சர்வோதயக் கல்வி

காந்தியவாதியும், சுதந்திரப் போராளியும், நெய் தலிமின் நிறுவனரான ஸ்ரீ சித்த புஷான் ஹார்டி 1940 இல் பீகார் மாநிலத்தில் (தற்போது மேற்குவங்காளம்) உள்ள மன்ஹூம் மாவட்டத்தில் உள்ள மஜ்ஹிஹிரா என்ற கிராமத்திற்கு வந்தார், அங்கு அவர் மஜ்ஹிஹிரா தேசிய ஆதாரக் கல்வி நிறுவனத்தை (MNBEI) நிறுவினார்.[1]

நயி தாலிம் அல்லது சர்வோதயக் கல்வி (Nai Talim (இந்தி: नई तालीम, உருது: نئی تعلیم) என்பது அறிவும் உழைப்பும் தனித்தனியானவை அல்ல என்பதைக் கூறும் ஒரு கொள்கையாகும். இந்தக் கல்வியியல் கொள்கையின் அடிப்படையில் அதே பெயரில் ஒரு கல்விப் பாடத்திட்டத்தை மகாத்மா காந்தி ஊக்குவித்தார். [2]

இந்த சொற்றொடர் 'அனைவருக்கும் அடிப்படைக் கல்வி' என மொழிபெயர்க்கப்படுகிறது.[3] இருப்பினும், இது பல பொருள்களைக் கொண்டதாக உள்ளது. இது ஆங்கிலக் கல்வி முறை, காலனித்துவத்துடன் காந்திக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. அந்த வகையில் ஆங்கிலேயக் கல்விமுறையான மெக்காலே கல்வி, இந்தியக் குழந்தைகளை நேரடியான சமுதாயச் சூழ்நிலையிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் பிரித்துவிடுவதையும், அரசு மற்றும் தனியாருக்கு பணியாளர்களாக குமாஸ்தா கல்வி முறையால் மாற்றுவதையும் கண்டார். மேலும் இதனால் புதிய உயரடுக்கு வர்க்கத்தை உருவாக்கி உடல் உழைப்பிலிருந்தும் பிரித்து விடுகிறதை உணர்ந்தார். காந்தியக் கல்வி முறையானது குழந்தைகள் தங்கள் கைவண்ணத்தையும் கற்பனைத் திறனையும் காட்டும் தொழில் பட்டறைகளை அறிமுகம் செய்யும் கல்வியாக இருந்தது.

தனது கல்வித் திட்டத்தை மூன்றே வாசகங்களில் காந்தி விளக்கினார். ‘வாழ்க்கைக்கான கல்வி; வாழ்க்கை மூலம் கல்வி; வாழ்க்கை முழுவதும் கல்வி’ என்பவையே அவை. காந்தியக் கல்வியின் அடிப்படை தனி மனிதர்களைச் சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவதாகும்.[4]

கல்வி

[தொகு]

காந்தியின் இந்தக் கல்வி மாதிரியானது, சமூக ஒழுங்கைப் பற்றிய அவரது மாற்றுப் பார்வையை நோக்கியதாக இருந்தது: "எனவே, காந்தியின் அடிப்படைக் கல்வி, சிறிய அளவிலான சுயசார்பு சமூகங்களைக் கொண்ட ஒரு சிறந்த சமூகம் எனும் அவரது கருத்துருவாக்கமாகும். அத்தகைய சமூகத்தில் இருக்கும் ஒரு குடிமகன் கடின உழைப்பாளி, சுயமரியாதை மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட தனிநபராக இருக்க வேண்டும் எனக் கருதினார். ஆசிரியர்களும் வெறுமனே பாடத்திட்டங்களைக் கற்பிப்பவராக மட்டுமல்லாது ஆழ்ந்து சிந்திப்பவர்களாகவும் மாணவர்களுடன் உரையாட வேண்டும் எனவும் கூறுகிறார். "தன் மாணவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளாதவர் பயனற்றவராவார்" எனக் கூறுகிறார். ஓர் உண்மையான ஆசிரியர் தன்னை தனது மாணவர்களின் மாணவராகக் கருதி மாணவர்களுக்குக் கற்பித்தால், அவர்களிடமிருந்து அதிக நன்மைகளைப் பெறுவீர்கள்" என ஆசிரியர்கள் குறித்து காந்தி கூறுகிறார்.

