கே. கே. வேணுகோபால் (Kottayan Katankot Venugopal 1931) இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஆவார். முகுல் ரோகத்கி ஒய்வு அடைந்ததை அடுத்து,
2017 சூன் 30 அன்று இந்தியாவின் 15 ஆவது அட்டர்னி செனரலாக இவர் பதவியேற்றார். இவர் பத்ம பூசண், பத்ம விபூசண் விருதுகள் பெற்றவர் .[1]
இவருடைய தந்தை எம்.கே. நம்பியார் புகழ் வாய்ந்த வழக்கறிஞர். வேணுகோபால் சென்னையில் உள்ள கிறித்தவக் கல்லூரியிலும் பெல்காமில் உள்ள ராசா லக்கம்கவுடா சட்டக் கல்லூரியிலும் படித்தார்.[2] வேணுகோபால் தொடக்கத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் பணியைச் செய்தார். 1960 களில் தில்லி உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவானார். பின்னர் உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் என்ற தகுதி ஏற்பட்டது. 1977 இல் மொரார்சி தேசாய் பிரதமராக இருந்தபோது கூடுதல் சொலிசிட்டர் செனரல் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார்.
பி.ஜே.தாமசு என்பவர் முதன்மைக் கண்காணிப்பு கமிசனர் பதவியில் நடுவணரசால் அமர்த்தம் செய்யப்பட்டபோது அதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் சார்பாக வேணுகோபால் ஆசராகி வாதாடினார்.[3]
தண்டி சுவாமி சிறி வித்யானந்த பாரதிஜி சார்பாகவும் தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதா சார்பாகவும் 2008 இல் சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்தும் உச்சநீதி மன்றத்தில் வாதாடினார்.
உச்சநீதி மன்றத்தில் கொண்டுவரப்படும் மிகச் சிக்கலான வழக்குகளில் வேணுகோபாலின் கருத்துகள் கேட்கப்படுகின்றன.
இந்திய நீதித்துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவருதல் தேவை என்று இவர் சொல்லி வருகிறார்.
அண்மையில் கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு ஆறு மாதச்சிறைத் தண்டனையை உச்சநீதி மன்றம் அளித்ததற்கு மாறாக வேணுகோபால் தம் கருத்தை அறிவித்தார்.
நேபாளம்பூடான் ஆகிய நாடுகள் தமது அரசியல் சட்டங்கள் வரைவுக்காக வேணுகோபாலின் சட்ட அறிவையும் அனுபவத்தையும் பெற்றுப் பயன் அடைந்தன.