சங்கராந்தி என்பது இந்துக்களின் பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில், 12 இராசிகள் கொண்ட ராசிச் சக்கரத்தில் சூரியன் ஒரு இராசியிலிருந்து அடுத்த இராசிக்கு இடம் பெயர்வதை குறிக்கிறது.[1] எனவே ஒரு ஆண்டு 12 சங்கராந்திகள் கொண்டுள்ளது.[2]
சூரிய நாட்காட்டியைப் பின்பற்றும் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, துளுநாடு, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, மிதிலை பிரதேசம், பிகார் மற்றும் நேபாளம் பகுதிகளில் ஒவ்வொரு சங்கராந்தியும், ஒரு மாதத்தின் தொடக்கமாகக் குறிக்கப்படுகிறது. மறுபுறம், வங்காள நாட்காட்டி மற்றும் அசாமிய நாட்காட்டிகளைப் பின்பற்றும் பகுதிகளில், சங்கராந்தி ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும், அடுத்த நாள் புதிய மாதத்தின் தொடக்கமாகவும் குறிக்கப்படுகிறது.
முக்கியமான சங்கராந்திகள்
[தொகு]
- மகர சங்கராந்தி: சூரியன் அதன் வான்பாதையில் மகர ராசியில் (மகரம்) சனவரி 14 அல்லது 15ஆம் தேதிக்கு மாறுவதையும், ஆறு மாத உத்தராயணக் காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.[3] இதனை மகர சங்கராந்தி உத்தராயணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் நாள் ஆகும். பாரம்பரிய இந்து நாட்காட்டி சந்திரனின் சுற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் சங்கராந்தி என்பது ஒரு சூரியச் சுற்றை அடிப்படையாக கொண்டதாகும். மகர சங்கராந்தி பெரும்பாலும் சனவரி 14 அன்றும், நெட்டாண்டில் மட்டும் சனவரி 15-ஆம் தேதியில், சூரியன் மகர ராசியில் உதிப்பது மாறாமல் இருக்கும்.
- 'மேஷ சங்கராந்தி': பாரம்பரிய சூரிய நாட்காட்டியில் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த நாளில், சூரியன் மேஷ ராசியில் நுழைகிறது. இது பொதுவாக ஏப்ரல் 14/15 அன்று விழும். இந்தியா மாநிலங்களின் புத்தாண்டு இந்நாளில் கொண்டாடப்படுகிறது: கேரளத்தில் விஷூ என்றும், தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு என்றும், துளு நாட்டில் பிசு பர்பா என்றும், பஞ்சாபில் வைசாகி என்றும், ஒடிசாவில் பான சங்கராந்தி என்றும், மேஷ சங்கராந்திக்கு அடுத்த நாளில், வங்காளம் மற்றும் அசாம் பகுதிகளில் முறையே போஹாக் பிஹு, பொஹெலா போயிஷாக் என புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
- கடக சங்கராந்தி : சூலை 16 அன்று சூரியன் கடக ராசியில் நுழைவதைக் குறிக்கிறது. இது இந்து நாட்காட்டி படி ஆறு மாத கால உத்தராயணம் காலத்தின் முடிவையும், 6 மாத கால தட்சிணாயனம் தொடக்கத்தையும் குறிக்கிறது.[3]