சவிதா பேகென் | |
---|---|
பிறப்பு | 23 சனவரி 1919 ரோக்தாசு, ஜூலம் மாவட்டம், இந்தியா |
இறப்பு | 10 மார்ச் 2009 இந்தியா |
பணி | சமூக சேவகர், கல்வியாளர், அரசியல்வாதி |
அறியப்படுவது | பெண்களுக்கு அதிகாரமளித்தல் |
விருதுகள் | பத்மசிறீ |
சவிதா பேகென் (Savita Behen) ஓர் இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், கல்வியாளர் மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ஆவார்.[1][2] அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை ஆதரிப்பதாக அறியப்பட்ட இவர், 1990ஆம் ஆண்டில் சமத்துவ ஜனநாயக குழுமத்தினால் உலகின் 3300 புகழ்பெற்ற வாழும் பெண்களில் ஒருவராகப் பட்டியலிடப்பட்டார்.[3][4] 1971ஆம் ஆண்டில் இந்திய அரசால் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[5]
பெகென் 23 சனவரி 1919 அன்று முந்தைய பிரித்தானிய இந்தியாவின் ஜீலம் மாவட்டத்தில் உள்ள ரோஹ்தாசில் பிறந்தார்.[6] தற்போது இந்த இடம் பாக்கித்தானில் உள்ளது.[7] இவர் லாகூரில் உள்ள அரசு கல்லூரி மற்றும் சிம்லாவில் உள்ள பி. எல். கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.[8] இளம் வயதிலேயே இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் சேர்ந்த இவர், சமூகப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். 1944ஆம் ஆண்டில் மகளிர் சேவிகா தளத்தை நிறுவினார். பின்னர், தில்லியில் தலித் வயது வந்தோர் கல்வி மையம் மற்றும் பெண்களுக்கான தையல் மற்றும் தொழில்துறை மையங்களை நிறுவினார்.[9] அரிஜன் மற்றும் தலித் குழந்தைகளுக்காக மூன்று பள்ளிகளையும் நிறுவினார்.[10][11]
பெகென் அகதிகள் விதவை பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும், அகதிகள் பெண்களுக்காக இரண்டு தொழில்துறை மற்றும் கல்வி மையங்களை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார்.[12][13] இந்திய மகளிர் குழுவில், தில்லி மகளிர் நலச் சங்கம் மற்றும் புது தில்லியின் பெரும் வணிக கூட்டுறவுக் கடைகள் நிறுவனம் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்தார். இவர், தில்லி நகராட்சி குழுவின் முதல் பெண் துணைத் தலைவராகவும் இருந்தார். இந்த பதவியை இவர் 1956 முதல் 1957 வரை வகித்தார்.[14][15] 1962 முதல் 1966 வரை பஞ்சாப் சட்டமன்றத்தின் முன்னோடியான பஞ்சாப் சட்டமன்றக் குழுவில் பணியாற்றினார்.[16][17] 1972ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இப்பதவிக்குத் தில்லியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1978ஆம் ஆண்டு வரை இந்த சபையில் பணியாற்றினார்.[18][19] ஓமியோபதி குழுவினை நிறுவுவதற்காக இந்திய நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவில் பரிந்துரைக்கப்பட்ட 15 உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[20]
பெகென் ஆந்திரப் பிரதேசத்தின் வாரங்கல் பிராந்தியத்திற்கான பிரம்ம குமாரியின் உலக ஆன்மீக பல்கலைக்கழகத்தின் ராஜ்யோகா கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் வணிக மற்றும் தொழில்துறை பிரிவின் மண்டல ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.[21][22] 1971ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1990ஆம் ஆண்டில் 3300 புகழ்பெற்ற வாழும் பெண்களில் ஒருவராக இவரைச் சமத்துவ குடியரசு குழு பட்டியலிட்டது.[23]
தனது 90வது வயதில் 2009 மார்ச் 10 அன்று இறந்தார்.[2][7]