சம்ஸ்காரா | |
---|---|
இயக்கம் | பட்டாபிராம ரெட்டி மற்றும் சிங்கீதம் சீனிவாசராவ் |
தயாரிப்பு | பட்டாபிராம ரெட்டி[1] |
திரைக்கதை | கிரிஷ் கர்னாட் பட்டாபிராம ரெட்டி |
இசை | ராஜீவ் தரனாத் |
நடிப்பு | கிரிஷ் கர்னாட் பி. இலங்கேசு தஸ்ரதி தீக்சித் பி. ஆர். ஜெயராம் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி சினேகலதா ரெட்டி |
ஒளிப்பதிவு | டாம் கவுன் |
படத்தொகுப்பு | ஸ்டீவன் கர்ட்டவ் வாசு [2] |
விநியோகம் | ராம மனோகர சித்ரா |
வெளியீடு | 1970 |
ஓட்டம் | 113 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
சம்ஸ்காரா (கன்னடம்: ಸಂಸ್ಕಾರ) என்பது 1970 இல் வெளிவந்த ஒரு கன்னடத் திரைப்படமாகும். இதன் கதை உ. இரா. அனந்தமூர்த்தி எழுதிய சம்ஸ்காரா புதினத்தின் கதையாகும். இயக்கம், தயாரிப்பு பட்டாபிராம ரெட்டி.[3] இது கன்னடத்தின் துணிகரமான, திருப்பு முனையை ஏற்படுத்திய, ஒரு முன்னோடித் திரைப்படமாக கருதப்படுவதாக கூறப்படுகிறது. சம்ஸ்காரமா என்ற கன்னட மொழிச் சொல்லுக்கு சடங்கு என்பது பொருள் ஆகும்.[3][4][5] சிங்கீதம் சீனிவாச ராவ் இப்படத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார்.[6] சம்ஸ்காரா படம் 1970 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.[1] இப்படம் வலுவான ஒரு சாதி எதிர்ப்பு கருத்தைக் கொண்டதாக இருந்ததால் பொது சமூகத்தின் மத்தியில் அழுத்தங்கள் ஏற்படுத்துமோ என்று ஐயுற்று, படம் துவக்கத்தில் தணிகை வாரியத்தால் தடை செய்யப்பட்டது.[7] எனினும், அது பின்னர் வெளியிடப்பட்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் விருதுகளையும் வென்றது.
கர்நாடகத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள துவாரகசமுத்திரா என்னும் சிறிய கிராமத்தில் ஒரு தெரு அமைந்துள்ளது. அந்தத் தெருவில் வாழும் பெரும்பாலான மக்கள் மாத்வா சாதியினர் (ஒரு பிராமண சமூகத்தவர்).[8] இந்த அக்ரகாரத்தில் வாழும் பிராணே ஷாசார்யா (கிரிஷ் கர்னாட்) ஆச்சார சீலர். எல்லோருக்கும் குரு. தன் சரீர சுகத்தையே நிராகரித்து வியாதிக்கார மனைவியுடன் வாழ்பவர். அதே தெருவில் வசிக்கும் நாரணப்பா, அநாச்சாரமானவன். சாஸ்திரம் சொல்வதற்கு நேர்மாறான பழக்கவழக்கங்களுடன் சந்த்ரி என்ற தாசியுடன் வாழ்ந்தவன். அவன் செத்துப்போகிறான். அதுதான் கதையின் ஆரம்பம். சாவின் அதிர்ச்சியைவிட அக்கிரகாரம் மேற்கொள்ள வேண்டிய நியமம் தான் முக்கியமாகிப்போகிறது. அக்ரகாரத்தில் ஒரு சாவு நிகழ்ந்தால் சடலத்தை எடுத்துத் தகனம் செய்யும் வரையில் எவரும் உண்ணக் கூடாது. இறந்தவன் அநாச்சாரமானவன் என்று தகனம் செய்ய உறவினர்கள் மறுக்கிறார்கள். தகனம் செய்பவர்கள் செலவுக்கு இதை வைத்துக் கொள்ளலாம் என்று தனது நகைகளைத் தருகிறாள் சந்த்ரி. வீம்புடன் விலகியவர்கள் இப்போது தங்கம் கிடைப்பது தெரிந்ததும் பேச்சை எப்படி மாற்றிக்கொள்வது என்று சங்கடத்துடன் நெளிகிறார்கள்.
கடைசியில் பிராணேஷாசாரியாரிடம் பொறுப்பை விடுகிறார்கள். சாஸ்திரங்களை ஆராய்ந்து என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள், நாங்கள் காத்திருக்கிறோம் என்கிறார்கள். இந்தக் காத்திருப்பில் கதை பின்னுகிறது. எல்லோரும் கட்டிக் காத்துவந்த போலி நியமங்கள் பசியிலும் காற்று வேகத்தில் பரவிய தொற்று வியாதியிலும் குலைந்து போகின்றன. ஆச்சாரியர் காத்துவந்த சுய கட்டுப்பாடு சந்த்ரியின் ஸ்பரிசத்தில் காணாமல் போகிறது. பசி பொறுக்க முடியாமல் வேறுமடத்துச் சாப்பாட்டைச் சாப்பிடுகிறார். தர்மத்தைப் பற்றிச் சொல்லத் தமக்கு இனி அருகதை இல்லை என்று வெட்கமேற்படுகிறது. இதற்கிடையில் நாரணப்பாவின் சடலம் சந்த்ரியின் முஸ்லிம் நண்பர்களால் யாரும் அறியாமல் எரிக்கப் படுகிறது. அடுத்து என்ன என்ற கேள்வியுடன் கதை முடிகிறது. பல கேள்விகள் எழுப்பப்பட்டு இத்தகைய கேள்விகளுக்குப் பதிலை பார்வையாளரின் யூகத்துக்கே விடப்படுகிறது.