத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 56 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.[23][24][25]
2007 மற்றும் 2012 குஜராத் சட்ட மன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 2014இல் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்று, நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி வென்று, நரேந்திர மோடி பிரதமராக ஆனதால், குஜராத்தின் முதல்வராக ஆனந்திபென் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[26] ஆனந்திபென் படேல் ஆகஸ்டு 2016இல் முதல்வர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, 7 ஆகஸ்டு 2016இல் விஜய் ருபானி குஜராத் மாநில முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[27][28]
Gujarat : The State took its name from the Gujara, the land of the Gujjars, who ruled the area during the 700's and 800's.
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite book}}
: Check date values in: |accessdate=
(help)