![]() பூர்வீக கெலாபிட் ஆண்கள் குழு 1912. | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
6,000 (2013) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
போர்னியோ: | |
![]() ![]() | 1,111 (2000)[1] |
![]() ![]() | 790[2] |
![]() | கணக்கெடுப்பு இல்லை |
மொழி(கள்) | |
கெலாபிட் மொழி, மலாய் மொழி (சரவாக் மலாய் மொழி), இந்தோனேசிய மொழி | |
சமயங்கள் | |
கிறிஸ்தவம் (பெரும்பானமை), ஆன்மீகம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
லுன் பாவாங், சபான் |
கெலாபிட் அல்லது கெலாபிட் மக்கள் (மலாய்: Kaum Kelabit அல்லது Orang Kelabit; ஆங்கிலம்: Kelabit People என்பவர்கள் போர்னியோ சரவாக்; வடக்கு கலிமந்தான் (North Kalimantan) மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி தயாக்கு மக்கள் (Dayak People) ஆகும்.
அண்டை நாடான புரூணையிலும் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்களுக்கு லுன் பாவாங் (Lun Bawang) பழங்குடி மக்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
கெலாபிட் மக்கள் வாழும் நிலப் பகுதி சரவாக் - கலிமந்தான் எல்லைக்கு அருகில் பாரியோ நிலப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. மிரி நகருக்கு கிழக்கே 178 கி.மீ. தொலைவில் உள்ளது.
கெலாபிட் மக்கள் வாழும் பாரியோ பீடபூமி (Bario Highlands) 1000 மீ (3280 அடி) உயரத்தில் உள்ள பீடபூமியாகும். 13 முதல் 16 கிராமங்களைக் கொண்டது. கெலாபிட் சமூகத்தினர் அந்த உயர்நிலத்தில் நெல் சாகுபடி செய்கிறார்கள். பாரியோவிற்கு மிரி; மருடி நகரங்களில் இருந்து வழக்கமான வானூர்திச் சேவைகள் உள்ளன.[3]
பாரியோ (Bario) என்ற பெயர் கெலாபிட் மொழியில் இருந்து வந்தது. காற்று என்று பொருள். பாரியோவை "சாங்க்ரி-லா" சொர்க்கம் (Shangri-La) என்றும் அழைக்கிறார்கள்.[4]
கெலாபிட் மக்கள் வாழும் மலைப் பகுதிகள் 1,200 மீட்டருக்கும் சற்று அதிகமாக உயரத்தில் உள்ளன. கடந்த காலங்களில், பராமரிக்கப்படாத சில காட்டுச் சாலைகள்; மற்றும் மரச் சாலைகள் மட்டுமே இருந்தன. அதனால் அந்தப் பகுதிகளுக்குச் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது.
அத்துடன் அழுத்தமான ஆற்று நீரோட்டம் காரணமாக ஆற்றின் மூலமாக அந்தப் பகுதியை அணுக முடியாத நிலையும் இருந்தது. அதனால் கெலாபிட் மக்கள் வாழ்ந்த நிலப் பகுதிகள் மேலைநாடுகளினால் தீண்டப்படவில்லை. நவீன மேற்கத்திய தாக்கங்களும் இல்லாமல் இருந்தன.
லுன் பாவாங் (Lun Bawang), லுன் டாயே (Lun Dayeh), தெற்கு மூருட் (Southern Muruts) போன்ற பிற இனக்குழுவினர் பெரும்பாலும் கெலாபிட் மக்களுடன் தொடர்பு உடையவர்கள். கெலாபிட் மக்கள் தயாக்கு மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சரவாக் மாநிலத்தில் ஏறக்குறைய 6,600 மக்கள்தொகையுடன், மிகச் சிறிய மக்கள் குழுவாக உள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் பலர் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். ஏறக்குறைய 1,200 பேர் மட்டுமே அவர்களின் தாயகமான பாரியோ நிலப்பகுதிகளில் இன்னும் வாழ்கிறார்கள். அங்கு, இறுக்கமாகப் பிணைக்கப்பட்ட சமூகக் கோட்பாடுகளில், பரம்பரை பரம்பரையாக நீண்ட வீடுகளில் வாழ்கின்றனர்.
பல தலைமுறைகளாக பழைமையான உயர்நில நெல் சாகுபடியை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவையும் நடைமுறையில் உள்ளன. வளர்ப்பு எருமைகள் மிகவும் மதிக்கப் படுகின்றன. ஒரு மணமகளுக்கு ஏழு எருமைகள் வரதட்சணையாக வழங்கப்படுவது இன்றும் ஒரு பாரம்பரிய வழக்கமாகவே பின்பற்றப்படுகிறது.
கெலாபிட் மக்களின் வாய்மொழி வரலாற்றின் படி, அனைத்து மனிதர்களும் மலைகளில் இருந்து தோன்றியவர்கள். பூமியில் ஒரு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. மலைகளில் வாழ்ந்த மக்களில் சிலர் படகுகளை உருவாக்கி கடலோரப் பகுதிகளுக்குச் சென்றனர். மலைப் பகுதியில் சிக்கிக் கொண்டவர்கள் கெலாபிட் இனத்தைச் சேர்ந்த மக்களாக வாழ்கிறார்கள் என்பது இவர்களின் ஐதீக நம்பிக்கை.[5]
1920-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில், கெலாபிட் மக்கள் தங்களின் சமூகத் தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள தலை வேட்டை (Headhunting) எனும் பழக்கத்தைப் பின்பற்றி வந்தனர். 1939-இல், போர்னியோ எவாஞ்சலிகல் (Borneo Evangelical Mission) சமயப் பரப்புரையாளர் பிராங்க் டேவிட்சன் (Frank Davidson) என்பவர் பாரியோவில் உள்ள கெலாபிட் மக்களைச் சந்தித்தார்.[6]
அதன் பின்னர், கெலாபிட் மக்கள் தங்கள் நம்பிக்கையை ஆனிமிசத்தில் இருந்து கிறிஸ்தவத்திற்கு மாற்றிக் கொண்டனர். கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட முதல் நபர்களில் ஒருவர் பா தெராப் (Pa’Terap) குடியேற்றத்தின் கிராமத் தலைவர், தாமான் புலான் ஆகும்.
மார்ச் 1945-இல் தோம்ம் அரிசன் (Tom Harrisson) என்பவரின் தலைமையில் கீழ் ஒரு சிறிய படை வான்குடை மூலம் இங்கு தரையிறங்கியது. சப்பானிய எதிர்ப்பு இராணுவ நடவடிக்கையான செமுட் நடவடிக்கை (Operation Semut) எனும் நடவடிக்கைக்கு பேரியோ ஒரு தளமாக மாறியது. சரவாக்கில் ஜப்பானிய நடவடிக்கைகளை முற்றுப் பெறச் செய்வதில் கெலாபிட் மக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.[7]
1963-ஆம் ஆண்டில் இந்தோனேசியா - மலேசியா மோதல் (Indonesia-Malaysia Confrontation) ஏற்பட்ட போது, சரவாக் - கலிமந்தான் எல்லையில் இருந்த இரண்டு கிராமங்கள் எரிக்கப்பட்டன. மலேசிய அரசாங்கம் பாதுகாப்புக்காக பத்து கெலாபிட் கிராமங்களை பாரியோவிற்கு மாற்றியது.[8]