கேத்ரின் மேயோ | |
---|---|
1928 இல் மேயோ | |
பிறப்பு | இரிடிக்வே, பென்சில்வேனியா | சனவரி 27, 1867
இறப்பு | அக்டோபர் 9, 1940 பெட்போர்டு ஹில்ஸ், நியூயார்க்கு | (அகவை 73)
குடியுரிமை | அமெரிக்கர் |
பணி | எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1892–1940 |
அறியப்படுவது | மதர் இந்தியா (1927) |
கேத்தரின் மேயோ ( Katherine Mayo ) (ஜனவரி 27, 1867 - அக்டோபர் 9, 1940) ஓர் அமெரிக்க வரலாற்றாசிரியரும் மற்றும் சொந்த நாட்டு குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்கும் கொள்கையாளரும் ஆவார். அமெரிக்க உள்ளூர் மக்களின் நலன்களைப் பாதுகாத்தல், அமெரிக்காவில் வெள்ளையர் அல்லாதவர்கள் மற்றும் கத்தோலிக்கக் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு, ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் இனவெறி கொள்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு ஆதரவான அரசியல் எழுத்தாளராக மேயோ பொதுத் துறையில் நுழைந்தார். இவர் இனவாத மற்றும் மத அடிப்படையில் பிலிப்பைன்சு சுதந்திரப் பிரகடனத்தை கண்டனம் செய்ததற்காக அறியப்பட்டார். பின்னர் இவரது சிறந்த படைப்பான மதர் இந்தியா (1927), மூலம் இந்திய சமூகம், மதம் மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆழமான விமர்சன புத்தகத்தை வெளியிட்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக எழுதப்பட்ட இந்த புத்தகம், அதன் வெளியீட்டில் கடுமையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும், மகாத்மா காந்தி உட்பட பல ஆசிரியர்களால் இந்துமதம் மீதான வெறுப்பைக் காட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மாயோ பென்சில்வேனியாவின் இரிடிக்வேயில் ஜேம்ஸ் ஹென்றி மற்றும் ஹாரியட் எலிசபெத் மேயோ ஆகியோருக்குப் பிறந்தார். தனிப்பட்ட முறையில் கல்வி கற்றார். பட்டம் பெற்ற சிறிது காலத்திலேயே, இவர் ஒரு ஆராய்ச்சியாளராகவும் வரலாற்றாசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினார், நியூயார்க் ஈவினிங் போஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் ஓஸ்வால்ட் கேரிசன் வில்லார்டுக்கு ஜான் பிரவுன் என்ற ஒழிப்புவாதியின் சுயசரிதையை “1800-1859: ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வாழ்க்கை வரலாறு” என்ற தலைப்பில் தயாரிக்க உதவினார். இது 1910 இல் வெளியிடப்பட்டது. வில்லார்ட் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புக் கழகத்தின் நிறுவனர் மற்றும் வண்ண மக்கள் முன்னேற்றத்திற்கான தேசிய சங்கத்தின் அதிகாரியும் ஆவார். அவர் பல சமூக சீர்திருத்தவாத வட்டங்களில் செயலில் ஈடுபட மேயோவை வற்புறுத்தினார். [1] மேயோ மேஃப்ளவர்' சங்கத்தின் உறுப்பினராகவும் ஆனார். அமெரிக்க புரட்சியின் மகள்கள் என்ற அமைப்புடனானத் தொடர்பைப் பேணி வந்தார், அந்த நேரத்தில் அமெரிக்காவிற்கு வெள்ளையர் அல்லாத மற்றும் கத்தோலிக்க குடியேற்றத்தின் மீதான தனது விரோதப் போக்கைப் பகிர்ந்து கொண்டார். [2]
மேயோவின் ஆரம்பகால எழுத்துக்களில் பல கத்தோலிக்க எதிர்ப்பு மற்றும் நிற மக்கள் மீதான இனவெறி பார்வைகளை ஊக்குவித்தன. பிலிப்பைன்சு சுதந்திரப் பிரகடனத்தை எதிர்த்த தனது எழுத்துக்களில் கத்தோலிக்க எதிர்ப்பு மற்றும் பிலிப்பைன்சு எதிர்ப்பு உணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்தார். இவரது ஆரம்பகால இதழியல் படைப்புகள் அமெரிக்க தேசியவாதத்தின் “ஆங்கிலோ-சாக்சன்” பதிப்பை ஊக்குவித்தது. ஐரிசி குடியேறியவர்கள் மீதான இனவெறிக் கருத்துக்கள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் இனவெறிக் கருத்துக்களைக் கொண்டிருந்தது. [2] [3] “நீக்ரோக்கள்” பாலியல் ஆக்கிரமிப்பு மற்றும் சுய கட்டுப்பாடு இல்லாதவர்கள் என்றும் இதனால் அவர்கள் “அப்பாவி வெள்ளை ஆங்கிலோ-சாக்சன் பெண்களுக்கு” அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும் கூறினார்.[2] மேயோ நியூயார்க் மாநில காவல்துறையை நிறுவுவதற்கான முயற்சிக்கு பின்னால் தனது எழுத்துத் திறனை வைத்து, புலம்பெயர்ந்தோர் மற்றும் தொழிலாளர் உரிமை இயக்கங்களில் ஈடுபட்டுள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்களை ஒடுக்குவதற்கான அவர்களின் முயற்சிகளை ஆதரித்தார்.[3]
