கே. டி. அச்சயா (K. T. Achaya, 6 அக்டோபர் 1923 - 5 செப்டம்பர் 2002) ஒரு சிறந்த எண்ணெய் வேதியியலாளர், உணவு அறிவியலாளர், ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உணவு வரலாற்றாசிரியர் ஆவார்.[1] இவர் இந்திய உணவு ஒரு வரலாற்றுக் கையேடு ( Indian Food: A Historical Companion), பிரித்தானிய இந்தியாவின் உணவுத் தொழில்கள் (The Food Industries of British India), இந்திய உணவின் வரலாற்று அகராதி (A Historical Dictionary of Indian Food) ஆகிய நூல்களின் ஆசிரியர் ஆவார் .[2][3]
கே. டி. அச்சயா 1923 அக்டோபர் 6 ஆம் நாள் சென்னை மாகாணத்தின் (இப்போது கர்நாடகத்தின் ஒரு பகுதி) கொல்லேகலில் பிறந்தார். 1943 இல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றினார். ஐக்கிய இராச்சியத்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தார்.[3] (ஆ்வுத் தலைப்பு: பசு, நெய், எருமை நெய்யின் வேதியல் பண்புகள்)
ஐதராபாத்தில் உள்ள மண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் பருத்தி விதை பதப்படுத்துதல் மற்றும் ஆமணக்கு எண்ணெய் வழிப் பொருள்கள் குறித்து 1950 முதல் 22 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார். இந்த நேரத்தில், இவர் 150 வெளியீடுகளை வெளியிட்டும் 11 காப்புரிமைகளையும் பெற்றார். 1971 ஆம் ஆண்டில், மும்பையில் உள்ள புரத உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநரானார். 1977 ஆம் ஆண்டில், அச்சயா மைசூரின் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (சி.எஃப்.டி.ஆர்.ஐ) சென்றார். அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் பல்கலைக்கழக (யு.என்.யூ) திட்டத்தின் ஆலோசகராக வளரும் நாடுகளைச் சேர்ந்த கூட்டாளர்களுக்கு உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட பயிற்சிக்காக பணியாற்றினார். 1983 ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல நூல்களை எழுதினார்.[3]
கே.டி.அச்சயா எண்ணெய் பிழிதல் மற்றும் இந்தியாவின் உணவு வரலாறு குறித்த பல புத்தகங்களை வெளியிட்டார்.[3][4]