சசுதி பிராட்டா (Sasthi Brata, 1939-2015) என்பவர் ஒரு இந்திய ஆங்கில எழுத்தாளர் ஆவார். இதழாளராகவும் புதின ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் விளங்குபவர். இவருடைய முழுப் பெயர் சசுதி பிராட்டா சக்ரவர்த்தி ஆகும். 1961 முதல் இங்கிலாந்தில் வாழ்கிறார். தம் 28 ஆம் அகவையில் சசுதி பிராட்டா, தன் வரலாற்றை 'மை காட் டைடு யங்' என்னும் தலைப்பில் புத்தகமாக எழுதினார். இந்த நூல் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் இவரை அறிமுகம் செய்தது. எழுத்துலகில் புகழ் பெறுவதற்கு முன் இவர் விடுதிகளிலும் பிற இடங்களிலும் உணவு பரிமாறுபவராகவும் துப்புரவுப் பணியாளராகவும் இருந்து எளிய வேலைகளைச் செய்தார்.
வசதிகள் கொண்ட உயர் வகுப்புக் குடும்பத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியை கொல்கத்தாவில் உள்ள ஒரு பள்ளியிலும், பின்னர் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியிலும் பயின்றார்.
சசுதி பிராட்டாவின் எல்லா நூல்களும் தன்மைக் கூற்றில் எழுதப்பட்டவை. இவர் எழுதிய கதைகளில் காமச் சுவை விரவிக் காணப்படும். இந்தியக் குடும்பங்களில் நிகழும் குழந்தைத் திருமணங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், இந்திய மக்களிடையே நிலவும் மடமைகள், சுற்றுச் சூழல் தூய்மையின்மை ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி எழுதினார். இந்தியக் குமுகாயத்தில் உள்ள மத வெறுப்புக்கள், சாதி வேறுபாடுகள், அரசியல் போலித்தனம், அடிமைத்தனம் ஆகியவற்றைத் தம் நூல்களில் எழுதினார். விறுவிறுப்பாகவும் சொற் செறிவுடனும் காமச்சுவை கலந்தும் எழுதி வந்தார். மது குடிப்பது, புகைப் பிடிப்பது, பெண்களுடன் உறவுக் கொள்வது ஆகிய பழக்கங்களைக் கொண்டவர் என்பதை வெளிப்படையாக எழுதினார். நூல்களில் மட்டும் அல்லாமல், இந்திய நாட்டு இதழ்களிலும் இங்கிலாந்துப் பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதினார்.
http://www.telegraphindia.com/1160227/jsp/opinion/story_71509.jsp#.V4CH-49OI2x