Kulim | |
---|---|
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°21′N 100°32′E / 5.350°N 100.533°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
நகரத் தோற்றம் | 1850களில் |
நகரத் தகுதி | 2001[1] |
அரசு | |
• யாங் டி பெர்துவா | துவான் அப்துல் அஜீஸ் அப்துல் கனி AMK, BCK |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 2,28,662 |
• அடர்த்தி | 590/km2 (1,500/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 09xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-04 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | K |
இணையதளம் | http://www.mpkk.gov.my |
கூலிம் நகரம் என்பது (மலாய்: Kulim; ஆங்கிலம்: Kulim; சீனம்: 居林) மலேசியா, கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் கூலிம் நகரமும் ஒன்றாகும்.
18-ஆம் நூற்றாண்டில் தாய்லாந்தில் உள்ள பட்டாணி எனும் பகுதியில் இருந்து மலாய்க்காரர்கள் இங்கு வந்து குடியேறினார்கள். 18-ஆம் நூற்றாண்டில் ஈயம் கண்டுபிடிக்கப் பட்டதும் நூற்றுக்கணக்கான சீனர்களும் குடியேறினர்.
கூலிம் என்பது ஒரு மரத்தின் பெயர் ஆகும். அந்த மரத்தின் அறிவியல் பெயர்: Scorocarpus Borneensis Becc. கூலிம் மாவட்டம் 15 சிறிய துணை மாவட்டங்களை உள்ளடக்கியது.
18-ஆம் நூற்றாண்டில் தாய்லாந்தில் இருக்கும் பட்டாணி எனும் இடத்தில் இருந்து 100 மலாய்க்காரர்கள் இங்கு வந்து குடியேறினர். 19-ஆம் நூற்றாண்டில் இங்கு ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
1890-இல் 400 சீனத் தொழிலாளர்கள் கூலிம் ஈயச் சுரங்கங்களில் வேலை செய்யத் தொடங்கினர். முதன் முதலில் கூலிமில் உள்ள பெலாக்காங் தாபோக் எனும் இடத்தில் தான் குடியேற்றம் நடந்தது.
தாமான் துங்கு புத்ரா, கம்போங் புக்கிட் பெசார், காராங்கான், தெராப், கிளாங் லாமா போன்ற இடங்களில் பெரிய ஈயச் சுரங்கங்கள் இருந்தன. 1854-இல் எட்டு பெரிய ஈயச் சுரங்கங்கள் இருந்ததாகவும், அவற்றில் 1500 தொழிலாளர்கள் வேலை செய்ததாகவும் வரலாற்றுச் சான்றுகளில் தகவல்கள் கிடைத்து உள்ளன.
1888-ஆம் ஆண்டு கூலிமில் ஒரு கலவரம் நடைபெற்றது. இதை அழகிய முதிர்க் கன்னிப் போர் (Beautiful Nyonya War) அல்லது கூலிம் போர் என்று அழைக்கிறார்கள். மலாய் மொழி, கலாசாரப் பாரம்பரியங்களுடன் வாழும் சீனப் பெண்களை ‘நோஞ்ஞா’ (Nyonya) என்று மலேசியாவில் அழைக்கிறார்கள். ஆண்களை ‘பாபா’ என்று அழைக்கிறார்கள். இவர்கள் பெரானாக்கான் (Peranakan) என்று அழைக்கப் படுகின்றனர்.
கூலிமில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற பேரிளம் பெண்ணுக்காக ஈய சுரங்கத் தலைவர்கள் சண்டை போட்டுக் கொண்டனர். அவர்களுடன் இருந்த வேலைக்காரர்களும் மோதிக் கண்டனர். இதுவே ஒரு பெரிய கலவரமாக மாறியது. சில ஆண்டுகள் வரை இந்த கலவரம் நீடித்தது. இதில் பலர் இறந்தும் போயினர்.
இந்தக் கலவரத்தினால் 1890-இல் பி.இ.மிட்சல் எனும் ஒரு பிரித்தானிய காவல்த் துறை அதிகாரியை கெடா அரசர் நியமனம் செய்தார். பேராக் மாநிலத்தைச் சேர்ந்த லாருட், மாத்தாங், செலாமா, தைப்பிங், போன்ற இடங்களில் இருந்து வந்த ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள்தான் கூலிம் நகரை உருவாகியதாகவும் நம்பப் படுகிறது.
பேராக் மாநிலத்தில் அப்போது இரகசியக் கும்பல்களின் மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. 1850-களில் கீ கின் - ஹாய் சான் இரகசியக் கும்பல்கள் இரண்டுக்கும் இடையே பேராக், தைப்பிங்கில் அதிகாரப் போர் நடந்து வந்தது.
அந்த மோதல்களில் இருந்து தப்பிக்கச் சில ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள் கெடா பக்கமாக வந்தனர். காட்டு வழியாக பினாங்கிற்குச் செல்லும் வழியில் கூலிம் ஆற்றுப் படுகைகளில் தற்செயலாக ஈயத்தைக் கண்டனர். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல அவர்கள் அங்கேயே தங்கி ஈயத் தொழில்களில் ஈடுபட்டனர்.