சகீல் பதாயுனி Shakeel Badayuni | |
---|---|
![]() இந்திய அரசு 2013ல் வெளியிட்ட அஞ்சல் தலையில் சகீல் பதாயுனி | |
பிறப்பு | பதாவுன், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா (நவீன உத்தரப் பிரதேசம், இந்தியா) | 3 ஆகத்து 1916
இறப்பு | 20 April 1970 (வயது 53) மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தொழில் | கவிஞர் |
தேசியம் | ![]() |
வகை | காதல், தத்துவம் |
சகீல் பதாயுனி (Shakeel Badayuni) (3 ஆகத்து 1916 – 20 ஏப்ரல் 1970) ஓர் இந்திய உருது மொழிக் கவிஞரும், பாடலாசிரியரும் ஆவார். இவர், இந்தி மற்றும் உருது மொழிகளில் பாடல்களை எழுதினார்.[1][2][3]
சகீல் பதாயுனி உத்தரப் பிரதேசத்தின் பதாவுனில் பிறந்தார். இவரது தந்தை முகமது ஜமால் அகமது சொக்தா காதிரி, வீட்டிலேயே சகீலுக்கு அரபு, உருது, பாரசீகம் மற்றும் இந்திக் கல்வியை ஏற்பாடு செய்தார். கவிதைகள் மீதான இவரது விருப்பம் மற்ற சாயர்களைப் (உருதுக் கவிதைகளை எழுதுபவர்கள்) போல பரம்பரை ரீதியாக இருக்கவில்லை.[4] இவரது தொலைதூர உறவினர்களில் ஒருவரான ஜியா-உல்-காதிரி பதாயுனி ஒரு மதக் சாயராவார். சகீல் அவரால் ஈர்க்கப்பட்டார். மேலும் சமகால சூழலும் இவரை கவிதைக்கு வழிநடத்தியது.[5]
1936 ஆம் ஆண்டில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, இவர் கல்லூரிகளுக்கு இடையேயான முசைராக்கள் அல்லது கவிதைப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 1940 ஆம் ஆண்டில், தனது தொலைதூர உறவினரான சல்மாவை மணந்தார். தொடர்ந்து முசைராக்களில் பங்கேற்று நாடு முழுவதும் புகழ் பெற்றார். அந்த நாட்களில் சாயர்கள் சமூகத்தின் நலிந்த பிரிவினர், அவர்களின் விடுதலை மற்றும் சமூகத்தின் முன்னேற்றம் பற்றி எழுதிய வந்தனர். ஆனால் சகீலின் கவிதைகளில் காதல் இடம்பெற்றது.[5]
திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவதற்காக சகீல் 1944 இல் மும்பை சென்றார். அங்கு திரைப்படத் தயாரிப்பாளர் ஏ. ஆர். கர்தார் மற்றும் இசையமைப்பாளர் நௌசாத் ஆகியோரைச் சந்தித்தார். இவரது திறமையைக் கண்ட நௌசாத் உடனடியாக இவரை ஏ. ஆர். கர்தாரின் தார்த் (1947) படத்தில் பாடல் எழுத வாய்ப்பு வழங்கினார். தார்த்தின் பாடல்கள் மிகவும் விரும்பப்பட்டன.[5]
சகீலும், நௌசாத்தும் இணைந்து, பாலிவுட் திரைத்துறையில் மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர்/பாடலாசிரியர் இரட்டையர்களில் ஒருவராக மாறினர். இவர்கள் ஒன்றாப் பணியாற்றிய, தீதர் (1951) பைஜு பாவ்ரா (1952) மதர் இந்தியா (1957) மற்றும் முகல்-இ-அசாம் (1960) ஆகியவை இன்றும் தனித்து நிற்கின்றன. இவர்கள் இணைந்து இசையமைத்த பிற படங்களில் துலாரி (1949) ஷபாப் (1954) கங்கா ஜமுனா (1961) மற்றும் மேரே மெஹபூப் (1963) ஆகியவையும் இதில் அடங்கும். முகமது ரபி பாடிய சவுத்வின் கா சந்த் திரைப்படத்தின் தலைப்புப் பாடல், 1961 ஆம் ஆண்டில் சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருதை பதாயுனிக்குப் பெற்றுத் தந்தது.
பதாயுனி தனது வாழ்க்கையில் பல மறக்கமுடியாத பல பாடல்களை எழுதியுள்ளார்.பைஜு பாவ்ரா (1952) வரலாற்று காவியமான முகல்-இ-அசாம் (1960) மற்றும் சமூகப் படமான சாஹிப் பீபி அவுர் குலாம் (1962) ஆகியவை இவரது பிரபலமான படைப்புகளில் அடங்கும்.
சகீல் சுமார் 89 படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். கூடுதலாக, பேகம் அக்தர் பாடிய பல பிரபலமான கசல்களையும் இவர் எழுதியுள்ளார். அவை இன்றும் பங்கஜ் உதாஸ் போன்ற பாடகர்களால் பாடப்படுகின்றன.
சகீல் பதாயுனி தனது ஐம்பத்து மூன்று வயதில், ஏப்ரல் 20,1970 அன்று, மும்பை மருத்துவமனையில் இறந்தார். சகீலின் நண்பர்கள் அகமது சகாரியா மற்றும் இரங்கூன்வாலா ஆகிய இருவர்ரும் சகீலின் மரணத்திற்குப் பிறகு யாத்-இ-சகீல் என்ற அறக்கட்டளையை உருவாக்கினர். இந்த அறக்கட்டளை இவரது குடும்பத்திற்கு வருமான ஆதாரமாக மாறியது.[5]
இவரை கௌரவிக்கும் வகையில் 3 மே 2013 அன்று இந்திய அஞ்சல் துறையால் ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.[6]