சபிக்வா அபீபி (Shafiqa Habibi) ஒரு பத்திரிகையாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆர்வலர் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பெண் பத்திரிகையாளர்களை ஆதரிக்கும் பணிக்காகவும், 2004 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான் இராணுவத்தில் படைத்தளபதியாக இருந்த அப்துல ரசீத் தோஸ்தம் ஆட்சியின் போது இவர் ஆப்கானித்தானின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டதாலும் அறியப்படுகிறார்.
சபிக்வா அபீபி ஒரு உயர் ரகப் பின்னணியைச் சேர்ந்த அகமதுஜாய்பஷ்தூன் இனக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1] இவர் காபூலில் வளர்ந்தாலும், இவருடைய குடும்பம் லோகார் மாகாணத்தைச் சேர்ந்தது. 1966 ஆம் ஆண்டில், அபீபி காபூல் பல்கலைக்கழகத்தில் இதழியலில் பட்டம் பெற்றார். இவர் ஆப்கானித்தான் அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய மக்மூத் அபீபியை மணந்தார். இவர் வகித்த பதவிகளில் மன்னர் ஜாஹிர் சாவின் தகவல்துறை அமைச்சர் மற்றும் முகமது நஜிபுல்லா அதிபராக இருந்த காலத்தில் ஆப்கான் செனட்டின் தலைவர் ஆகியவையும் உள்ளடங்கும். 1992 ஆம் ஆண்டில் முஜாஹிதீன்கள் காபூலின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியபோது, இவரும் இவரது கணவரும் மசார்-ஈ-சரீப்புக்குச் சென்றனர். 2001 ஆம் ஆண்டில் காபூலில் அமெரிக்கா குண்டு வீசத் தொடங்கியபோது, அபீபி பாக்கித்தானில் உள்ள பெசாவர் நகருக்கு தப்பிச் சென்றார்.
பட்டம் பெற்ற உடனேயே, அபீபி ஆப்கானித்தான் வானொலியில் வேலை செய்யத் தொடங்கினார். இவர் தொலைக்காட்சியில் கவிதைகளையும் படித்தார். [2] [3] இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், பெண்கள் பத்திரிகையாளர் மையத்தின் நிறுவனராகவும் இருந்தார். [4] அக்டோபர் 2016 நிலவரப்படி, அபீபி ஆப்கானிஸ்தான் பெண்கள் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். [5]
1994 ஆம் ஆண்டில், அபீபி பெண்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு அமைப்பை நிறுவி, பெண் பத்திரிகையாளர்களை ஆதரித்தார். 1996 ஆம் ஆண்டில் தாலிபான் ஆட்சிக்கு வந்தபோது, இவர் செய்தி ஒளிபரப்பு செய்வது தடுக்கப்பட்டது. தாலிபான் அரசாங்கத்தின் ஐந்து ஆண்டுகளில், இவர் "கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பள்ளிகளை" ஏற்பாடு செய்தார். இப்பள்ளிகளில் பெண்கள் கைவினைப் பொருட்களை தயாரிக்கவும், விற்கவும் செய்யலாம். இவர் ஒரு நிலத்தடி பெண்கள் அமைப்பையும் நிறுவினார். [2] [3] ஆப்கானித்தானில் தாலிபான்கள் அதிகாரத்தைக் கொண்டிருந்தபோது, அபீபி பெண்களுக்காக 8 வீட்டுப் பள்ளிகளை இரகசியமாக நடத்தினார், இவை அரசாங்கத்திலிருந்து இரகசியமாக வைக்கப்பட்டன. 2001 ஆம் ஆண்டில் தாலிபான்கள் தூக்கியெறியப்பட்ட பிறகு, இவர் ஆப்கான் சுதந்திர மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றினார்.
2004 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான் இராணுவத்தில் படைத்தளபதியாக இருந்த அப்துல ரசீத் தோஸ்தம் ஆட்சியின் போது இவர் ஆப்கானித்தானின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். அந்த ஆண்டில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மூன்று பெண்களில் ஒருவராக இருந்தார்.[1] அபீபி பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்கும் அரசு சாரா நிறுவனமான நியூ ஆப்கானிஸ்தான் பெண்கள் சங்கத்தின் இயக்குநராக இருந்தார். ஆப்கானிஸ்தான் அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து அலட்சியமாக இருப்பதாகவும், இவ்வாறான அலட்சியமே இதுபோன்ற வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு காரணம் தான் என்றும் ஹபிபி கூறுகிறார். [6]
அபீபி மனித உரிமைகளுக்கான பிரச்சாரகராகவும் பொது அறிவுஜீவியாகவும் அறியப்படுகிறார். 2002 ஆம் ஆண்டில், இவர் இடா பி வெல்ஸ் பிரேவெரி இதழியல் விருதை வென்றார். 2002 ஆம் ஆண்டில், இலாப நோக்கற்ற அமைப்பான உமென்ஸ் இ நியூஸ், 2002 ஆம் ஆண்டில் அபீபியை "21 ஆம் நூற்றாண்டுக்கான 21 தலைவர்களுள்" ஒருவராகப் பெயரிட்டது. [7] 2005 ஆம் ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆயிரம் பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.