சன்னசந்திரா | |
---|---|
ஆள்கூறுகள்: 12°58′46″N 77°45′49″E / 12.9795°N 77.7635°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 562157 |
சன்னசந்திரா (Channasandra) என்பது பெங்களூர் நகரின் கிழக்குப் பகுதியில், கடுகோடி நாகோண்டள்ளி, திருமலா செட்டி அள்ளி ஆகியவற்றை சுற்றுப்புறங்களாக கொண்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த சிற்றூர் பெங்களூர் நகரம் மற்றும் பெங்களூர் புறநகரத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இந்த ஊரானது நந்தி மலையிலிருந்து பாயும் தென்பெண்ணை ஆறு பாயும் ஏரியால் புறநகரில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இது மகாதேவபுரா (சட்டமன்றத் தொகுதி)க்கு உட்பட்டது. மேலும் இது ஏராளமான புலம்பெயர்ந்தோருடன் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியாக உள்ளது.
சன்னசந்திராவில் உள்ள மக்களில் பெரும்பான்மையானயானவர்கள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்கும் பசவரையும் (அனுபவ மண்டபத்தை நிறுவியவர்), கெம்பெ கவுடா (பெங்களூரை உருவாக்கியவர்) ஆகியோரை பின்பற்றுகிறவர்களாவர். வீரசைவ லிங்கத்து சமூகத்தினர் இப்பகுதியில் மிகுதியான எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களுக்கு அடுத்து ஒக்கலிகா (கௌடா) மற்றும் சத்திரிய சமூகத்தவர்கள் உள்ளனர். சவரம்மா, கத்தீரம்மா எனப்படும் பார்வதி அவதாரங்களையும், பசவா என்று அழைக்கபடும் சிவபெருமானின் நந்தியை கிராம மக்கள் போற்றி வழிபடுகின்றனர்.
பசவர் மற்றும் கிட்டூர் அரசி சென்னம்மாவின் சீடர்களின் நினைவாக இந்த கிராமத்திற்கு பெயரிடப்பட்டது. 1857 இல் நடந்த சுதந்திரப் போரின் போது, ஆங்கிலேயர்கள் சன்னசந்திராவை ஒயிட்ஃபீல்டில் புறக்காவல் நிலையம் அமைத்து கட்டுப்படுத்தினர். 1886 இக்குப் பிறகு, கோலார் தங்கச் சுரங்கத்தின் அதிகாரிகள் ஒயிட்ஃபீல்டில் தங்கி இருந்து பயணம் செய்தனர்.
1857 இல் நடந்த விடுதலைப் போரிலிருந்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிராக துணிச்சலுடன் போராடிய சென்னம்மாவின் பங்களிப்பிற்காக அவர் உள்ளூர் மக்களால் மிகவும் பாராட்டப்படுகிறார். ஆனால், அவளுடைய தியாகம் இன்றைய தலைமுறையினருக்கு அவ்வளவாகத் தெரியாது. இக்காலத்தில், சன்னசந்திரா என்ற பெயர் சென்னம்மாவைக் கௌரவிக்கும் விதமாக சென்னசந்திரா என மாற்றம், செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊரானது மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சன்னசந்திரா ஒயிட்பீல்ட் தொடருந்து நிலையத்திலிருந்து, 1.3 கிமீ தொலைவிலும், ஐடிபிஎல்லில் இருந்து 2.5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. நெக்சஸ் வணிக வளாகமானது இப்பகுதிலிருந்து வெறும் இரண்டு கிமீ தொலைவில் உள்ளது.
இந்த கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 598.25 எக்டேர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 900 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3,573 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1,756 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1,817 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 73.05% ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 78.43% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 67.48% என்றும் உள்ளது.[1]