சர்பிராஸ் நவாஸ் மாலிக் ( பஞ்சாபி, உருது: سرفراز نواز ملک ) (பிறப்பு: டிசம்பர் 1, 1948) ஒரு முன்னாள் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் தலைகீழ் ஊசலாட்ட பந்துவீச்சினைக் முதன் முதலில் பயன்படுத்தியவராக அறியப்படுகிறார். மேலும் இந்தியத் துடுப்பாட்ட அணி மற்றும் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பாகிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்ட தொடரின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார்.[1] 1969 மற்றும் 1984 க்கு இடையில் அவர் 55 தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 177 தேர்வுத் துடுப்பாட்ட இலக்குகளைக் கைப்பற்றியுளார். இவரின் பந்துவீச்சு சராசரி 32.75 அகும். 1978-79 ஆம் ஆண்டில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப்போட்டியில் 86 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 9 இலக்குகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
1969 ஆம் ஆண்டில் இவர் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக கராச்சி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற தனது முதல் போட்டியில் இவர் இலக்கினைக் கைப்பற்றவில்லை. மட்டையாடும் வாய்ப்பும் இவருக்கு வழங்கப்படவில்லை.இதனால் அடுத்த மூன்று ஆண்டுகள் இவர் எந்தத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் இவர் தேர்வாகவில்லை[2] 1972-73 ஆம் ஆண்டில் சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 53 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து நான்கு இழக்குகளைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 56 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து நான்கு இழக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இயன் மற்றும் கிரெக் சாப்பல், கீத் ஸ்டாக்போல் மற்றும் இயன் ரெட்பாத் ஆகியோரின் இலக்கினைக் கைப்பற்றினார். இருந்தபோதிலும் இந்தப் போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 56 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[3] 1974 ஆம் ஆண்டில் எடிங்லேயில் நடைபெற்ற போட்டியில் பாக்கித்தான் அணி 209 ஓட்டங்களில் 8 இலக்குகளை இழந்து இருந்த சமயத்தில் இவர் 74 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து அணியின் ஓட்டங்களை அதிகரிக்க உதவினார். மேலும் அந்த சமயத்தில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களான ஜியோஃப் அர்னால்ட், கிறிஸ் ஓல்ட், மைக் ஹென்ட்ரிக், டோனி கிரேக் மற்றும் டெரெக் அண்டர்வுட் ஆகியோர் அந்தப் போட்டியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினர்.[4] 1974-75ல் கிளைவ் லாய்டின் மேற்கு இந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அவர் லாகூரில் உள்ள கடாபி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற 89 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஆறு இலக்குகளைக் கைப்பற்றினார்.இதன் மூலம் அந்த அணியினை 214 ஓட்டங்களில் ஆட்டமிழக்க உதவினார்.1978-79 ஆம் ஆண்டில் கராச்சி துடுப்பாட்ட அரங்கில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஆட்டப்பகுதியில் 89 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 70 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி எட்டு இலக்குகளில் வெற்றி பெற்றது.இந்தத் தொடரில் மொத்தமாக 17 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.[5] அந்தத் தொடரினை பாக்கித்தான் அணி வென்றது.
துடுப்பாட்டத்தில் இருந்து விலகிய பிறகு இவர் அரசியலில் சேர்ந்தார்.[6] 1985 பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் பஞ்சாப் மாகாண சபை உறுப்பினராக சுயாதீன வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
அவர் 1985 இல் பாகிஸ்தான் திரைப்பட நடிகை ராணி என்பவரை மணந்தார்.[6]