குடகு ஆரஞ்சு (Coorg orange) என்பது குடகு மாண்டரின் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் கர்நாடகாவின் குடகு பகுதியில் சாகுபடி செய்யப்படும் ஆரஞ்சு வகையாகும். இதற்கு 2006 இல் புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டுகளில், குடகுப்பகுதியில் இந்த ஆரஞ்சு சுமார் 24,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டது. அண்மைய ஆண்டுகளில் சாகுபடி பகுதியானது 2,000 ஹெக்டேருக்கும் குறைவாகவே உள்ளது.[1] குடகு ஆரஞ்சு முக்கியமாகக் குடகு, ஹாசன் மற்றும் சிக்மகளூரூ மாவட்டங்களில் 150 ஆண்டுகளுக்கும் மேலாகக் காபி தோட்டங்களில் இரண்டாம் நிலை பயிராகப் பயிரிடப்படுகிறது.[2]
குடகு ஆரஞ்சு மனிதனால் உருவாக்கப்பட்ட மாண்டரின் கலப்பினங்களாகக் கருதப்படுகிறது (சிட்ரஸ் ரெட்டிகுலட்டா ).[3] பச்சை-மஞ்சள் நிறத்தில், இறுக்கமான தோலையும், இனிப்பு-புளிப்புச் சுவையையும் இந்த ஆரஞ்சுப் பழங்கள் கொண்டிருக்கின்றன. நாக்பூர் ஆரஞ்சு தளர்வான தோலினையும் இனிப்பு சுவையினையும் கொண்டவை.[1] குடகு ஆரஞ்சு மற்ற வகைகளுடன் ஒப்பிடும்போது நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.[4] நன்கு நீர்வடியும் அதிக மழை பெய்யும் மலைப்பாங்கான நிலப்பரப்பானது இந்த வகையின் தனித்துவமான பண்புகளுக்கான காரணங்களாகக் கருதப்படுகிறது.[5]
குடகு ஆரஞ்சு உற்பத்தியானது அண்மைய ஆண்டுகளில் நோய் மற்றும் நாக்பூர் ஆரஞ்சு உற்பத்தி அதிகரிப்பின் காரணமாகக் குறைந்துள்ளது.[6] ஒவ்வொரு செடியின் விளைச்சலும் சுமார் 10 கிலோவாகக் குறைந்துள்ளது. இது ஒரு காலத்தில் 50 கிலோவுக்கு மேல் இருந்தது.[1] பழத்தின் சராசரி உற்பத்தி 45,000 டன்களுக்கு மேல் உள்ளது.[7]