கலையாத்தும்குழி மாத்யூஸ் பினு (பிறப்பு: டிசம்பர் 20, 1980) கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய தட கள விளையாட்டு வீரர் ஆவார். இவர் 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டங்களில் திறமை பெற்றவர். 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 45.48 வினாடிகளில் ஓடி அப்போதைய 400 மீட்டர் தேசிய சாதனையை புரிந்தார். பின்னர், முகமது அனஸ் 2018 ஆம் ஆண்டில் கோல்ட் கோஸ்டில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 45.32 வினாடிகளில் ஓடி, இவரது சாதனையை முறியடித்தார்.[1] 1960 ஆம் ஆண்டு உரோம் ஒலிம்பிக்கில் 44 வயதான மில்கா சிங் 400 மீட்டர் தொலைவினை 45.73 வினாடிகளில் ஓடி வைத்திருந்த இந்திய தேசிய சாதனையை முறியடித்தார்.[2] பெரிய சர்வதேச போட்டியில் பதக்கங்களை வென்ற முதல் இந்திய உடன்பிறப்புகள என்று இவரும் இவரது சகோதரியுமான க. மா. பீனாமோலும் சேர்ந்து வரலாறு படைத்தனர். இவர்கள் இருவரும் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற புசான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றனர். ஆண்களுக்கான 800 மீட்டர் வெள்ளியை பினு வென்றபோது, மகளிர் போட்டியில் இவரது சகோதரி தங்கப்பதக்கம் வென்றார்.[3] பினு இந்திய தடகளத்தில் செய்த சாதனைகளுக்காக 2006 ஆம் ஆண்டிற்கான அருச்சுனா விருதைப் பெற்றார்.[4]
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பினு, திசம்பர் 20, 1980இல் பிறந்தார். தனது சகோதரி பீனாமோலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தடகளத்தை தனது வாழ்க்கையாகத் தேர்வு செய்தார். பினுவுக்கு உக்ரைனைச் சேர்ந்த யூரி பயிற்சியளித்தார், அவர் பீனாமோலையும் பயிற்றுவித்தவர் ஆவார்.[5]