சதீஷ் நினாசம் | |
---|---|
Sathish at ROCKET movie title launch | |
பிறப்பு | சிவா எலதஹள்ளி, மண்டியா, கர்நாடகா, இந்தியா |
தேசியம் | இந்தியா |
மற்ற பெயர்கள் | சதீஷ் நினாசம் |
பணி | நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2008–தற்போது வரை |
சதீஷ் நினாசம் (Sathish Ninasam) என்ற தனது திரைப்பெயரால் அறியப்பட்ட சிவா,[1] கன்னடத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகராவார். மாதேஷா (2008) திரைப்படத்தில் அறிமுகமான சதீஷ், மனாசரே (2009), பஞ்சரங்கி (2010), லைஃபு இஷ்டேனு, டிராமா (2012) போன்ற படங்களில் சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்தார். 2013 ஆம் ஆண்டு லூசியா திரைப்படத்தில் இவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்ற பிறகு இவர் புகழ் பெற்றார்.[2]
சதீஷ் கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்திலுள்ள எலதஹள்ளி என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் ஆர்வம் கொண்டிருந்த இவர், அடிக்கடி வீட்டிலிருந்து அருகிலுள்ள திரையரங்குகளுக்கு சென்றுவிடுவார். இவரைக் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்துவர இவரது தாயார் இவரைத் தேடிவருவார்.[3]
கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தின் சாகராவில் உள்ள ஹெகோடுவை தளமாகக் கொண்ட "நினாசம்" என்ற கலாச்சார அமைப்பில் நாடக நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு நடிப்பதற்கு முன்பு, இவர் நடிப்பில் இரண்டு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்தார்.[4]
பூர்ணசந்திர தேஜஸ்வி, உ. இரா. அனந்தமூர்த்தி, கிரீஷ் கர்னாட் [[வில்லியம் சேக்சுபியர் ஆகியோரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட இவர், ஓர் "அர்த்தமுள்ள வாழ்க்கையை" நடத்துவதற்கான வேலையின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்.[3] படிப்பைத் தொடர்ந்து, 2006இல் பெங்களூரில் பணியாற்றத் தொடங்குவதற்கு முன்பு கர்நாடகா முழுவதும் நாடகங்களில் நடித்தார். பின்னர், பெங்களூரில் நாடகங்களை நிகழ்த்தி வந்த "சமஷ்டி தியேட்டர் குழும"த்தின் ஒரு பகுதியாக ஆனார்.
ஓராண்டு காலம் தொலைக்காட்சியில் பணியாற்றிய பின்னர், 2008 ஆம் ஆண்டில் "மாதேஷா"வில் ஒரு சிறு வேடம் (சிறப்புத் தோற்றம்) வழங்கப்பட்டபோது, திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நாடகத்தில் இவரது பாத்திரம் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான சிமா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், 2013 ஆம் ஆண்டில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உளவியல் நாடகத் திரைப்படமான "லூசியா"வில் இவரது பாத்திரத்திற்காகவே, விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் பாராட்டப்பட்டார். இது ஜூலை 2013இல் இலண்டன் இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் இவரது நடிப்பு இவருக்கு பாராட்டுகளைப் பெற்றத் தந்தது.