கூர் பார்வை (Gaze) ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் உருவத்தை அவரது வடிவமைப்பை இரசிக்கும் வண்ணம் பார்ப்பது ஆகும். இந்தச் சொல்லை, தான் பார்க்கப்படுவதை உணர்ந்து கவலைப்படும் நிலையைக் குறிக்க, உளவியலாளர் ஷாக் லகன் பரவலாக்கினார். தான் காணப்படும் பொருளாவதால் தனது தன்னாட்சி குறைபடுவதாக உணரும் உளவியல் நிகழ்பாடு என இதை லகன் விளக்கினார். இது கண்ணாடி முன்பான குழந்தையின் மனநிலையை ஒத்ததாகவும் விளக்குகிறார்; முதன்முதலாக கண்ணாடியின் முன்பு தன்னைப் பார்த்தபின்பே குழந்தை தனக்கு ஓர் தோற்றம் இருப்பதை உணர்கின்றது. லகனின் கூற்றுப்படி, கூர்பார்வையால் ஏற்படும் விளைவை நாற்காலி அல்லது தொலைக்காட்சித் திரை மூலமாகவே ஏற்படுத்தலாம்; இது அப்பொருள் கண்ணாடி போல பிரதிபலிப்பதாக கருத்தில்லை; எந்தப் பொருளின் இருப்பையும் உணர்ந்துள்ள விழிப்புணர்வே இதற்குக் காரணமாகும்.
கூர்பார்வை குறித்த கோட்பாட்டை இழான் பவுல் சார்த்ர காலத்திலிருந்தே இருத்தல் கொள்கையாளர்களும் தோற்றப்பாட்டியலாளர்களும் விவாதித்துள்ளனர்.[1] அதிகார உறவுகளுக்கும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்குமான இயக்காற்றலை விளக்க ஃபூக்கோ கூர்பார்வை கோட்பாட்டை ஒழுங்குமுறையும் தண்டிப்பும் என்ற நூலில் பயன்படுத்தியுள்ளார். இதேபோல ஜாக்கஸ் தெரிதாவும் தனது தி அனிமல் தட் தேர்போர் ஐ யாம் என்ற நூலில் விலங்குகளுக்கும் மாந்தர்களுக்குமானத் தொடர்பை கூர்பார்வை மூலமாக விளக்கியுள்ளார். திரைப்படங்களில் பாலுறவுக் காட்சிகளில் ஒளிபிடி கருவி பொதுவாக பெண்ணின் உடலையும் ஆணின் முக உணர்ச்சிகளையும் காட்டுவதில் கூர்பார்வை கோட்பாடு விளங்குகின்றது.[2] திரைப்படத்தைத் தவிர மற்ற தொழினுட்ப வடிவங்களிலும் கூர்பார்வையைக் காணலாம். ஒளித விளையாட்டுக்கள், சிறுவர் சித்திரக்கதைகளிலும் கூட பெண்களின் முகத்தை விட மணற்கடிகை வடிவம் வலியுறுத்தப்படுகின்றது.[3]