சண்டக்கான் பிரிவு (மலாய் மொழி: Bahagian Sandakan; ஆங்கிலம்: Sandakan Division) என்பது மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள ஐந்து நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாகும். பிரிவு என்பதை ஆங்கிலத்தில் டிவிசன் (Division) என்று அழைக்கிறார்கள். இந்த முறைமை தீபகற்ப மலேசியாவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. சபா; சரவாக் மாநிலங்களில் மட்டுமே பிரிவு எனும் முறைமையைப் பயன்படுத்துகிறார்கள்.
கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களைப் பொருத்த வரையில், பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஓர் ஆளுநர் (Resident) நியமிக்கப்பட்டு இருந்தார். இப்போது அந்தப் பதவி அகற்றுப்பட்டு விட்டது.
இந்தச் சண்டக்கான் பிரிவு, சபா மாநிலத்தின் வடகிழக்கு கடற்கரையில் இருந்து மாநிலத்தின் மத்தியப் பகுதி வரை குறுக்காக நீண்டுள்ளது. 28,205 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், சபா மாநிலத்தில் 38.3% நிலப் பகுதியைக் கொண்டு உள்ளது. மேலும் இந்தப் பிரிவு சபாவின் ஐந்து நிர்வாகப் பிரிவுகளில் மிகப் பெரிய பிரிவு ஆகும்.
சபாவின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 19.4% மக்களைக் கொண்டது. பெரும்பாலும் சீனர்கள், ஒராங் சுங்கை, கடசான் - டூசுன், சுலுக் மற்றும் பஜாவ் ஆகிய இனக் குழுவினரைக் கொண்டது.[1]
சண்டக்கான் பிரிவில் முக்கிய நகரங்கள்: சண்டக்கான்; பெலுரான்; கினபாத்தாங்கான்; தெலுபிட் (Telupid); மற்றும் தொங்கோட் (Tongod). கோத்தா கினபாலுவுக்கு அடுத்தபடியாக சண்டாக்கான் துறைமுகம் இரண்டாவது பெரியது. இந்த துறைமுகம் மர ஏற்றுமதியின் முக்கிய நுழைவாயிலாகச் செயல்படுகிறது.[2]
சபா மாநிலத்தின் சண்டக்கான் பிரிவு பின்வரும் ஐந்து நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது:
சபா, சரவாக் மாநிலங்களின் தற்போதைய பிரிவு எனும் அமைப்பு முறை வணிகரும் தூதருமான ஜெர்மனியர் ஒருவரின் மூலமாகப் பெறப்பட்ட அமைப்பு முறையாகும். அந்த அமைப்பு முறை பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திடம் (North Borneo Chartered Company) இருந்து பெறப்பட்டது.[3][4]
இந்த முறையை அமைத்தவர் வான் ஓவர்பெக் பிரபு (Baron von Overbeck). அவர் உருவாக்கிய அந்த டிவிசன் முறை இன்று வரை தொடர்கிறது.
இந்தப் பிரிவு முறைமை, இன்றைய நிலையில் ‘பிரிவு’ எனும் முக்கியத்துவத்தை மட்டுமே கொண்டுள்ளது. மற்றபடி அதற்குச் சொந்தமாக நிர்வாக அதிகாரங்கள் எதுவும் இல்லை.
சபாவின் நகராட்சி நிர்வாகம், மாவட்ட அதிகாரிகளின் அதிகாரத்தில் இருப்பதால், முன்பு இருந்த ’ரெசிடெண்ட்’ (Resident's Post) பதவி ரத்து செய்யப்பட்டு விட்டது.