சல்லக்சணவர்மன்

சல்லக்சணவர்மன்
சந்தேல மன்னன்
ஆட்சிக்காலம்சுமார் 1100–1110 பொ.ச
முன்னையவர்கீர்த்திவர்மன்
பின்னையவர்செயவர்மன்
அரசமரபுசந்தேல வம்சம்
தந்தைகீர்த்திவர்மன்

சல்லக்சண வர்மன் (Sallakshana-Varman; ஆட்சி சுமார் 1100-1110 கிபி) இந்தியாவின் சந்தேல வம்சத்தின் அரசனாவான். இவன் தனது தந்தை கீர்த்திவர்மனுக்குப் பிறகு செகசகபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்திலுள்ள புந்தேல்கண்ட்) ஆட்சியாளரானான். பரமாரர்கள், கன்னோசி ஆட்சியாளர்கள், திரிபுரியின் கலச்சூரிகள் ஆகியோருக்கு எதிராக இவன் பெற்ற வெற்றியை இவனது சந்ததியினர் கல்வெட்டுகளில் பொறித்துள்ளனர்.

இராணுவ வாழ்க்கை

[தொகு]

சல்லக்சணனின் வழித்தோன்றலான மதனவர்மனின் பகுதியளவு மட்டுமே அறியக்கூடிய மவூ கல்வெட்டு, "அந்தர்வேதி" பகுதியில் நடந்த இவனது வெற்றிகரமான போர்களைப் பற்றி கூறுகிறது. கன்னோசியை மையமாகக் கொண்ட கங்கை , யமுனை ஆறுகளுக்கு இடையே உள்ள நிலத்திற்கு "அந்தர்வேதி" என்ற பெயர் இருந்ததாக காஷ்மீர பண்டிதர் கல்கணரின் எழுத்துக்கள் தெரிவிக்கின்றன. [1] கல்வெட்டுகள் துண்டு துண்டாக இருப்பதால், வெவ்வேறு அறிஞர்கள் அதை வெவ்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர். அலெக்சாண்டர் கன்னிங்காம், சல்லக்சணனின் படைகள் இந்த பகுதியில் ஒரு சிறிய தாக்குதலை நடத்தியதாக நம்பினார். எச். சி. ரே, என்ற வரலாற்றாசிரியர், இவனது முற்றுகையை நிறுத்துவதற்கு முன்பு கன்னோசி ராட்டிரகூட இளவரசனுடன் (ஒருவேளை கோபாலன் அல்லது அவனது முன்னோடிகளில் ஒருவருடன்) சண்டையிட்டான் என்று ஊகித்தார். எஸ். கே. மித்ரா, கன்னோசியைக் கைப்பற்ற முயன்று இவன் தோல்வியடைந்ததாகக் கருதினார். மறுபுறம், டி. சி. கங்குலி, சந்தேலர்கள் கன்னோசின் ஆட்சியாளர்களை தோற்கடித்ததாக முன்மொழிந்தார். இது பின்னர் ககடவலர்களால் ஆளப்பட்டது. ககடவலர்கள் சந்தேல பிரதேசத்தின் மீது படையெடுத்ததாக என். எஸ். போஸ் கருதினார். [2] [3]

சல்லக்சணவர்மனைப் பற்றி அவனது வழித்தோன்றல் வீரவர்மனின் மனைவி கல்யாணிதேவியின் அஜய்கர் பாறைக் கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் படி, சல்லக்சணனின் வாள் "மால்வாக்களையும் சேடியர்களையும் அதிர்ஷ்டத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றது". மால்வாக்களுக்கு எதிரான வெற்றி பரமார மன்னன் நரவர்மனுக்கு எதிரான தாக்குதலாக இருக்கலாம். சேடிகளுக்கு எதிரான வெற்றி ( திரிபுரியின் கலச்சூரிகள் ) ஒருவேளை கலச்சூரி மன்னன் யசகர்ணனுக்கு எதிரான ஒரு வெற்றியைக் குறிக்கிறது." [4]

இரதன்பூரின் கலச்சூரி மன்னன், செசல்ல தேவனின் பொ.ச. 1110 தேதியிட்ட ஒரு கல்வெட்டு, அவன் செசகபுக்தியின் ஆட்சியாளனால் "ஒரு நண்பரைப் போல மதிக்கப்பட்டான்" என்று கூறுகிறது. எஃப். கீல்ஹார்ன் இந்த செசகபுக்தி ஆட்சியாளரை சல்லக்சணனின் தந்தை கீர்த்திவர்மனுடன் அடையாளம் காட்டினார். ஆனால் வி. வி. மிராஷி, செசல்லாவில் கிடைத்த இவனது செப்பு நாணயங்களைப் பின்பற்றி இந்த ஆட்சியாளர் சல்லக்சணன் என்று நம்பினார். [5]

நிர்வாகம்

[தொகு]

மவூ கல்வெட்டு சல்லக்சண வர்மன், கலைகள் மற்றும் இலக்கியங்களில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்ததாகக் கூறுகிறது.[5] இவனது ஆட்சிக் காலத்தில் இவனது தந்தையின் தலைமை அமைச்சர் அனந்தன் தொடர்ந்து பதவி வகித்ததை இது குறிக்கிறது. அனந்தனின் சில மகன்களும் அரசனால் சோதிக்கப்பட்ட பின்னர் முக்கியமான பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.[6] அஜய்கர் கல்வெட்டு மற்றொரு அமைச்சர், கௌடா குடும்பத்தைச் சேர்ந்த யக்சபாலனைக் குறிப்பிடுகிறது.[7]

இவன் தங்கம் மற்றும் செப்பு நாணயங்களை வெளியிட்டான். சந்தேலக் கல்வெட்டுகளைப் போலல்லாமல், இந்த நாணயங்கள் இவனது பெயரை "ஹல்லக்சண-வர்மன்" ( சிறீமத்-ஹல்லக்சண-வர்ம-தேவன் ) என்று குறிப்பிடுகின்றன. இதன் சரியான காரணம் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், இந்த ஒழுங்கின்மை திறமையற்ற நாணயமாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம். [8]

இவனது வழித்தோன்றலான பரமார்திதேவனின் செப்புத் தகடு கல்வெட்டு "சல்லக்சண-விலாசபுரம்" என்ற இடத்தைக் குறிப்பிடுகிறது. இந்த இடம் அநேகமாக சல்லக்சணவர்மனின் பெயரால் பெயரிடப்பட்டிருக்கலாம். மேலும் இது ஜான்சிக்கு அருகிலுள்ள நவீன பச்சார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.[7] சல்லக்சணவர்மனுக்குப் பிறகு இவனது மகன் செயவர்மன் ஆட்சிக்கு வந்தான்.[7]

சான்றுகள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  • P. C. Roy (1980). The Coinage of Northern India. Abhinav. ISBN 9788170171225.
  • R. K. Dikshit (1976). The Candellas of Jejākabhukti. Abhinav. ISBN 9788170170464.
  • Sisirkumar Mitra (1977). The Early Rulers of Khajurāho. Motilal Banarsidass. ISBN 9788120819979.