காந்தியின் சீடரான வினோபா பாவே, சமூக மாற்றத்திற்கான ஒரு வழிமுறையாக இந்தக் கருத்தை பின்வருமாறு மேம்படுத்தினார்: இக்கருத்தின் முக்கிய அம்சம் கற்றல் மற்றும் கற்பித்தல், அறிவு மற்றும் வேலை ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளைக் கடப்பதாகும். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான உறவை மறுவரையறை செய்ய வேண்டியதன் அவசியத்தை வினோபா பின்வருமாறு வரையறுக்கிறார் "ஓர் ஆசிரியர் என்பவர் ஊதியத்திற்காக மட்டுமே கற்பிப்பவராக அல்லாமலும் திறனை வெளிப்படுத்தும் நோக்கில் செயல்பட வேண்டும். அதே சமயத்தில், மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து வாழ்வதற்கும், பணி செய்வதற்கும், வாழ்வில் முன்னேறுவதற்காகவும் கல்வி கற்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களைச் சக ஊழியர்களாகக் கருத வேண்டும் எனக் கூறினார். இதன்மூலம் மாணவர்கள் அறநெறியியல், வாழ்க்கை முறை, வாழ்வியல் திறன் உள்ளிட்ட திறன்களைப் பெறுவர் எனக் கருதினார்.[5]

சுழலும் சக்கரமானது சுதேசி மற்றும் தன்னிறைவைப் பிரதிபலிக்கிறது - நயி தாலிம் எனும் அடிப்படைக் கல்வி முறையானது மகாத்மா காந்தியால் புருலியாவின் மஜ்ஹிராவில் செயல்படுத்தப்பட்ட ஒரு கருத்து - ஆகஸ்ட் 2011.

முக்கிய அம்சங்கள்

[தொகு]
சுழலும் சக்கரம் சுதேசியத்தையும், தன்னிறைவையும் பிரதிபலிக்கிறது - புதியக் கல்வி - ஆதாரக் கல்வி முறை மகாத்மா காந்தியால் புருலியாவின் மஜ்ஹிராவில் நடைமுறைப்படுத்தபட்ட ஒரு கருத்து - ஆகஸ்ட் 2011.

காந்தியக் கல்வி ஆறு முதன்மைப் பகுதிகளைக் கொண்டது.

  • முதல் அம்சம் - ஏழாண்டு ஆதாரக் கல்வியை இலவசமாக அரசே தரத்தோடு வழங்க வேண்டும்.
  • இரண்டாவது அம்சம் - ஆதாரக் கல்வியானது முழுக்க முழுக்கத் தாய்மொழிவழிக் கல்வியாக இருக்கவேண்டும்.
  • மூன்றாவது அம்சம் - கைத்தொழில் மூலமோ, ஆக்கப்பணி மூலமோ கல்வி கற்றுத்தரப்படும்.
  • நான்காவது அம்சம் - பள்ளியின் சட்ட திட்டங்களிலிருந்து தாங்கள் கற்க வேண்டிய தொழில் உட்பட மாணவர்களே தீர்மானித்து சுயக்கட்டுப்பாட்டுடன் ஒரு சமூகமாகப் பள்ளியை வழிநடத்துவார்கள்.
  • ஐந்தாவது அம்சம் - தங்களது சூழலோடு பொருந்துகிற கல்வி.
  • ஆறாவது அம்சம் - குடிமைப் பயிற்சி. நாட்டின் உயர்ந்த லட்சியங்களாகக் காந்தி கருதிய மதச்சார்பின்மை, வாய்மை, நேர்மை, பொது வாழ்வியல், சமுதாயப் பங்கேற்பு, அகிம்சை வழியில் உரிமைகளைப் பெறும் வழிகளை அறிதல் என அவரது கல்வி விரிவடைகிறது.

