குவாரிச் வேல்சு அல்லது எச்.ஜி. குவாரிச் வேல்சு (பிறப்பு: 1900 – இறப்பு: 1981); ஆங்கிலம்: Quaritch Wales அல்லது Horace Geoffrey); என்பவர் மலேசிய வரலாற்றில் சிறந்த ஓர் ஆய்வாளராக அறியப் படுகிறார். இவரும் இவருடைய மனைவியார் டோரதி வேல்சு (Dorothy Wales) என்பவரும்; 1936 - 1937-ஆம் ஆண்டுகளில் பூஜாங் பள்ளத்தாக்கு பகுதிகளில் பல அகழ்வாராய்ச்சிகள் செய்தவர்கள்.
டாக்டர் குவாரிச் வேல்சு, கெடாவைச் சுற்றியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட தளங்களை ஆய்வு செய்தவர். இந்தத் தளம் பல நூற்றாண்டுகளாகத் தென்னிந்திய, பௌத்த மற்றும் இந்துத்துவச் செல்வாக்கின் கீழ் இருந்துள்ளதாக அகழாய்வுகளின் மூலமாகக் கண்டுபிடித்தார்கள்.[1]
குவாரிச் வேல்சு; இவரின் மனைவியார் டோரதி வேல்சு; இருவரின் அகழ்வாராய்ச்சிகளினால் பல பௌத்த இந்துக் கோயில்கள் பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் மெர்போக், பெங்காலான் பூஜாங் (Pengkalan Bujang) எனும் இடத்தில் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்ட ஒரு பௌத்தக் கோயில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.[2]
சுங்கை பத்து தொல்பொருள் தளத்தில் 1-ஆம் - 3-ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய பல இந்து - பௌத்த கோயில்களின் இடிபாடுகள் இருப்பதும் இவர்கள் மூலமாகத்தான் வெளியுலகிற்குத் தெரிய வந்தது.
இந்தத் தளம் கி.மு. 535 -ஆம் ஆண்டு வாக்கில் உருவாகி இருக்கலாம் எனும் கருத்துகளையும் முன் வைத்தார்கள். இங்கு கிடைக்கப் பெற்ற மண்பானைகள், மண்சட்டிகள், கப்பல் கம்பங்கள், கப்பல் தூண்கள்; 2600 ஆண்டுகள் பழைமையானவை என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்[3]
குவாரிச் வேல்சு, ஐக்கிய இராச்சியம், கேம்பிரிட்ச் குயின்ஸ் கல்லூரியில் (Queens' College, Cambridge) கல்வி பயின்றவர். பின்னர் 1924 முதல் 1928 வரை சயாம் நாட்டின் மன்னர்கள் ராமா VI (Rama VI) மற்றும் ராமா VII (Rama VII) ஆகியோருக்கு ஆலோசகராகப் பணி புரிந்தார்.[4]
சயாம் நாட்டைப் பற்றி இரு நூல்கள் எழுதி உள்ளார்.