சந்திரபானு ஸ்ரீதம்மராஜா | |
---|---|
தாமிரலிங்க அரசு | |
ஆட்சிக்காலம் | 1230–1263 |
முடிசூட்டுதல் | 1230 |
பின்னையவர் | சாவகன் மைந்தன் |
யாழ்ப்பாண அரசு | |
ஆட்சிக்காலம் | 1255–1263 |
பின்னையவர் | சாவகன் மைந்தன் |
பிறப்பு | தாமிரலிங்கம், தாய்லாந்து |
மரபு | Savakan Lotus Dynasty |
மதம் | பௌத்தம் |
சந்திரபானு (ஆங்கிலம்: Chandrabhanu அல்லது Chandrabhanu Sridhamaraja; தாய்: จันทรภาณุ ศรีธรรมราช) என்பவர் தாய்லாந்து நாட்டில் இருந்த தாமிரலிங்க இராச்சியத்தை 1230-ஆம் ஆண்டில் இருந்து 1263-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அரசராவார்.
தென் தாய்லாந்தில் இவர் கட்டிய கோயில் மூலமும் பாண்டியர் கீழ் சில ஆண்டுகள் இலங்கையை ஆண்டதன் மூலமும் அதிகம் அறியப்படுகிறார். மகாவம்சத்தின் படி இவர் தற்போதைய தாய்லாந்து நாட்டின் தாமிரலிங்க அரசை ஆண்ட தமிழ் கடற்கொள்ளையர்களின் தலைவன் ஆவார்.
இவர் 1247-ஆம் ஆண்டில் இரண்டாம் பராக்கிரம்மபாகு என்னும் சிங்கள் அரசனை எதிர்த்து தோல்வி அடைந்தார். பின்னர் பாண்டியர் உதவியுடன் சில ஆண்டுகள் வட இலங்கையை ஆண்டு, சில ஆண்டுகள் கழித்து பாண்டிய பேரரசை எதிர்த்தான்.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டிய வேந்தன் தலைமையில் நடந்த போரில் (1262- 1264); இவர் இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் என்பவரால் கொல்லப்பட்டார். அதன் பிறகு இலங்கையிலுள்ள பாண்டியர் படையை எதிர்க்கும் கொள்கையும்; தாமிரலிங்க அரசை நிர்வகிக்கும் பொறுப்பும்; இவரின் மகனான சாவகன் மைந்தன் கீழ் வந்தன.
சந்திரபானுவின் மகனான சாவகன் மைந்தன் (கி.பி. 1255 - 1263) தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க இளவரசன் ஆவார். இவரின் தந்தையான சந்திரபானு தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க அரசராக இருந்து பின் 1250-களில் பாண்டியர் ஆட்சியின் கீழிருந்த இலங்கையின் மீது படை எடுத்தார்.[1]
அப்படை எடுப்புக் காலத்தில் தாமிரலிங்கத்தை ஆண்ட இவரின் தந்தைக்கு உதவுவதற்கு இலங்கை வந்து அங்குள்ள இரண்டாம் பராக்கிரம பாகு என்ற சிங்கள அரசனால் தோற்கடிக்கப்பட்டான்.
பின் பாண்டியர் பேரரசனான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பவரிடம் இவரும் இவரின் தந்தையான சந்திரபானுவும் 1258-இல் பணிந்து அவனின் கீழ் வட இலங்கையை ஆண்டனர். அந்தக் காலத்தில் பாண்டியனுக்கு வரியாக ஆபரணங்களும் யானைகளும் அனுப்பப்பட்டன.
இலங்கையின் செல்வ வளத்தை அறிந்த தாமிரலிங்கத்தினர் அதை அடைய எண்ணி பாண்டியப் பேரரசை எதிர்த்து போர் தொடுத்தனர். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தம்பியான இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் இவர்களை 1262-1264களில் எதிர்கொண்டு சாவகன் தந்தையான சந்திரபானுவைக் கொன்றான்.
அதை திரிகோணமலையில் பொறித்தும் வைத்தான். அதனால் சாவகன் தன் சேனையுடன் பின்வாங்கி மீண்டும் பாண்டியப் பேரரசை எதிர்க்கத் தருணம் பார்த்திருந்தான்.[2]
1270களில் தன் படைவலிமையை அதிகரித்து மீண்டும் பாண்டியர் சேனையுடன் போர் புரிந்து பாண்டியப் பேரரசனான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பவனால் தோற்கடிக்கப்பட்டான்.[3]
சாவகர் பாண்டிய அரசின் உதவி பெற்று வட இலங்கையை ஆண்டு பின் அவர்களின் மேலேயே போர் தொடுத்ததால், சாவகர் மீது நம்பிக்கை இழந்த பாண்டிய அரசு தன் அமைச்சனான குலசேகர சிங்கையாரியன் கீழ் ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற புதிய யாழ்ப்பாண அரச வம்சத்தை தொடங்கி வட இலங்கையை ஆள வைத்தது.[4] அதன் பின் சாவகனின் தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க அரசு மற்ற பக்கத்து அரசுகளால் துண்டாடப்பட்டது.[5]