சப்னம் "மௌசி" பானோ (शबनम मौसी) ( "மௌசி" பெயர்ச்சொல். தமிழ்- "அத்தை") மத்தியப்பிரேதேச மாநிலத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருனராவார்.1998 ஆம் ஆண்டு முதல் 2003 ஆண்டு வரை இவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். (இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு தான் திருநங்கைகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.)
நல்ல வசதியான, சமூக நிலையில் உயர்தரப்பினராக கருதப்பட்ட பிராமண சமூகத்திலே காவல் துறை அதிகாரியின் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பிறப்பிலேயே ஊடுபாலினத்தவராக அடையாளம் காணப்பட்ட சப்னம், பெரும்பாலான திருனர்களைப் போலவே அவரது குடும்பத்தினரால் சிறு வயதிலேயே தத்துக்கொடுக்கப்பட்டார். சந்திர பிரகாஷ் என்ற ஆண் பெயரைக் கொண்டிருந்தாலும் முழுக்க முழுக்க திருநங்கைகளாலேயே வளர்க்கப்பட்ட சப்னம், இரண்டே ஆண்டுகள் தான் பள்ளியில் படித்துள்ளார். பள்ளியிலும் வெளியிடங்களிலும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான சப்னம், பள்ளியிலோ கல்லூரியிலோ பயிலவில்லை என்றாலும் பன்னிரெண்டு மொழிகளுக்கும் மேலாக கற்று வைத்திருந்தார். [1] [2] [3]
மற்ற திருநங்கைகளைப் போல பிச்சை எடுப்பதையோ வேறெந்த கீழ்த்தரமான வேலைகளைச் செய்வதையோ விரும்பாத சப்னம், திரைப்படத் துறையில் நுழைய முடிவு செய்து, அதன்படி அமர் அக்பர் அந்தோணி, குன்வாரா பாப் மற்றும் ஜனதா கா ஹவால்தார் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடிக்கத்தொடங்கினார். மேலும் பாரம்பரிய நடனத்தை முறையாக கற்றும் வைத்திருந்தார்.
சப்னம், பல்வேறு சமூக நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு, திருநங்கைகளின் நலனுக்காக பாடுபட்டார் ஆனாலும் பிற பொதுமக்களுடன் நெருங்கி பழகியுள்ளார். சமூகத்தில் நிலவும் சமூகக் கொடுமைகளிலிருந்து விடுபட, அரசியல் என்ற போர்க்களத்தில் நுழைவதுதான் ஒரே வழி என்று உணர்ந்த சப்னம், அதனடிப்படையில் 1998 ஆம் ஆண்டில் அவர் சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். மத்திய பிரதேசத்தில் உள்ள ஷாஹ்டோல் மாவட்டத்தில் உள்ள சோகாக்பூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
சட்டமன்ற உறுப்பினராக, ஊழல், வேலையின்மை, வறுமை மற்றும் பட்டினிக்கு எதிராக போராடுவதுடன், திருநங்கைகள், ஹிஜ்ராக்கள், திருநங்கையாக்கப்பட்டோர், எதிர்பால் ஆடை அணிபவர்கள் மற்றும் எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவைகளைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பணிபுரிந்துள்ளார்.
சப்னம் மீண்டும் 2012 ஆம் ஆண்டில் ராஷ்ட்ரிய விக்லாங் கட்சியின் (ஆர்விபி) வேட்பாளராக உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனாலும் பாஜகவின் ரகுநந்தன் சிங் பதவுரியாவிடம் தோல்வியடைந்துள்ளார்.
சப்னத்தின் முன்னுதாரணம், பாலியல் தொழிலாளர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் என இந்திய சமூகத்தின் விளிம்புகளில் வாழும் திருநங்கைகளின் பாரம்பரிய பாத்திரங்களைத் துறந்து, அரசியலில் ஈடுபடவும், 'பொது நீரோட்ட நடவடிக்கைகளில்' பங்கேற்கவும், நடனக் கலைஞர்கள், திரைப்பட நடிகைகள், அரசாங்க வேலைகள் என இந்தியாவில் உள்ள பல திருநங்கைகளை மதிக்கத்தக்க விதத்தில் தங்கள் வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுக்கவும் தூண்டியுள்ளது என்றால் மிகையே இல்லை.
2003 ஆம் ஆண்டில், மத்திய பிரதேசத்தில் திருநங்கைகள் ஒன்றிணைந்து "ஜீதி ஜிதாயி பாலிடிக்ஸ்" (ஜேஜேபி) என்ற பெயரில் தங்களுக்கான சொந்த அரசியல் கட்சியை நிறுவியுள்ளனர், இதன் அர்த்தம் 'ஏற்கனவே வெற்றி பெற்ற அரசியல்'. [4] என்பதாகும்
இவரது வாழ்க்கையை பின்பற்றி, 2015 ஆம் ஆண்டில் சப்னம் மௌசி என்ற இவரது பெயரிலேயே ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. [5]இப்படத்தை யோகேஷ் பரத்வாஜ் இயக்கி, ஷப்னம் மௌசியாக அசுதோஷ் ராணா நடித்துள்ளார்..
தற்போது சப்னம் நேரடி அரசியலிலிருந்து விலகியிருந்தாலும், இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பாலின ஆர்வலர்களுடன் எய்ட்ஸ்/எச்.ஐ.வி தொடர்பான விழிப்புணர்வு, உரிமைகள் போன்ற சமூக போராட்டங்களில் தொடர்ந்து தீவிரமாக பங்கேற்று வருகிறார்.