சாந்திதாசு சாவேரி | |
---|---|
![]() | |
பிறப்பு | 1580கள் |
இறப்பு | 1659 |
குடியுரிமை | முகலாயப் பேரரசு |
பணி | வர்த்தகர் மற்றும் பணக்காரர் |
பட்டம் | நகரத் தலைவர் |
சாந்திதாசு சாவேரி (Shantidas Jhaveri) (1580 கள்-1659) இவர் முகலாயர் காலத்தில் ஒரு செல்வாக்குமிக்க இந்திய நகைக்கடையாளராகவும், பொன் வர்த்தகராகவும், பணக்காரராகவும் இருந்துள்ளார். இவர், 17ஆம் நூற்றாண்டில் அகமதாபாத் நகரில் பணக்கார வணிகராக இருந்தார். [1]
இவர் மார்வார் பகுதியைச் சேர்ந்த ஆசுவால் சைன சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சகசுரா கிரண் 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆசியானில் இருந்து அகமதாபாத்திற்குக் குடிபெயர்ந்தார். [2] இவர் தனது தந்தையின் நகை சில்லறை வணிகத்தை விரிவுபடுத்தினார்.
இவர், முகலாய அரச குடும்பம், பிரபுக்கள் உட்பட பணக்காரர்களுக்கு நகைகளை சில்லறை விற்பனை செய்தார். பேரரசர் ஜஹாங்கீர் மற்றும் தாரா சிக்கோவின் அனுமதியின் பேரில் முகலாய அரச குடும்பத்திற்கு நகைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிடுகின்றனர். 1639ஆம் ஆண்டில், நூர் ஜகானின் சகோதரரும், மும்தாசு மகாலின் தந்தையான அசாப் கான் என்பவர் இவரிடமிருந்து அதிக அளவிலான நகைகளை வாங்கினார். அவர் இறந்த பிறகு, பேரரசர் ஷாஜகான் இவரிடம் நகைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பித் தருமாறு கட்டாயப்படுத்தினார்.
இவர் ஐரோப்பிய நிறுவனங்களுடனும் (பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமும் டச்சு கிழக்கிந்திய நிறுவனமும் ), பாரசீக மற்றும் அரபு வர்த்தகர்களுடனும் கிராம்பு போன்ற பொருட்களை வர்த்தகம் செய்தார். செப்டம்பர் 1635இல், இவரும் சூரத்து மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்த வேறு சில வணிகர்களும் தங்கள் பொருட்களை ஆங்கிலக் கொள்ளையர்களிடம் இழந்தனர். இவர் தனது செல்வாக்கையும் அரசியல் தொடர்புகளையும் பயன்படுத்தி இழப்பை மீட்டெடுத்தார். [3]
இவர் ஒரு பணக்காரராக மிகவும் செல்வாக்கு பெற்றிருந்தார். இந்தியாவில் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்கு கடன் கொடுத்த மூலதனத்தின் பெரும்பகுதி இவரது நெருங்கிய கூட்டாளியான விர்ஜி வோராவிடமிருந்து வந்தது. [4] இவர்கள் கூட்டணி இவருக்கு சிறந்த இலாபத்தையும், தங்கத்தின் மூலம் நல்ல வருவாயும் பெற்றுத்தந்து இவரை ஒரு செல்வந்தராக மாற்றின.
