குஞ்சாக்கோ போபன் Kunchacko Boban | |
---|---|
![]() 2008இல் குஞ்சாக்கோ போபன் | |
பிறப்பு | 2 நவம்பர் 1976 (வயது 48) [1] ஆழப்புழா, கேரளம், இந்தியா |
மற்ற பெயர்கள் | சாகோச்சன்[2] |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1981 (குழந்தை நட்சத்திரம்); 1997–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | பிரியா ஆன் சாமுவேல் (தி. 2005) |
பிள்ளைகள் | 1 |
உறவினர்கள் |
|
குஞ்சாக்கோ போபன் (Kunchacko Boban) (பிறப்பு 2 நவம்பர் 1976) ஓர் இந்திய நடிகரும் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். [3] இவரது ரோமியோ பாத்திரங்கள் காரணமாக இவர் “சாக்கோச்சன்” என்றும், “சாக்லேட் பாய்” என்றும் அழைக்கப்படுகிறார்.[4] [5] மலையாளத் திரையுலகில் பணிபுரியும் இவர், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் குஞ்சாக்கோ குடும்பத்தைச் சேர்ந்தவர்.[6] தனது தந்தை போபன் குஞ்சாக்கோ தயாரித்த தன்யா (1981) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் அறிமுகமானார்.[7] [8]
இவர் 1997 ஆம் ஆண்டு பாசிலின் அனியாதிபிராவு என்ற காதல் திரைப்படத்தில் நடிகை சாலினிக்கு இணையாக ஒரு முன்னணி பாத்திரத்தில் அறிமுகமானார். அதுவரை அதிக வசூல் செய்த மலையாளப் படமாக இது இருந்தது.[9] [10] [11] மோகன்லால் மற்றும் மம்மூட்டி நடித்த ஹரிகிருஷ்ணன்ஸ் (1998) படத்தில் இவர் ஒரு சிறு பாத்திரத்தில் தோன்றினார். இது அந்த ஆண்டின் வசூலில் சிறந்த படமாக அமைந்தது. குஞ்சாக்கோவும் சாலினியும் சேர்ந்து நட்சத்திரத்தரட்டு (1998) , நிரம் (1999) மற்றும் பிரேம் பூஜாரி (1999) ஆகிய படங்களில் மீண்டும் இணைந்தனர்.[12] நிரம் (2000) அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மலையாளப் படங்களில் ஒன்றானது. அதற்குள் இவர் மலையாளத் திரையுலகில் ஒரு “காதல் கதாநாயகன்” பிம்பத்தை உருவாக்கிவிட்டார். இருப்பினும், நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக (2001) என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் கிராமவாசியாகவும், கஸ்தூரிமான் (2003) படத்தில் கடனில் மூழ்கிய குடும்பத்தின் மகனாகவும் நடித்திருந்தார். 2000 களின் நடுப்பகுதியில் சில தோல்விகளுக்குப் பிறகு இவரது வாழ்க்கை பின்னடைவை சந்தித்தது. 2006-ல் திரைப்படங்களில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு வியாபாரத்தில் இறங்கினார்.
இவர் 2009 இல் குலுமல்: தி எஸ்கேப் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் மீண்டும் நடித்து வணிக ரீதியாக வெற்றி பெற்றார்.[13] மறுபிரவேசத்திற்குப் பிறகு, குஞ்சாக்கோ தனது “சாக்லேட் பாய் ” மற்றும் “காதல் நாயகன்” என்பதை இமேஜை முற்றிலுமாக மாற்றினார். மேலும் இவர் பல்வேறு வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து ஒரு நடிகராக தனது பன்முகத்தன்மையை நிரூபித்தார்.[14] மறுபிரவேசத்தில், வணிகரீதியாக வெற்றிபெற்ற படங்களின் மூலம் தனது நட்சத்திரத் தகுதியை உயர்த்தி, மலையாளத் திரைப்படத்துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டார்.[15] டிராஃபிக் (2011), ஹவ் ஓல்ட் ஆர் யூ (2014), டேக் ஆஃப் (2017), வேட்டா (2016), வைரஸ் (2019), அஞ்சாம் பத்திரா (2020), நயாட்டு (2021), படா (2022) மற்றும் நா தான் கேஸ் கொடு (2022) போன்ற விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்ட படங்களில் இவரது பாத்திரங்கள் பரவலாகப் பாராட்டப்பட்டன. இவர் தனது நடன திறமைக்காகவும் அறியப்படுகிறார்.[16]
2016 ஆம் ஆண்டில், குஞ்சாக்கோ 30 வருட இடைவெளிக்குப் பிறகு உதயா ஸ்டுடியோஸ் மூலம் கொச்சவ்வா பவுலோ ஐயப்ப கோயலோ என்ற நகைச்சுவை நாடகத் திரைப்படத்தைத் தயாரித்தார்.[17]
குஞ்சாக்கோ போபன் தனது ரசிகையும் நீண்ட நாள் காதலியுமான பிரியா ஆன் சாமுவேல் என்பவரை ஏப்ரல் 2, 2005 அன்று எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார்.[18] [19] இவர்களுக்கு ஏப்ரல் 16, 2019 அன்று ஈசாக் என்ற ஒரு மகன் பிறந்தார். [20] [21] [22]
திரைப்படங்கள் மற்றும் வணிகம் தவிர, குஞ்சாக்கோ 2014 ஆம் ஆண்டில் பிரபலங்களின் துடுப்பாட்ட சங்கத்தையும் (சி3) தொடங்கினார். இவர் சி3 அமைப்பின் தலைவராக உள்ளார்.[23]
2015 ஆம் ஆண்டில், இவர் சார்ஜாவில் அல் பசாத் மருத்துவ மையத்தைத் திறந்தார். இது குழந்தை நடத்தை, மன இறுக்கம் மற்றும் வயது வந்தோர் மனநல மருத்துவம் ஆகியவற்றிற்கான ஒப்பீட்டளவில் குறைந்த கட்டண சுகாதார சேவையை வழங்கும் ஒரு மருத்துவ மையமாகும்.[24][25][26]