மேயோ 1927 ஆம் ஆண்டு மதர் இந்தியா என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தை வெளியிட்டார். அதில் இவர் இந்தியச் சமூகம், மதம் மற்றும் கலாச்சாரத்தைத் தாக்கினார். மேயோவின் புத்தகம் இந்தியா மற்றும் மேற்கத்திய உலகம் ஆகிய இரு நாடுகளிலும் விரைவில் சர்ச்சைக்குரியதாக மாறியது. அங்கு விமர்சகர்கள் இவர் இந்தியாவையும் அதன் கலாச்சாரத்தையும் மோசமாக சித்தரிப்பதை விமர்சித்தனர். மாறாக, இவரது பணியின் சில அபிமானிகள் இவரது பல கூற்றுகளின் துல்லியத்தை சுட்டிக்காட்டினர். [2]
புத்தகம் மூன்று கண்டங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. [4] இந்திய விடுதலை இயக்கத்திற்கு எதிராக எழுதப்பட்ட இந்நூலில் மேயோ, இந்தியாவின் பெண்கள், தலித்துகள், விலங்குகள் மற்றும் அதன் தேசியவாத அரசியல்வாதிகளின் தன்மை ஆகியவற்றை விமர்சித்தார். சுயஇன்பம், கற்பழிப்பு, ஓரினச்சேர்க்கை, விபச்சாரம், பாலியல் நோய்கள், சிறுவயது உடலுறவு, மற்றும் முன்கூட்டிய மகப்பேறு போன்றவை இந்தியாவின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மையமாக இருப்பதாகக் கூறி, இந்திய ஆண்களின் "பரவலான" மற்றும் பலவீனமான பாலுறவு ஆபத்தானது என தான் உணர்ந்ததை மேயோ வெளிபடுத்தினார். மாயோவின் கூற்றுக்கள், வெளியில் உள்ள பார்வையாளர்களிடையே இந்திய விடுதலைர இயக்கத்திற்கான அனுதாபங்கள் பெருகுவதற்கு எதிர் நடவடிக்கையாக காலனித்துவ அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்கான இயக்கத்தை அமெரிக்கப் புரட்சியுடன் இணைத்த அமெரிக்கர்களிடையேயும் இந்த புத்தகம் பிரச்சாரம் செய்யப்பட்டது. [2] இந்த புத்தகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் மேயோவின் கூற்றுகளை விமர்சிக்கும் துண்டுப்பிரசுரங்களை வெளியிடத் தூண்டியது [5] அத்துடன் இதே பெயரில் மதர் இந்தியா என்றா பெயரில் திரைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது ( புத்தகத்தில் கூறப்பட்ட கூற்றுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் எடுக்கப்பட்டது ). [3] இந்தியாவிலும் நியூயார்க்கிலும் மேயோவின் உருவ பொம்மைகளுடன் புத்தகமும் எரிக்கப்பட்டது. [6] அதை இந்திய சுதந்திர ஆர்வலர் காந்தி விமர்சித்து இவ்வாறு பதிலளித்தார்:
இந்த புத்தகம் புத்திசாலித்தனமாகவும் சக்திமிக்கதாகவும் எழுதப்பட்டுள்ளது. கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள்கள் உண்மையான புத்தகத்தின் தவறான தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் புத்தகம் என் மனதில் பதிய வைக்கும் எண்ணம் என்னவென்றால், நாட்டின் வடிகால்களை திறந்து ஆய்வு செய்யும் ஒரு நோக்கத்துடன் அனுப்பப்பட்ட வடிகால் பரிசோதகரின் அறிக்கையாகவோ அல்லது திறக்கப்பட்ட வடிகால்கள் மூலம் வெளிப்படும் துர்நாற்றம் பற்றிய விளக்கத்தை வரைபடமாக விளக்குவதற்காகவோ எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் வடிகால்களைத் திறந்து ஆய்வு செய்யவே தான் இந்தியா வந்ததாக மிஸ் மாயோ ஒப்புக்கொண்டிருந்தால், அவரது தொகுப்பைப் பற்றி குறைவாக குறை கூறலாம். ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட அளவு வெற்றியுடன் தனது அருவருப்பான மற்றும் மிகவும் தவறான கண்ணோட்டைத்தை எழுதியுள்ளார்.[7]
புத்தக வெளியீட்டிற்குப் பிறகு, தலிப் சிங் சவுண்ட் (பின்னர் இவர் ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினரானார்) மேயோவின் கூற்றுகளை எதிர்கொள்ள மை மதர் இந்தியா என்ற புத்தகத்தை எழுதினார்.[8] கோபால் முகர்ஜி என்பவர் எ சன் ஆப் மதர் இந்தியா என்ற மற்றொரு புத்தகத்தை எழுதினார். [9] மேயோவின் பணிக்கு பதிலளிக்கும் வகையில் லாலா லஜபதி ராய் 1928 இல் [10] அன்கேப்பி இந்தியா என்ற புத்தகத்தை எழுதினார்.