சமவயங்க சூத்திரம் | |
---|---|
தகவல்கள் | |
சமயம் | சமணம் |
காலம் | கி.மு. 300 |
பின்வரும் தொடரின் பகுதியாகும் |
சமணம் |
---|
![]() |
சமவயங்க சூத்திரம் (அண். கி.மு. 3ம்-4ம் நூற்றாண்டு)[1] என்பது சமண நூல்களின் 12 அங்கங்களில் நான்காவதாகும். இச் சூத்திரம் காந்தாரத்தைச் சேர்ந்த சுதர்மசுவாமியினால் தொகுக்கப்பட்டதாக நம்பப் படுகிறது. இப் பண்டைய நூல் சுவேதாம்பர சமணப் பிரிவினரின் புனித நூல்களில் ஒன்றாகும். இந் நூல் சமண மதத்தின் கருப்பொருட்களைத் தெளிவாக வரையறுக்கும் தகவல்களைக் கொண்டுள்ளது. கி.மு. 300 எழுதப்பட்ட இந்நூல், ஆகம சூத்திரங்கள் என அழைக்கப்படும், மகாவீரரின் போதனைகளைத் தாங்கிய நூற்தொகுதியின் ஒரு பகுதியாகும்.
சமவயங்க சூத்திரம், கணிதம் மற்றும் வானியல் தொடர்பான தகவல்களைக் கொண்டுள்ளது. துறவறம் மற்றும் ஆன்மிகம் பற்றி எண்கணித ரீதியிலான விளக்கத்தைக் கொண்டிருப்பது இந் நூலின் ஆர்வமூட்டும் விடயங்களில் ஒன்றாகும்.
கணிதம் - சமவயங்க சூத்திரம், இசுத்தானாங்க சூத்திரத்தின் தொடர்ச்சியைப் போலத் தோன்றுகிறது. மேலும், பருப்பொருட்களை 1 இலிருந்து 1 பில்லியன்வரை வரையறுக்கும் எண்சார் முறைகளையும் இது கொண்டுள்ளது.
வானியல்– இந் நூலில் மேரு மலை, சோதிசுசக்கர, சம்புத்வீப, சமணப் புனித நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அளவை முறைகள், சமண லோக, வெவ்வேறு வகையான உலகுகள், 7 நரகங்கள், லவணக் கடலில் ஏற்படும் நீர்மட்ட உயர்வுகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது. மேலும், 14 பூர்வங்கள் மற்றும் 12வது அங்கமான திருட்டிவாதம் பற்றியும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மிகவும் பண்டைய மற்றும் அதிகளவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள இந்நூல், சமண சமயத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளது. சமவயங்க ஆகமத்தில் கடவுளரின் ஆயுட்காலம் பற்றிய விவரிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இக் கடவுளர் மூச்சை உள்ளெடுத்து வெளிவிடுகின்ற காலப்பகுதிகள் தொடர்பிலான தகவல்களும் உள்ளன. இசுத்தானாங்க சூத்திரத்திலிருந்து வேறுபட்ட ஒரு கோணத்தில் சமண மதத்தின் அடிப்படைப் பருப்பொருட்களை வரையறுத்து பட்டியற்படுத்துகிறது. மேலும், இந்நூலில் தமிலி எழுத்துமுறை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பண்டைத் தமிழ் எழுத்து முறையான தமிழ்ப் பிராமி எழுத்துமுறையைக் குறிக்கும்.