வரலாறு

[தொகு]

காந்தியின் முதல் கல்விச் சோதனை தென்னாப்பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணை ஆசிரமத்தில் துவங்கியது.[6] தென் ஆப்பிரிக்காவிலிருந்து 1915 இல் இந்தியா திரும்பியவர் அன்றைய இந்தியக் கல்வித் திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்தினார். அதன் விளைவாக, புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கினார். அதன்படி 1917 இல் அகமதாபாத்தில் தன்னுடைய அடிப்படைக் கல்வி மற்றும் புதிய கல்வி எனும் கொள்கைகளின்படி புதிய பள்ளிகளைத் தொடங்கினார். இதே போன்று 1921 இல் குசராத்தில் குஜராத் வித்யா பீடம் என்ற பல்கலைக்கழகத்தை நிறுவினார்.[7] இதற்கு வெகுகாலத்திற்குப் பிறகு, விடுதலைப்போராட்ட வெப்பம் மிகுந்த காலத்தில் சேவாகிராமத்தில் வாழ்ந்தபோது, ‘ஹரிஜன்’ இதழில் நாட்டின் கல்வி குறித்து விரிவான ஒரு கட்டுரையை காந்தி எழுதினார். அதில் கல்விமுறையின் 10 பலவீனங்களைப் பட்டியலிட்டிருந்தார். அவை,[8]

  1. நமது மரபுக்கும் பண்பாட்டுக்கும் முரண்பட்டதாக இந்த மெக்காலே குமாஸ்தா கல்வி உள்ளது.
  2. இந்தக் கல்வி, குழந்தையை நேரடியான சமுதாயச் சூழ்நிலையிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் பிரித்துவிடுகிறது.
  3. கற்றவர்களைத் தனி இனமாக, பிரிவாக இன்றைய கல்வி உருவாக்கிவிட்டது.
  4. அரசு மற்றும் தனியார்க்குப் பணியாளர்களாக மாணவர்களை மாற்றுவதற்கான பயிற்சி மட்டுமே இன்றைய கல்வி.
  5. மாணவர்களின் மனத்தில் சமுதாய உணர்வு இன்றி சுயநல தனிமனித உணர்வு புகுந்துவிட்டது.
  6. ஒரு நூற்றாண்டாகத் தொடரும் இந்த அந்நியர் கல்வியில் தொடக்கப் பள்ளி என்பது எந்த முன்னேற்றமுமின்றி வதங்கிவிட்டது.
  7. கல்வித் திட்டத்தின் பெரும்பகுதி வாழ்க்கைக்குப் பயன்படாததாக வீணானததாக உள்ளது.
  8. பொதுமக்கள் கல்வி முன்னேற்றம் பற்றி இன்றைய கல்வி எண்ணிப்பார்ப்பதே கிடையாது.
  9. இயந்திர முறையில் ஒரே மாதிரி கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் - அவரவர் தேவை உணராமல் வழங்குகிறார்கள்.
  10. கல்விமுறையும் தேர்வுகளும் கல்வியை மாணவர்களின் உள்ளத்தில் பயத்தை உருவாக்கிப் பெரிய சுமையாகவே மாற்றிவிடுகிறது.

தேசியக் கல்வி மாநாடு

[தொகு]

பின்னர் காந்தி 1937 அக்டோபர் 22 இல் வர்தாவில் தேசியக் கல்வி மாநாட்டை கூட்டினார். அது இந்தியத் தேசியக் கல்வி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. கல்வியாளர் டாக்டர் ஜாகிர் ஹுசைன் தலைமையில் இந்தியக் கல்வி குறித்து முடிவுசெய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. வார்தா கல்வித் திட்டம் அல்லது ஆதாரக் கல்விக் கொள்கை அந்த கல்விக் குழுவால் பரிசீலித்து முன்மொழியப்பட்டது. பிறகு வர்தாவிலும் செகாவோனிலும் சர்வோதய மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. காந்தியின் மரணத்திற்குப் பிறகு அடிப்படை கல்வி மற்றும் முன்-அடிப்படை கல்விப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

ஒன்றிய அரசு அமைத்த தேசிய திட்ட ஆணையம் பல அடிப்படைகளில் காந்தியின் ஆதாரக் கல்வி முறை பார்வைக்கு எதிர்ப்பைப் தெரிவித்தது. நேருவின் அரசின் பார்வையானது நாட்டை தொழில்மயமாக்குவதையும், மையப்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொருளாதாத்தையும் கொண்டதாக இருந்ததால், இதில் காந்தியின் 'ஆதாரக் கல்வி' அல்லது சுய-ஆதரவு பள்ளிகளுக்கு இடமின்றி போனது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர அறிவுஜீவிகளாளலும், அரசியல் தலைவர்களாளும் ஆதரவளிக்கப்பட்டது.

