இந்தியாவில் கொத்தடிமை முறை (Debt bondage in India) 1976 ஆம் ஆண்டு சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டது. ஆனால் அந்தச் சட்டம் அரசாங்கத்தால் பலமாக அமல்படுத்தப்படாததால் கொத்தடிமை முறை இன்றும் நடைமுறையில் உள்ளது.[1] கொத்தடிமைக் கூலி என்னும் முறை கடன் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான கடுமையான பணம் மற்றும் சக்தி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக உருவாயிற்று. கடன் வாங்கியவர் கடனை அடைக்க இயலாமல் அடிமை போன்ற சுரண்டலுக்கு உள்ளவார். இப்படிப்பட்ட சுரண்டலுக்கு வழிவகுக்கும் கடன் மற்றும் தொழிலாளர் ஒப்பந்தங்கள் இதில் பிணைந்து ஈடுபடுகிறது.[1]
தலித் இயக்கத்தின் எழுச்சியும், 1949 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்ட அரசாங்கச் சட்டமும்,[2] அத்துடன் தொண்டு நிறுவனங்களும் அரசு அலுவலகங்களும் தொழிலாளர் சட்டங்களை அமலாக்குவதற்கும் கொத்தடிமைக் கூலிகளை மீட்டு மறுவாழ்வளிப்பதற்காக செய்து கொண்டிருக்கும் பணிகளும் தான் இந்தியாவில் அடிமை தொழிலாளர்களின் குறைப்பிற்கு பங்களித்ததாகத் தெரிகிறது. இருப்பினும், சர்வதேசத் தொழிலாளர் அமைப்பால் வழங்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின்படி, இந்தியாவில் கொத்தடிமை முறையை ஒழிப்பதில் இன்னும் பல தடைகள் உள்ளதாகத் தெரிகிறது.[3][4]
சித்தார்த் காரா என்பவரின் மதிப்பீட்டின்படி, உலகில் பிணைக்கப்பட்ட தொழிலாளர்கள் அல்லது கொத்தடிமைகள் 84 முதல் 88% தெற்காசியாவில் தான் உள்ளனர்.[5] இந்தியாவில் கடன் அடிமைத்தனம் விவசாயப் பகுதிகளில் மிகவும் அதிகமாக உள்ளது. சிறு கடன்களை வாங்கிய விவசாயிகள், வருடத்திற்கு 100% கடனைத்தாண்டிய வட்டி செலுத்துகிறார்கள்.[1]
குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, ஒரு நாட்டின் பொருளாதார நலன்களில் தீவிர பிரச்சினை இருப்பதை காட்டுகிறது.[6] இந்தக் குழந்தைகள் கடன் அடிமைத்தனத்துடன் பிணைக்கப்படும்போது நீண்டகால முதலாளித்துவ-அடிமை உறவு உருவாகிறது. குறைந்தபட்சம் அல்லது ஊதியம் இல்லாத இந்த அடிமைத்தன வேலை கடன் அடைத்து தீர்ப்பதற்காக வாழ்நாள் முழுவதும் நீடிக்கவும் செய்கிறது.[7]
பிரச்சனையின் மதிப்பீடுகள் வேறுபடுகின்றன. 1993-ன் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் 251,000 பிணைக்கப்பட்ட தொழிலாளர்கள் உள்ளதாக மதிப்பிட்டது,[8] ஆனால் பந்துவா முக்தி மோர்சா 20 மில்லியன் கொத்தடிமைகள் உள்ளனர் என்கிறது. 2003 ஆம் ஆண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வு, பட்டுத் தொழிற்துறையில் கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் எனும் ஒரு பெரிய பிரச்சனையை வெளியிட்டது.[9]
“ | நீண்டகாலத்திற்கு முன்பே தெற்காசியாவில் இருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டிய வரலாற்றுச் சரித்திரமே பிணைத் தொழிலாளி/ கொத்தடிமைத்தனம். ஆனால் பேராசை, ஊழல், அரசாங்கத்தின் திறமின்மை ஆகியவை நவீன காலத்திற்குள் இந்த தீயச் சுரண்டலை அனுமதிக்கின்றன. அடிப்படை மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகவும், உலகளாவிய விநியோகத் தொடர்களை/ சங்கிலிகளை உத்திரவாதப்படுத்தவும், சர்வதேச பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காகவும், கொத்தடிமைகள்/ பிணைக்கப்பட்ட தொழிலாளர்களை ஊக்குவிக்கும் சக்திகளை உடனடியாகத் தடுக்க வேண்டும். | ” |
என ஆசிரியரும் கல்வியாளருமான சித்தார்த் காரா நம்புகிறார்.[1]