அரச குடும்பத்தின் நகைக்கடைக்காரராக, இவருக்கு முகலாய அரண்மனையின் அணுகல் இருந்தது. நவீன சமண பாரம்பரியப்படி பேரரசர் ஷாஜகான் இவரை மாமா (தாய்வழி மாமா) என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. [3] முகலாய பேரரசர்களான ஜஹாங்கீர், ஷாஜகான் மற்றும் ஔரங்கசீப் ஆகியோரால் இவருக்கு வழங்கப்பட்ட வணிக அனுமதி, முகலாய அரச குடும்பத்தினர் இவருடன் நல்ல உறவைப் பேணி வந்ததாகக் கூறுகின்றனர்.[1] ஜஹாங்கிர் இவருக்கு "நாகர்சேத்" (நகரத் தலைவர்) என்ற பட்டத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. [5] முகலாய அரசவையுடனான இவரது "சிறப்பு உறவுகள்" தொடர்பான இந்த அல்லது வேறு எந்த உரிமைகோரல்களையும் உறுதிப்படுத்த எந்தவொரு சரிபார்க்கக்கூடிய வரலாற்று ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
1645 ஆம் ஆண்டில், முகலாய இளவரசர் ஔரங்கசீப் குசராத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர், இவரால் கட்டப்பட்ட சிந்தாமணி பார்சவநாத் கோயிலைத் இடித்தார். பிரெஞ்சு பயணி ஜீன் டி தெவெனோட் (1666) என்பவரின் கருத்துப்படி, ஔவுரங்கசீப் கோவில் வளாகத்தில் ஒரு மாட்டை பலியிட்டார். கோவிலில் உள்ள அனைத்து சிலைகளின் மூக்கையும் அழித்தார். பின்னர் அந்த இடத்தை குவால்-உல்-இஸ்லாம் (இஸ்லாத்தின் வலிமை) என்ற மசூதி ஒன்றை நிறுவினார். [6] இவர் ஔரங்கசீப்பின் தந்தை பேரரசர் ஷாஜகானிடம் இதைப்பற்றி புகார் செய்தார். 1648 ஆம் ஆண்டில், பேரரசர் ஒரு கட்டடத்தை இவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவித்தார். மேலும் மிஹ்ராப்களுக்கும் (மசூதி சுவர்களில் உள்ள இடங்கள்) மற்றும் அசல் கோயில் கட்டிடத்தின் எஞ்சிய பகுதிகளுக்கும் இடையில் ஒரு சுவர் எழுப்பப்பட வேண்டும் என்று அறிவித்தார். மசூதி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் பக்கிரிகளை அகற்ற வேண்டும் என்றும், கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார். [7]
ஔரங்கசீப் பேரரசர் ஆன பிறகு, வணிக சமூகத்தில் இவரது செல்வாக்கை ஒப்புக் கொண்டார். 1657ஆம் ஆண்டில், ஷாஜகானின் மகன் முராத் பக்ச் இவருக்கு ரூ. 550,000 அளித்தார். ஷாஜகான் இறந்த பிறகு, ஔரங்கசீப் முராத்தை சிறையில் அடைத்தார். சாந்திதாஸ் புதிய சக்கரவர்த்தியிடமிருந்து தனது வணிகத்தை பாதுகாக்க முடிந்தது. ஏகாதிபத்திய திவான் ரஹ்மத் கானுக்கு கடன் மீட்டெடுப்பின் ஒரு பகுதியாக அரச கருவூலத்தில் இருந்து 100,000 ரூபாய் வழங்கினார். அகமதாபாத்தில் உள்ள வணிகர்களுக்கும் பிற குடிமக்களுக்கும் பேரரசரின் நல்லெண்ணத்தை தெரிவிக்கும்படி அவுரங்கசீப் ஒரு பர்மானை அனுப்பினார். [3]
குசராத்தி சமண சமூகத்திற்கும், சங்கங்களை நடத்துவதற்கும், சமணக் கோவில்களைப் பாதுகாப்பதற்கும் பக்தியுள்ள சமணரான இவர் ஒரு கணிசமான தொகையை செலவிட்டார். பள்ளிகள் அமைப்பதில் துறவிகளுக்கு உதவினார். சமகால சமசுகிருத ஆவணம், கையெழுத்துப் பிரதிகளை பராமரிப்பதில் மிகுந்த அக்கறை காட்டியதாகவும், துறவிகளை இலக்கியத்தை வளர்க்க ஊக்குவித்ததாகவும் கூறப்படுகிறது. [3]
