கெடா, பாலிங் மாவ்ட்டத்தில் கென்சியூ பெண்பிள்ளைகள் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
மலேசியா கெடா தாய்லாந்து | |
700 (2016) | |
தாய்லாந்து | 300 |
மொழி(கள்) | |
கென்சியூ மொழி, மலாய் மொழி தாய்லாந்து மொழி | |
சமயங்கள் | |
பழங்குடியினர் மதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
செமாங், மானிக் மக்கள் |
கென்சியூ மக்கள் (ஆங்கிலம்: Kensiu people; மலாய்: Orang Kensiu; Suku Maniq) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் கெடா, பாலிங் மாவட்டம்; மற்றும் தாய்லாந்தின் சில பகுதிகளில் காணப்படும் செமாங் மக்கள் குழுவைச் சார்ந்த பழங்குடி மக்கள் ஆவார்கள்.
மலேசியப் பழங்குடி மக்களில் முப்பெரும் பிரிவுகள் உள்ளன. அந்தப் பிரிவுகளில் செமாங் (Semang) அல்லது நெகிரிட்டோ மக்கள் (Negrito) என்பவர்கள் மலாய் தீபகற்பத்தில் உள்ள ஒரு பழங்குடி மக்கள் பிரிவினர் ஆகும். [1]இவர்கள் தீபகற்ப மலேசியாவின் வட எல்லைப் பகுதிகளிலும் பேராக், கெடா, பகாங் மாநிலங்களிலும் வாழ்கின்றனர்
கென்சியூ மக்கள் நெகிரிட்டோ மக்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கென்சியூ மக்கள், தீபகற்ப மலேசியாவில் வாழும் பத்தொன்பது மலேசியப் பழங்குடியினர் இனக்குழுக்களில் ஒரு பிரிவினர் ஆகும். அவர்கள் செமாங் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கென்சியூ மக்களின் மொழி கிந்தாக் மொழிக்கு மிக நெருக்கமானது. மற்றொரு மலேசியப் பழங்குடியினர் மக்களான கிந்தாக் மக்களுடன் தங்களின் குடியேற்றப் பகுதிகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மற்றும் நெருக்கமான சமூக-பொருளாதார உறவுகளையும் கொண்டுள்ளனர்.
தீபகற்ப மலேசியாவின் கென்சியூ மக்கள், தாய்லாந்தின் கென்சியூ மக்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். மேலும் மலேசியா-தாய்லாந்து எல்லையைத் தாண்டும் செயல்பாடுகள் அடிக்கடி நிகழ்கின்றன. தீபகற்ப மலேசியாவில் கென்சியூ மக்களின் முக்கிய குடியிருப்பு கெடாவின் பாலிங் மாவட்டத்தில் உள்ளது. கென்சியூ மக்களில் சிலர் பேராக், கிளாந்தான் மாநிலங்களிலும் வாழ்கிறார்கள்.[2]
சில உள்நாட்டு மக்கள் குழுக்களின் இனப் பாரபட்சம்; கென்சியூ மக்களின் வெளித் தொடர்புகளைத் தவிர்க்க காரணமாகவும் அமைந்தது. கென்சியூ மக்களில் பலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் மாற்றங்களும் ஏற்பட்டன. இருப்பினும், அண்மைய காலங்களில் வெளி உலகத்துடனான தொடர்பு சிறிதளவு முன்னேற்றம் கண்டுள்ளது.[3]
கென்சியூ மக்களை நவீன மயமாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள், கென்சியூ மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
கெடா, பாலிங் மாவட்டம், கம்போங் பாரு சியோங் கிராமத்தில் (Kampong Baru Siong) மலேசிய அரசாங்கம் கென்சியூ மக்களுக்கு ஒரு குடியிருப்பு பகுதியைக் கட்டிக் கொடுத்து உள்ளது. அந்தக் கிராமத்தில் ஏறக்குறைய 50 வீடுகள், ஒரு பள்ளிக்கூடம் மற்றும் ஒரு பொது மண்டபம் உள்ளன. இருப்பினும் அந்தச் சிறிய கிராமத்தில் செயல்பாடுகள் மிகவும் குறைவு. பல வீடுகள் இன்றும் காலியாகவே காணப்படுகின்றன.[3]
கென்சியூ மக்கள் பலர் மலேசியா-தாய்லாந்து எல்லையில் உள்ள காட்டுப் பகுதிக்கு திரும்பிச் சென்று விட்டனர். எப்போதாவது, அவர்கள் கிராமத்திற்குத் திரும்புகிறார்கள், ஆனால் சிறிது காலம் மட்டுமே தங்குகிறார்கள்.
இந்தக் கிராமத்தில் வசிப்பவர்கள், சமூகத்திற்கு வெளியே உள்ளவர்களுடன் கலப்புத் திருமணம் செய்வதை அனுமதிப்பதில்லை. தாய்லாந்தில் வசிக்கும் தங்களின் கென்சியூ உறவினர்கள் அல்லது கிந்தாக் சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். வெளி நபர்களைத் திருமணம் செய்பவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
: