சவுத்ரி அஸ்லாம் கான் (ஆங்கிலம் : Chaudhry Aslam Khan) இவர் ஒரு பாக்கித்தான் காவல்துறை அதிகாரி ஆவார். இவர் குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர். 2014 இல் அவர் கராச்சியில் தலிபான்களால் படுகொலை செய்யப்பட்டார்.
அஸ்லாம் 1987 ஆம் ஆண்டில் நிலைய அதிகாரியாக சிந்து காவல் படையில் சேர்ந்தார் மற்றும் மாகாண ஒதுக்கீடு காரணமாக கராச்சி மற்றும் பலுசிஸ்தானில் பல காவல் நிலையங்களில் பணியாற்றினார். 1992-1994 மற்றும் 1996-1997 ஆம் ஆண்டுகளில் என்கவுன்ட்டர் நிபுணராக பணியாற்றியதற்க்காக சவுத்ரி அஸ்லாம் புகழ் பெற்றார். இதனால் சவுத்ரி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு 2004 இல் மீண்டும் சேவைக்கு வந்தார், இலக்கு கொலையாளிகளை ஒழிக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் எல்.டி.எஃப் (லியாரி டாஸ்க் ஃபோர்ஸ்) ஐ வழிநடத்தவும், லியாரி நகரில் குண்டர் குழுக்களின் சண்டையை முடிக்கவும் உத்தரவிடப்பட்டது. 2005 முதல் 2014 வரை சவுத்ரி அஸ்லாம் கேங்வார்-குற்றவாளிகள், இலக்கு கொலையாளிகள் மற்றும் பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான், பலுசிஸ்தான் விடுதலை இராணுவம், முத்தாஹிதா குவாமி இயக்கம்,, அவாமி தேசிய கட்சி, லஷ்கர்-இ-ஜாங்வி, லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் சிபா-இ-சஹாபா பாகிஸ்தான் போன்ற பயங்கரவாதிக் குழுக்கள் ஆகியவற்றை அடக்குவதில் தீவிரமாக ஈடுபட்டார். 2014 9 ஜனவரி அன்று, பாக்கித்தான் தெஹ்ரிக்-இ-தலிபானால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் அவர் கொல்லப்பட்டார். அஸ்லாம் படுகொலைக்கு இந்திய உளவுத்துறையின் தலைவர் அனில் தாஸ்மனாவின் அறிவுறுத்தலின் பேரில் 2017 ல் பலூசிஸ்தானில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய உளவாளி குல்பூஷன் ஜாதவ் ஈடுபட்டதாக பாக்கித்தான் குற்றம் சாட்டியது .[1]
ஹசாரா பிரிவின் மன்சேரா மாவட்டத்தில் உள்ள தோடியலில் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் தனது தந்தையுடன் கராச்சிக்கு குடிபெயர்ந்தார்.[2]
2010 ஆம் ஆண்டில், குற்றவியல் புலனாய்வுத் துறையில் புலனாய்வு பிரிவின் தலைவராக அஸ்லம் நியமிக்கப்பட்டார்.[3]
2012 ஆம் ஆண்டின் 'லியாரி கிராண்ட் ஆபரேஷனில்' ஈடுபட்டதற்காக அஸ்லாம் ஒரு நற்பெயரை வென்றார். இந்தப்பணி குற்றவாளிகளின் பகுதியை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டது. [4]
2011 ஆம் ஆண்டில், கராச்சியின் பாதுகாப்பு கட்டம் VIII பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டின் மீது தலிபான் தாக்குதலில் இருந்து அவர் காயமின்றி தப்பினார். இந்த தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்தனர். அமைப்பின் பல போராளிகளை கைது செய்து கொலை செய்வது உட்பட, தங்களுக்கு எதிரான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பதிலடி என்று தாக்குதலுக்கு தாலிபான் பொறுப்பேற்றது. அந்த நேரத்தில், குண்டுவெடிப்பால் பாதி வீழ்ந்த வீட்டை எதிர்த்து நின்ற அஸ்லாம், "தான்தான் இலக்கு என்று தனக்குத் தெரியும், ஆனால் அது தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதிலிருந்து தன்னைத் தடுக்காது " என்று கூறினார்.. [5]
2014 9 ஜனவரி அன்று, கராச்சியில் உள்ள லியாரி அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது இவரது படையினரை குறிவைத்து ஒரு குண்டு வீசப்படது. அதில் அவருடன் பயனித்த காவலர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவருடன் அஸ்லாமும் இறந்தார். தடைசெய்யப்பட்ட பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தலிபானின் வேறு அமைப்பான மொஹ்மண்ட் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.[6] தாலிபான்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்காக அஸ்லம் குறிவைக்கப்பட்டதாக போராளிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் சஜ்ஜாத் மொஹமண்ட் தெரிவித்தார். "கராச்சியில் உள்ள குற்ற விசாரணைத் துறை மூலம் தாலிபான் கைதிகளை கொலை செய்வதில் அஸ்லாம் ஈடுபட்டிருந்தார், எங்கள் தாக்குதல் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்" என்று அவர் கூறினார்.[7]
பிரதமர் முஹம்மது நவாஸ் ஷெரீப், மூத்த காவல் துறைத் தலைவர் சவுத்ரி அஸ்லாம் மற்றும் அவருடன் கொல்லப்பட்ட மற்ற அதிகாரிகளை தியாகிகள் என்று பாராட்டினார், மேலும் இதுபோன்ற தாக்குதல்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சட்ட அமலாக்க அமைப்பைத் தடுக்காது என்றும் கூறினார்.[8] சவுத்ரி அஸ்லம் மற்றும் அவரது இரண்டு சகாக்கள் கொல்லப்பட்டதை எம்.க்யூ.எம் தலைவர் அல்தாஃப் உசேன் கண்டனம் தெரிவித்தார். "பாக்கித்தானில் மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுவதில் சவுத்ரி அஸ்லம் தீவிரமாக இருந்தார். அவர் பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக தைரியமாக நடவடிக்கைகளை மேற்கொண்டார் "என்று அல்தாஃப் உசேன் கூறினார்.