கெலாங் பாத்தா | |
---|---|
Gelang Patah | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°26′57″N 103°35′24″E / 1.4491332°N 103.5899353°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | ஜொகூர் பாரு |
அரசு | |
• நகரண்மைக் கழகம் | இசுகந்தர் புத்திரி மாநகராட்சி |
• தலைவர் | சாலேவுடின் அசான் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 81550 |
மலேசியத் தொலைபேசி எண் | +607 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | J |
கெலாங் பாத்தா, (மலாய்: Gelang Patah; ஆங்கிலம்: Gelang Patah; சீனம்: 振林山); ஜாவி: ڬلڠ ڤاته) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நகரம். மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கெலாங் பாத்தாவிற்குத் தனி அடையாளங்கள் உள்ளன. மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம்; மற்றும் தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகம் ஆகியவை மிக முக்கியமான அடையாளங்கள். இரண்டுமே புவியியல் அடிப்படையில் வரலாறு படைத்தவை.
கெலாங் பாத்தா, அதன் கடல் உணவு உணவகங்களுக்கும்; ஜொகூர் மாநிலத்திலேயே பிரபலமான "கெலாங் பாத்தா வறுவல் மீன்" உணவிற்கும் பிரபலமானது. உள்ளூர் மக்கள் பலருக்கும் சிங்கப்பூர் மக்கள் பலருக்கும் உணவு மையமாகவும் விளங்கி வருகிறது.
கெலாங் பாத்தா எனும் பெயர் பண்டைய காலங்களில் இந்தப் பகுதி ஒரு பெருங்கடலாக இருந்த ஒரு நிகழ்வில் இருந்து தோன்றியதாக நம்பப் படுகிறது. ஒரு நாள், பெயர் தெரியாத ஒரு ராணியின் படகு கெலாங் பாத்தா பகுதிக்கு வந்தது.
அப்போது அவர் அணிந்து இருந்த வளையல் கடலில் விழுந்தது. அந்த ராணியின் அழுகையைக் கேட்ட இழுது மீன்கள் (Jelly) தங்களின் மந்திர சக்தியைப் பயன்படுத்தி வளையலைக் கண்டுபிடித்துக் கொடுத்தன.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக, அதே வளையல் திடீரென உடைந்தது. ராணி சோகத்துடன் திரும்பி வந்தாள். அதன் பின்னர் அந்த நிகழ்வு நடந்த பகுதிக்கு கேலாங் பாத்தா என்று பெயர் வைக்கப் பட்டது. கெலாங் பாத்தா என்றால் மலாய் மொழியில் "உடைந்த வளையல்" என்று பொருள். இது ஒரு புராணக் கதையாகும்.[1]
மேலும் ஒரு புராணக் கதை உள்ளது. ஜொகூரின் முதல் மந்திரி பெசார் சாபார் முகமது என்பவரின் மூலமாக இந்த நகருக்குப் பெயர் கிடைத்ததாகவும் சொல்லப் படுகிறது. அவர் தன் மனைவி மற்றும் பரிவாரங்களுடன் படகில் சென்று அந்தப் பகுதியை ஆராய்ந்த போது "கெலாங் பாத்தா" என்ற பெயர் வழங்கப் பட்டதாகவும் அறியப் படுகிறது.
மந்திரி பெசார் சாபார் முகமதுவின் மனைவி ஒரு வளையலை அணிந்து இருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது அந்த வலையல் உடைந்து போனது. அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அந்த இடம் கெலாங் பாத்தா என்று பெயர் பெற்றது.[2]
13-ஆவது மலேசிய பொதுத் தேர்தல் வரை, ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கெலாங் பாத்தா பகுதி, ஆளும் கூட்டணிக் கட்சியான பாரிசான் நேசனல் கட்சியினால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.[3]
2013-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், அப்போதைய ஜொகூர் மந்திரி பெசார், அப்துல் கானி ஒசுமான்; ஜனநாயக செயல் கட்சியின் தலைவர்களில் ஒருவரான லிம் கிட் சியாங் என்பவரால் தோற்கடிக்கப் பட்டார்.[4] அதன் பின்னர் கேலாங் பாத்தா, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பார்வையில் இருந்து வருகிறது.
கெலாங் பாத்தா நகர்ப் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் கெலாங் பாத்தா தமிழ்ப்பள்ளி.[5] 199 மாணவர்கள் பயில்கிறார்கள். 21 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.[6]
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|
கெலாங் பாத்தா | SJK(T) Gelang Patah | கெலாங் பாத்தா தமிழ்ப்பள்ளி | கெலாங் பாத்தா | 199 | 21 |