கொல்கத்தா துர்கா பூஜை Durga Puja in Kolkata | |
---|---|
கொல்கத்தா பூந்தோட்ட சந்தையில் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது | |
நாடு | இந்தியா |
மேற்கோள் | 703 |
இடம் | ஆசிய பசிபிக் |
கல்வெட்டு வரலாறு | |
கல்வெட்டு | 2021 (16வது அமர்வு) |
பட்டியல் | பிரதிநிதி |
சான்றிதழ் : direct link |
கொல்கத்தா துர்கா பூஜை என்பது ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஆண்டு விழா ஆகும். இது இந்து மதத் தாய் தெய்வமான துர்கா வழிபாட்டைக் குறிக்கிறது.[1][2] இந்த திருவிழா மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பெங்காலிகளால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை மற்றும் மத விழாவாகும்.[3][4] மேலும், இது கொல்கத்தாவில் பெங்காலி இந்துக்கள் அல்லது இந்துக்களின் மிகப்பெரிய மத விழாவாகவும் உள்ளது.[4]
கொல்கத்தாவில் சுமார் 3,000 பரோவாரி எனப்படும்பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் கொல்கத்தா நகரில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பூஜைகள் பெரும் பொருட்செலவில் (கோடி ரூபாய்) ஏற்பாடு செய்யப்படுகின்றன.[5]
கொல்கத்தாவில் கொண்டாடப்படும் துர்கா பூஜையினை 2021ஆம் ஆண்டு திசம்பரில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான-யுனெஸ்கோ 'மனிதக்குலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியம் ' எனப் பட்டியலிட்டது.[6]
1610ஆம் ஆண்டு முதல், சபர்ணா ராய் சவுத்ரி குடும்பம் கொல்கத்தாவின் பாரிஷாவில் உள்ள தங்களது பூர்வீக இல்லத்தில் துர்கா பூஜையை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.[7] கொல்கத்தாவில் நடைபெறும் மிகப் பழமையான துர்கா பூஜை விழா இதுவாக இருக்கலாம். நபகிருஷ்ண தேவ் 1757-ல் ஷோபாபஜார் ராஜ்பரியில் துர்கா பூஜையைத் தொடங்கினார்.[8][9]
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொல்கத்தாவில் பரோவாரி துர்கா பூஜை தொடங்கியது. கொல்கத்தாவில் பரோவாரி துர்கா பூஜை வெகு விரைவில் சாதாரண மக்களின் திருவிழாவாக மாறியது. முன்னதாக, கொல்கத்தாவில் துர்கா பூஜை பணக்கார குடும்பங்கள் மட்டுமே கொண்டாடும் விழாவாக இருந்தது. 1910ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் முதல் பரோவாரி துர்கா பூஜை, பவானிபூர் "பவானிபூர் சனாதன் தர்மத்சாகினி சபா"வினால், பல்ராம் பாசு மலைச் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.[7]
1985 முதல், ஆசியன் பெயிண்ட்சு நிறுவனத்தினர் கொல்கத்தாவின் துர்கா பூஜை குழுக்களுக்கு விருது வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தினர். இந்த விருது ஏசியன் பெயிண்ட்சு சரத் சம்மான் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் பல வணிக நிறுவனங்கள் கொல்கத்தாவில் துர்கா பூஜைக்காக "சரத் சம்மான்" எனப்படும் துர்கா பூஜை விருதுகளை அறிமுகப்படுத்தின.[10][11][12]
மேற்கு வங்க அரசு 2013-ல் பிஸ்வா பங்களா சரத் சம்மனை அறிவித்தது.[13]
யுகாந்தர் மற்றும் ஆனந்தபஜார் பத்திரிகையில் உள்ள அறிக்கைகள் 1950களிலிருந்து சர்போஜனின் (பொது) பூஜை செலவின் தோராயமான மதிப்பீட்டை வழங்குகின்றன. 1957-ல், ஒவ்வொரு சமூகமும் சராசரியாக ரூபாய் 8,000 முதல் 12,000 வரை செலவழித்தது. பூஜைகளின் மொத்த செலவு சுமார் 25 லட்சம் ரூபாய் என்றும் இது 1984-ல் சுமார் 2 கோடி ரூபாயாக அதிகரித்தது.[14]
