சாந்த் சிங் சத்வால் (Sant Singh Chatwal ) இவர் ஒரு இந்திய-அமெரிக்க தொழிலதிபர் மற்றும் ட்ரீம் விடுதிகளின் குழுமத்தின் நிறுவனரும் ஆவார். இவர் அக்குழுவின் தலைவராக உள்ளார். அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் செயல்படும் தி சத்வால், ட்ரீம் விடுதி, டைம் விடுதி மற்றும் பதிவுசெய்யப்படாத உணவகங்கள் உள்ளிட்ட ஏராளமான விடுதிகளை இவர் நிறுவியுள்ளார்.[1][2] 2010 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்ம பூசண் வழங்கி கௌரவிக்கபட்டார்.
சத்வால்,1947 ஆம் ஆண்டில் இந்தியப் பிரிவினையின் போது கிரேட்டர் இந்தியாவின் மேற்கு பஞ்சாப் மாகாணத்தை விட்டு வெளியேறிய ஒரு அகதி குடும்பத்தைச் சேர்ந்தவர்.[3] இவரது நான்கு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகளுடன் குடும்பம் வெளியேறும்போதுஇவருக்கு ஒரு வயதுதான் ஆகியிருந்தது. அவர்கள் இந்தியாவின் பஞ்சாபின் பரித்கோட்டில் குடியேறினர். அங்கு குடும்பம் சிறு வணிகர்களாக மாறியது. இவர் தனது 18ஆவது வயதில் இந்திய ஆயுதப் படையில் சேர்ந்தார். அங்கு சத்வாலின் கூற்றுப்படி, நாட்டின் முதல் மற்றும் ஒரே விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தில் போர் விமானியாக பணியாற்றினார். சத்வால் தனது குடும்பத்தின் சீக்கிய மதிப்புகளில் வளர்ந்தார்.[4]
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நாட்டின் வணிக விமானத்தில் பணியாற்ற சத்வால் இந்தியாவை விட்டு வெளியேறினார். இவர் அங்கு சென்றதும், இவரது தலைப்பாகையை கழற்றவும், தலைமுடியை வெட்டவும், தாடியை அகற்றவும் வேண்டும் என்று கூறப்பட்டது.[5] இவரது சீக்கிய பாரம்பரியம் காரணமாக இவர் இந்தச் செயலை மறுத்துவிட்டார்.[3] பின்னர் இவர் ஒரு உள்ளூர் பொதுப் பள்ளியில் ஆசிரியரானார். ஒரு உணவகத்தின் உரிமையாளருடன் நட்பு கொண்டார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது சில மாதங்கள் அவரது வணிகத்தை கவனித்துவர்மாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.[1] இவர் அந்த வணிகத்தை மேம்படுத்தினார். பின்னர் இவரது நண்பரால் ஒரு கூட்டாளராக மாறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். காலப்போக்கில் இவர் இந்திய உணவு வகைகளுக்கு சேவை செய்யும் இரண்டு உணவகங்களின் உரிமையாளரானார்.[6]
1975ஆம் ஆண்டில், இவர் தனது சில சேமிப்புகளுடன் நாட்டை விட்டு வெளியேறி கனடாவின் கியூபெக்கிலுள்ள மாண்ட்ரீலில் ஒரு உணவகத்தைத் திறந்தார்.[5] சத்வால் கனடாவில் இருந்தபோது விடுதி வணிகத்திலும் நுழைந்தார். 1976 இல் தனது முதல் விடுதியை வாங்கினார்.[1] 1979 ஆம் ஆண்டில், மிட் டவுன் மன்காட்டனில் முதல் சிறந்த உணவகமான இந்திய உணவகமான பம்பாய் அரண்மனையைத் திறந்தார்.[7] சத்வால் பம்பாய் அரண்மனையை சர்வதேச அளவில் விரிவுபடுத்தினார். இலண்டன், ஆங்காங் மற்றும் கனடாவில் உணவகங்களைத் திறந்து, இறுதியில் ஒரு பொது வர்த்தக நிறுவனமாக மாற்றினார்.[8]
அவர் தொடர்ந்து விடுதிகளை வாங்கினார். 1980 இல் புளோரிடாவிலும், 1982 இல் நியூயார்க்கிலும் சொத்துக்களைச் சேர்த்தார். பின்னர் இவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் ஆம்ப்சயர் உணவகங்கள் & விடுதிகள் என்பதில் இணைத்தார். 1990 களில் அசையாச் சொத்து வணிக நெருக்கடியால் அவதிப்பட்ட இவர் திவால்நிலை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் இவர் முதலீட்டாளர்களை கூட்டாளர்களாக கொண்டுவரத் தொடங்கினார். நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சர்வதேச அளவில் சொத்துக்களைத் திறப்பதில் கவனம் செலுத்தினார்.[8] 2006 ஆம் ஆண்டளவில், இவர் அமெரிக்காவின் மிகப் பெரிய விடுதிகளின் உரிமையாளராக இருந்தார். 13 விடுதிகளை 3,000 அறைகளுடன் 750 மில்லியன் டாலர் மதிப்பில் இயக்கி வந்தார்.[9]
சதவால் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நெருக்கமானவரானார். மேலும் அவரது தேர்தல் பிரச்சாரங்களுக்கும், ஜனநாயகக் கட்சியின் பிற பிரச்சாரங்களுக்கும் கணிசமான நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளார். அவர்களில் பல முக்கிய பிரதிநிதிகளுடன் இவர் நல்ல உறவுடன் இருக்கிறார். இவர் இந்தியாவுக்கு கிளின்டனுடன் பல பயணங்களில் சென்றுள்ளார். மேலும் வில்லியம் ஜே. கிளிண்டன் அறக்கட்டளையின் அறங்காவலர் ஆவார்.[10] ஏப்ரல் 2014 இல், கிளிண்டன் உட்பட மூன்று கூட்டாட்சி வேட்பாளர்களுக்கு 2007 மற்றும் 2011 க்கு இடையில் சட்டவிரோத பிரச்சார பங்களிப்புகளை வழங்கியதாக இவர் குற்றஞ்சாட்டபட்டார்.[6] அவருக்கு, 500,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சமூக சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.[11]
ஆம்ப்சயர் உணவகம் & விடுதிகள் 2015 இல் ட்ரீம் விடுதி குழுமம் என மறுபெயரிடப்பட்டது.[12] சதவால் அக்குழுவின் தலைவராக இருந்தார். அக்குழுவிற்கு ஒரு புதிய தலைமை நிர்வாக அதிகாரியும் தனியே நியமிக்கப்பட்டார்.[1][13]
2010 ஆம் ஆண்டில், அப்போதைய இந்தியக் குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் சத்வாலுக்கு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் கௌரவமான பத்ம பூசண் விருதை வழங்கினார்.[8]