1622 ஆம் ஆண்டில், இவர் அகமதாபாத்தின் சரசுபூரில் பார்சுவநாதர் கோயில் கட்டுமானத்தைத் தொடங்கினார். [6] இந்த கட்டுமானம் ரூ. 900,000 செலவில் 1638 இல் நிறைவடைந்தது. [8] [7] ஜெர்மன் சாகச வீரர் ஜோஹன் ஆல்பிரெக்ட் டி மண்டெல்ஸ்லோ போன்ற வெளிநாட்டு பயணிகளின் எழுத்துக்களில் இந்த கோயில் விவரிக்கப்பட்டுள்ளது. இவரது அறப்பணிகள் இவரது சொந்த சமண சமூகத்திற்கு அப்பால் நீடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
சமகால மத அரசியலிலும் இவர் பங்கேற்றார். அந்த காலத்தில், சுவேதாம்பர சமணப் பிரிவினுள் பல சமண பிரிவுகள் இருந்தன. இவர் சாகர் பிரிவைச் சேர்ந்தவர். இவரது நெருங்கிய நண்பரான சாகர் பிரிவின் துறவி முக்திசாகர் 1625 ஆம் ஆண்டில், இவர் கட்டிய சிந்தாமணி பார்சவநாத் கோவிலில் ஒரு சிலையை நிறுவினார். முக்திசாகர் ஒரு ஆச்சாரியராக (சமண ஒழுங்கின் மிக உயர்ந்த தலைவர்) ஆக வேண்டும் என்று இவர் விரும்பினார். ஆனால் அந்த கோரிக்கையை தப்பா பிரிவைச் சேர்ந்த மூத்த ஆச்சாரியர் விஜயதேவ சூரி மறுத்துவிட்டார். 1601 ஆம் ஆண்டில் விஜயதேவா ஆச்சாரியர் பதவிக்கு உயர்த்தப்பட்டதில் முக்கிய பங்கு வகித்த கம்பேவைச் சேர்ந்த வணிகர் சிறீமல்லாவின் உதவியை இவர் நாடினார். அவரது செல்வாக்கால் முக்திசாகர் 1630 ஆம் ஆண்டில் "ராஜசாகர்" என்ற பெயரில் ஆச்சாரியராக நியமிக்கப்பட்டார். [3] பின்னர், இவர் ஜலூரில் விஜயதேவ சூரி மற்றும் முக்திசாகர் (ராஜசாகர் சூரி) இடையே ஒரு சாத்திரத்தை (மத விவாதம்) திட்டமிட்டார். இவரது நோக்கம் இவரது பிரிவின் கௌரவத்தை உயர்த்துவதாக இருந்தது. (ஒருவேளை, தனது சொந்த செல்வாக்கை அதிகரிப்பதற்காகவும் இருக்கலாம்) ஆனால் முக்திசாகர் தைரியத்தை இழந்து விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்பே பின்வாங்கினார்.
சிலை வழிபாட்டை விமர்சித்த லோங்கா பிரிவுக்கு எதிராக இவர் புறக்கணிப்பை வழிநடத்தினார். செப்டம்பர் 1644 இல், லோங்காக்களுக்கு எதிராக ஒரு தடையை அமல்படுத்துவதில் இவர் தனது செல்வாக்கை செலுத்தினார். (கலப்புத் திருமணமும், சமபந்தி உணவும்). அகமதாபாத்தின் லோங்காக்கள் இதைப்பற்றி பேரரசர் ஷாஜகானிடம் புகார் செய்தனர். ஆனால் பேரரசர் இந்த விஷயத்தில் தலையிட மறுத்துவிட்டார். [3]
குசராத்தின் ஆளுநர் என்ற முறையில், ஷாஜகானின் மகன் முராத் பக்ச் 1656இல் பாலிதானா கிராமத்தை இவருக்கு வழங்கினார். [9] பாலிதானா கோயில்கள் பின்னர் சமணர்களின் முக்கிய யாத்திரை மையமாக உருவெடுத்தது.
இவரின் பேரனான குசால்சந்த் (1680–1748) ஒரு முக்கிய வணிகராக இருந்தார். மேலும் அகமதாபாத்தை சூறையாடலில் இருந்து காப்பாற்ற மராட்டியர்களுக்கு ஒரு மீட்புத் தொகையை செலுத்தினார். குசால்சந்தின் மகன் வாகாத்சந்த் (1740-1814) ஒரு குறிப்பிடத்தக்க தொழிலதிபர் ஆவார். நவீன இந்தியாவின் கஸ்தூரிபாய் லால்பாய் குடும்பம், அரவிந்த் ஆலைகளை சொந்தமாகக் கொண்டுள்ளது, குசால்சந்தின் பெரிய-பெரிய-பேரன் லால்பாய் தல்பத்பாய் மூலம் இவரது வம்சாவளியைக் கண்டறிந்துள்ளது. [10]