கிபி ஐந்தாம் நூற்றாண்டில், சமண சமயத்தின் தலைநகரம் எனப்போற்றப்படும் பண்டைய வல்லபி நகரத்தில் சமண அறிஞர்களின் மாநாடு நடைபெற்றது.[3] சௌதா வம்ச மன்னர் வனராஜா ஆட்சியின் போது (கிபி 720-780), வல்லபி நகரத்தில் சமணத் துறவி சிலாகுணா சூரி தலைமையில் கூடிய துறவிகள், சமண சமயத்தின் ஒழுங்கு முறைப்பட்ட சாத்திரங்கள் தொகுக்கப்பட்டன.
குஜராத் மாநிலம் கி பி 6-7ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமணக் கோயில்கள் கொண்டிருந்தது. இக்கோயில்கள் சோலாங்கிப் பேரரசர்கள் மற்றும் இராசபுத்திரசௌதா வம்சத்தவர்கள் பேணிக்காத்தனர்.[4] 13-ஆம் நூற்றாண்டில் வடக்கு குஜராத் பகுதிகள், சமண சமயத்தின் முக்கிய மையமாக விளங்கியது.[5]
முதன் முதலில் குஜராத்தில் அறியப் பட்ட இலக்கியமான பரதன் – பாகுபலி இராஜா எனும் சரித்திர வரலாற்று நூலை எழுதியது ஒரு சமணத் துறவி ஆவார். குஜராத் சமண வரலாற்றில் ஆச்சாரியர் ஹேமசந்திர சூரி மற்றும் அவர் மாணவர் சோலாங்கிப் பேரரசர்குமாரபாலன் ஆகியோர் முக்கியமானவர்கள்.