Named after | புல்லேலா கோபிசந்த் |
---|---|
உருவாக்கம் | 2008 |
நிறுவனர் | புல்லேலா கோபிசந்த் |
வகை | இறகுப்பந்தாட்டப் பயிலகம் |
தலைமையகம் | |
சேவை | இந்தியா |
வலைத்தளம் | https://gopichandacademy.com/ |
புல்லேலா கோபிசந்த் இறகுப்பந்தாட்டப் பயிலகம் அல்லது கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமி (Pullela Gopichand Badminton Academy (PGBA)) என்பது இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத் நகரிலுள்ள ஒரு இறகுப்பந்தாட்டப் பயிற்சிக் கூடம்.[1] அனைத்து இங்கிலாந்து திறந்தவெளி இறகுப்பந்தாட்ட வாகையர் பட்டத்தை வென்ற புல்லேலா கோபிசந்த். இந்தப் பயிலகத்தை 2008 ஆம் ஆண்டு நிறுவினார். சாய்னா நேவால், பி. வி. சிந்து, சிறீகாந்த் கிடம்பி, பாருபள்ளி காஷ்யாப், பிரனாய் குமார், சாய் பிரணீத், சமீர் வெர்மா உள்ளிட்ட பலர் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர்.[2]
2001 ஆம் ஆண்டு அனைத்து இங்கிலாந்து திறந்தவெளி இறகுப்பந்தாட்ட வாகையர் பட்டத்தை வென்ற போது கோபிசந்துக்கு 27 வயது, அவ்வேளையில் அவர் சில காயங்களால் அல்லலுற்றுக் கொணடிருந்தார். இறகுப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டிகளில் நீண்ட எதிர்காலம் இல்லாத காரணத்தினால் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு உலகத்தரம் வாய்ந்த இறகுபந்தாட்டப் பயிலகம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார் கோபிசந்த்.
கோபிசந்த் பெற்ற பட்டத்தின் காரணமாக ஆந்திர அரசாங்கம் அவருக்கு 2003ஆம் ஆண்டு ஐதரபாத்தில் காசிபௌலி பகுதியில் மிகக்குறைந்த விலையில் 45 ஆண்டுகால குத்தகைக்கு ஐந்து (5) ஏக்கர் நிலம் வழங்கியது.[3][4] அதே வேளையில் கோபிசந்த் யோனக்ஸ் நிறுவனத்திடம் ஏற்பாதரவையும் ஒரு வெளிநாட்டு பயிற்சியாளரையும் வேண்டினார்.[5][6]
2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கட்டப்பட்ட இந்தப் பயிலகத்தில் எட்டு அரங்குகளும், ஒரு நீச்சல் குளமும், எடைப் பயிற்சி அறையும், அருந்தகமும், உறங்குவதற்கு அறைகளும் உள்ளன. இந்தப் பயிலகத்தின் கட்டுமானம் பெங்களுருவில் உள்ள பிரகாஷ் பதுகோனே இறகுப்பந்தாட்ட பயிலகத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டது.[7]
இந்தப் பயிலகத்தில் 2009 இந்தியத் திறந்தவெளி இறகுப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. 2009 பிஎம்எப் உலக வாகையர்களுக்கான போட்டியில் இது பயிற்சிக் களமாகப் பயன்படுத்தப்பட்டது.[7][8]