குர்பச்சன் சிங் ரந்தாவா (Gurbachan Singh Randhawa) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். 1939 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசு நகரத்திற்கு அருகிலுள்ள நங்கிலி கிராமத்தில் இவர் பிறந்தார். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு நாட்களில் நான்கு தேசிய சாதனைகளை படைத்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டெகாத்லான் எனப்படும் பத்துவகைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.[1] 1960 மற்றும் 1964 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்கு போட்டியில் 110 மீ தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல் மற்றும் பத்துவகை போட்டி ஆகியவற்றில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்று விளையாடினார். 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் 110 மீட்டர் தடை தாண்டல் போட்டியில் 14.07 வினாடிகளில் பந்தயத் தொலைவைக் கடந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இவரது சாதனைகளை பாராட்டி இந்திய அரசு இவருக்கு 1961 ஆம் ஆண்டில் முதலாவது அருச்சுனா விருதை வழங்கி கௌரவித்தது. குர்பச்சன் சிங் ரந்தாவாவிற்கு 2005 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டது.[2] இவரது வாழ்க்கை வரலாறை 'உத்னா பாசு' என்ற பெயரில் நவ்தீப் சிங் கில் எழுதியுள்ளார்.