2012 ஆம் ஆண்டின் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை கொல்கத்தாவில் 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற துர்கா பூஜைக்கான செலவு குறித்த புள்ளிவிவரத்தை வழங்கியது. இந்த அறிக்கையின்படி, கொல்கத்தாவில் 3,577 பூஜைகளுக்காக மொத்தம் 123.05 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது.[15]
2016-ல் கொல்கத்தாவில் துர்கா பூஜை திருவிழா தொடர்ந்து நடைபெற்றது.[16][17] ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் திருவிழா ஏற்பாடு செய்யப்படவில்லை.[18] இது மீண்டும் 2022 முதல் ஏற்பாடு செய்யப்பட்டது.[13][18]
2019-ல், தபதி குஹா-தாகூர்தாவிடம் இந்தியக் கலாச்சார அமைச்சகம் ஒரு ஆவணத்தைத் தயாரிக்கும் பணியை ஒப்படைத்தது. மனிதக்குலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் யுனெஸ்கோ பட்டியலில் துர்கா பூஜையைச் சேர்ப்பதற்காக இந்த யுனெஸ்கோவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. திசம்பர் 13 2021 அன்று பாரிஸில் தொடங்கிய 16வது அமர்வில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இந்த ஆவணத்தை மதிப்பீடு செய்தனர். "கொல்கத்தாவில் துர்கா பூஜை" 15 திசம்பர் 2021 அன்று அருவமான கலாச்சார பாரம்பரிய தகுதியினைப் பெற்றது.
துர்கா பூஜை முக்கியமாக 5 நாட்கள் (சஷ்டி, சப்தமி, அட்டமி, நவமி மற்றும் தசமி) கொண்டாடப்படுகிறது. ஆனால் கொல்கத்தாவில் துர்கா பூஜையில் பண்டிகை மனநிலை சஷ்டிக்கு முன்னரே முக்கியமாக மகாளயத்திலிருந்து தொடங்கிவிடுகிறது. மகாளய தினம் முதல் துர்கா பூஜை பந்தல்கள் பொதுமக்களுக்கு அமைக்கப்படுகின்றன. கொல்கத்தாவில் உள்ள துர்கா பூஜையின் முக்கிய ஈர்ப்புகளாக அலங்காரங்கள், சிற்பங்கள், பந்தல்கள்,[19] விளக்குகள் மற்றும் ஒளியமைப்புகள் மற்றும் திருவிழாவும் உள்ளன.[18]
மேற்கு வங்காள அரசின் சுற்றுலாத் துறையின் சார்பாகப் பிரித்தானிய குழுவினால் துர்கா பூஜையைச் சுற்றியுள்ள ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்தைக் கணக்கீடு செய்யும் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 2021ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள பிரித்தானிய குழு 2019ஆம் ஆண்டிற்கான துர்கா பூஜையின் ஆக்கப்பூர்வமான பொருளாதார செலவினை ரூபாய் 32,000 கோடியாக வரை உள்ளதாகத் தெரிவித்தது. 2019-2020 நிதியாண்டில் மேற்கு வங்காளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் திருவிழா 2.58% பங்களித்தது.[20][21] "கொல்கத்தாவில் துர்கா பூஜை" இந்த ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கிறது.[20]
கொல்கத்தாவில் துர்கா பூஜையின் பொருளாதாரம் பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிறுவல், கலை மற்றும் அலங்காரம், சிலை தயாரித்தல், விளக்குகள் மற்றும் ஒளியூட்டல், இலக்கியம் மற்றும் பிரசுரம், நிதியுதவி, விளம்பரம், சில்லறை விற்பனை, கைவினைப்பொருட்கள் மற்றும் வடிவமைப்பு (பூஜை பாத்திரங்கள்), திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் உணவு மற்றும் பானம் ஆகியவை பல்வேறு துறைகளைச் சார்ந்துள்ளன. 2019ஆம் ஆண்டில், கொல்கத்தா மேற்கு வங்கத்தின் படல் தயாரிப்பு (நிறுவல், கலை மற்றும் அலங்காரம்) தொழிலில் 15% பங்கைக் கொண்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 129 கோடி ஆகும்.[20] கொல்கத்தாவில் துர்கா பூஜைக்குச் சிலை தயாரிக்கும் தொழில் மற்றும் விளக்குகள் மற்றும் ஒளியமைப்பு தொழில்களுக்காக மட்டும் ரூபாய் 120 கோடிகள் வரை செலவிடப்பட்டுள்ளன.[20]