சம்பா தேவி சுக்லா Champa Devi Shukla | |
---|---|
பிறப்பு | போபால், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பிள்ளைகள் | 5 |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2004) |
சம்பா தேவி சுக்லா (Champa Devi Shukla) என்பவர் இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியினைச் சார்ந்த சமூகப் போராளி ஆவர். இவர் 2004ஆம் ஆண்டில் ரசிதா பீ உடன் கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருதினைப் பகிர்ந்துகொண்டார். 1984 போபால் பேரழிவில் 20,000 பேர் கொல்லப்பட்டபோது, சுக்லாவும் ரசிதா பீயும் நீதிக்காகப் போராடினர். மேலும் விபத்திற்குக் காரணமான நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு எதிராகப் பிரச்சாரங்களையும் வழக்குகளையும் மேற்கொண்டனர்.[1]
1984 ஆம் ஆண்டு போபாலில் நடந்த யூனியன் கார்பைடு எரிவாயு பேரழிவு நிகழ்விலிருந்து தப்பியவர்களுக்கு நீதி கோரி பன்னாட்டுப் பிரச்சாரத்திற்குச் சம்பா தேவி சுக்லா, ரசிதா பீயுடன் தலைமை தாங்கினார். இந்தியாவில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் தொடங்கி, சுக்லா யூனியன் கார்பைட் நிறுவனம் (யு.சி.சி) மற்றும் அதன் கூட்டாளர் டவ் கெமிக்கல்ஸ் ஆகியோருக்கு எதிரான தனது போராட்டத்தை நியூயார்க் மற்றும் பிற அமெரிக்க நகரங்களின் தெருக்களில் மேற்கொண்டார், சம்பா மற்றும் பிற எதிர்ப்பாளர்கள் தாக்கல் செய்த தொடர் வழக்குகளில் டொவ் கெமிக்கல் கம்பெனி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.[2][3] முன்னாள் யூனியன் கார்பைட் தலைமை நிர்வாக அதிகாரி வாரன் ஆண்டர்சன் போபாலில் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கோரி இவர்கள் 2002ல் புது தில்லியில் 19 நாள் உண்ணாவிரதம் இருந்தனர்.[4][5]
சுக்லா, ரசிதா பீயுடன் இணைந்து பன்னாட்டு மையத்திற்கு போபால் பேரழிவினைக் கொண்டு சென்றமைக்காக 2004ஆம் ஆண்டு கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு வழங்கப்பட்டது.[6]
சுக்லா மத்திய அரசு அச்சகத்தில் பணிபுரிகிறார். இங்கு இவர் இளநிலை பைண்டர் ஆக உள்ளார்.[7] இவரது கணவர் 1997ல் புற்றுநோயால் மரணமடைந்த அரசு ஊழியர் ஆவார். மீதைல் ஐசோசயனேட் வாயு கசிவு காரணமாக சுக்லாவின் இரண்டு மகன்களும் உடல்நலக் கோளாறு காரணமாக இறந்தனர். மற்ற மூன்று குழந்தைகள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள், ஆனால் இவர்கள் யாரும் சாதாரண வாழ்க்கையை நடத்துவதில்லை.[2]