கைவினைப் பொருட்கள்

[தொகு]

நமது பாரம்பரிய, காலனித்துவ கல்வி முறைகள் எழுத்தறிவு, உரை சார்ந்த அறிவையே வலியுறுத்தின. அவை உயர் சாதியினருக்குச் சாதகமாக இருந்தன. காந்தியின் கைவினைப் பொருட்களைத் தனது கற்பித்தலின் மையமாக்குவதற்கான முன்மொழிவு, "இந்தியாவின் கல்வி முறையில் தீவிர மறுசீரமைப்பை" கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதில், நூற்பு, நெசவு, தோல் வேலை, மட்பாண்டங்கள், உலோக வேலை, கூடை தயாரித்தல் போன்றவை மையமாக்கப்படும்.[9] கைவினைப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மற்றொரு நோக்கம் பள்ளிகளை நிதி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அரசிடமிருந்து சுயாதீனமாக மாற்றுவதாகும்.

அடிப்படைக் கல்வி - மேற்கோள்கள்

[தொகு]

“அடிப்படைக் கல்வி, நகரங்களிளோ அல்லது கிராமத்திலோ உள்ள குழந்தைகளோ எவராயினும் நம்மில் உள்ள சிறந்த மற்றும் நீடித்த திறன்களுடன் இணைக்கிறது.

“குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும் கைவினைப் பயிற்சி மூலம் உடல், மனம், ஆன்மாவின் முழுக் கல்வியையும் வழங்குவதே முக்கிய நோக்கமாகும்.” –மகாத்மா காந்தி

“நல்லது கெட்டது என்று பாகுபடுத்தி, ஒன்றை உள்வாங்கி மற்றொன்றைத் தவிர்க்கக் கற்றுக் கொடுக்காத கல்வி என்பது கல்வியாகாது.” –மகாத்மா காந்தி

“நாட்டின் விடுதலைக்காகவே வாழ்ந்து இறக்கத் தயாராக இருக்கும் உண்மையான சேவையாளர்களை உருவாக்குவதே பல்கலைக்கழகக் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.” –மகாத்மா காந்தி

“பள்ளிகளும் கல்லூரிகளும் உண்மையில் அரசாங்கத்திற்கான பணியாளர்களாக மாற்றுவதற்கான ஒரு தொழிற்சாலை.” –மகாத்மா காந்தி

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-23. Retrieved 2017-07-29.
  2. Richards, Glynn (1996), A Source-Book on Modern Hinduism, Routledge, ISBN 9780203990612
  3. Basic Education (Nai Talim)
  4. Dinabandhu Dehury: Mahatma Gandhi's Contribution to Education
  5. "Vimukt Shiksha #7". www.swaraj.org. Archived from the original on 2002-05-01.
  6. http://home.iitk.ac.in/~amman/soc748/sykes_story_of_nai_talim.html
  7. முனைவர் இரா. முரளி (3 அக்டோபர் 2017). "காலத்தின் தேவை கல்வியாளர் காந்தி!". கட்டுரை. தி இந்து தமிழ். Retrieved 3 அக்டோபர் 2017.
  8. ஆயிஷா இரா. நடராசன் (27 சூலை 2017). "காந்தியக் கல்வியும் மெக்காலேவாதிகளும்". கட்டுரை. தி இந்து. Retrieved 29 சூலை 2017.
  9. "Archived copy" (PDF). www.ibe.unesco.org. Archived from the original (PDF) on 3 October 2006. Retrieved 12 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளியிணைப்புகள்

[தொகு]

நை தாலிமின் கதை