குணா | |
---|---|
திரைப்பட விளம்பர சுவரொட்டி | |
இயக்கம் | சந்தான பாரதி |
தயாரிப்பு | சுவாதி சித்ரா இன்டர்நேஷனல் |
வசனம் | பாலகுமாரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ் |
ஒளிப்பதிவு | வேணு |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | 05 நவம்பர் 1991 |
ஓட்டம் | 167 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குணா (Gunaa) 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேகா, ரோஷினி, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு முதலில் மதிகெட்டான் சோலை எனும் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு பின்னர் குணா என்ற பெயரே இறுதியாக வைக்கப்பட்டது. இத்திரைப்படம் பெரும்பாலான காட்சிகள் கொடைக்கானல் மலை காடுகளில் படமாக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மலை குகையில் படமாக்கப்பட்ட காட்சியினால் பின்னாளில் அப்பகுதி குணா குகை என்றே அழைக்கப்படுகிறது.[2]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மன நோயாளியான குணா (கமல்ஹாசன்) கவிதை ஆற்றல் மிக்கவராவார்.விலை மாதுவாக தொழில் செய்யும் தனது தாயையும் தனது குடும்பத்தாரையும் வெறுக்கும் குணா கனவு தேவதையொருவரைப் பற்றியே உச்சரித்துக் கொண்டிருக்கவும் செய்கின்றார். அப்பெண்மணிக்கு அபிராமி எனப் பெயரிட்டு அவர் தனக்குக் காதலியாகக் கிடைப்பாரென்றும் நம்பிக்கையுடன் இருக்கின்றார் குணா. அதே சமயம் அவரது தீய மனம் படைத்த நண்பனால் கோயில் உண்டியல் பணத்தினைக் கொள்ளையடிக்கவும் ஒப்புக் கொள்கின்றார். அக்கோயிலுள் ஒரு அழகிய பெண்ணையும் காண்கின்றார் அவரே தனது அபிராமி என நினைத்து தன்னுடன் கடத்திச் செல்கின்றார். ஒரு மலை உச்சியில் தங்கியிருந்து அவர் தன் கனவுக்கன்னி எனக்கருதிய அபிராமியை மிகுந்த பாசத்துடன் கவனித்துக்கொள்கின்றார்.
இவர் காட்டும் அன்பைப் பாராது பலமுறை அந்தப் பெண் அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கின்றார். ஆனாலும் தோற்றுப் போகின்றார். இதற்கிடையில் அப்பெண்ணின் தந்தையின் நண்பன் அப்பெண்மணியின் சொத்துக்கள் அனைத்தினையும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு அவளைக் கொலை செய்ய முயல்கின்றான். ஆனால் குணா அவளைக் காப்பாற்றி மலைக் குகைக்குள் கொண்டு சேர்க்கின்றான். இதற்கிடையில் இருவருக்கும் காதல் மலர்கின்றது. ஆனால் அப்பெண்மணியைத் தேடி வரும் காவல்துறை அதிகாரிகள் குணாவை அழைக்கின்றனர் ஆனால் அவன் அவர்களின் பேச்சுக்களைக் கேட்க மறுக்கின்றான். அதே சமயம் அங்கு வரும் குணாவின் காதலியின் சொத்துக்களை அடைய விரும்பியவன் அவளைச் சுட்டு வீழ்த்துகின்றான். தனது காதலி மடிந்து கிடப்பதைப் பார்த்த குணா அவள் உடலைத் தூக்கியவாறு மலையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கின்றார்.
இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி ஆவார்.
எண் | பாடல் | பாடியவர்(கள்) |
---|---|---|
1 | கண்மணி அன்போடு | கமல்ஹாசன், எஸ். ஜானகி |
2 | அப்பன் என்றும் | இளையராஜா |
3 | பார்த்த விழி | கே. ஜே. யேசுதாஸ் |
4 | உன்னை நான் | கமல்ஹாசன், எஸ். ஜானகி |
5 | உன்னை நான் (சிறியது) | எஸ். வரலட்சுமி |
39வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் (1992)