சாலாக் செலாத்தான் | |
---|---|
Salak Selatan | |
கோலாலம்பூர் | |
ஆள்கூறுகள்: 3°6′6″N 101°42′20″E / 3.10167°N 101.70556°E | |
நாடு | மலேசியா |
கூட்டரசு நிலப்பகுதி | கோலாலம்பூர் |
நகர்ப்புறம் | பண்டார் தாசேக் செலாத்தான் |
நாடாளுமன்றத் தொகுதி | பண்டார் துன் ரசாக் |
அரசு | |
• நகராண்மை | கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 5710 0 |
மலேசியத் தொலைபேசி எண் | +6-03 22 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | W V |
இணையதளம் | www.dbkl.gov.my |
சாலாக் செலாத்தான், (மலாய்: Bandar Salak Selatan; ஆங்கிலம்: Salak South;) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் (Federal Territory of Kuala Lumpur) சுங்கை பீசி பகுதியில் உள்ள ஒரு புறநகரம். இந்தப் புறநகர்ப்பகுதி கோலாலம்பூர் பெருநகரின் தெற்குப் பகுதியில்; பெரு நகர மையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் கூச்சாய் லாமா, மற்றும் புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது.[1]
சாலாக் செலாத்தான் நகரத்தின் மையத்தில் உள்ள சாலாக் சாலை, நகரத்தின் முக்கிய வணிகச் சாலையாகும். 80-க்கும் மேற்பட்ட பழைய கடைகள் அங்கு வரிசையாக உள்ளன. அவை தொடக்ககால கடைகள்; ஏறக்குறைய நூறு ஆண்டுகள் பழமையானவை.[1]
1948 முதல் 1960 வரை 12 ஆண்டுகள் நீடித்த மலாயா அவசரகாலத்தின் போது பிரித்தானிய மலாயா நிர்வாகம் மலாயா தேசிய விடுதலை இராணுவத்திலிருந்து கிராம மக்களை தனிமைப்படுத்த வேண்டியிருந்தது. அதன் காரணமாக அப்போது 1952- இல் புதிய சாலாக் செலாத்தான் கிராமம் நிறுவப்பட்டது.[2]
சுங்கை பீசி விரைவுச்சாலை திறக்கப்படுவதற்கு முன்பு, சாலாக் சாலை மிகவும் பரபரப்பான சாலையாக இருந்தது. கோலாலம்பூரில் இருந்து செர்டாங் மற்றும் கிள்ளான் நகரங்களுக்குச் செல்லும் வாகனங்களுக்கு சாலாக் சாலைதான், அப்போது ஒரே வழியாக இருந்தது.
எனவே, அங்கு இன்றும் பல உணவகங்கள்; மளிகைக் கடைகள் மற்றும் வங்கிகள் உள்ளன. இருப்பினும், சுங்கை பீசி விரைவுச்சாலை திறக்கப்பட்டவுடன், கோலாலம்பூரின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளுக்குப் பயணிக்க, சாலாக் சாலை வழியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அத்துடன் முன்பு சாலாக் செலாத்தான் நகரத்தைச் சுற்றுப்பகுதிகளில் 4 கிராமங்கள் இருந்தன.
2000-க்குப் பிறகு அந்தக் கிராமங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடமாற்றம் செய்யப்பட்டன. அந்தக் கட்டத்தில், ஒவ்வொரு கிராமத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களும் இடம்பெயர்ந்தன. அந்த இடப்பெயர்வு, சாலாக் செலாத்தான் நகரத்தின் வணிகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல உணவகங்கள், மளிகைக் கடைகள் மற்றும் வங்கிகள் மூடப்பட்டன. சாலாக் செலாத்தான் பகுதியில் இருந்த் இரு கிராமங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு, அந்தப் பகுதி தற்போது பண்டார் செரி பரமேசுவரி என பெயர் மாற்றம் கண்டுள்ளது.
இந்த நகரில் ஒரு பெரிய இடைமாற்று தொடருந்து பேருந்து நிலையம் உள்ளது. இந்த நிலையம் பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தை பயன்படுத்தும் கேடிஎம் கொமுட்டர் கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகள்; செரி பெட்டாலிங் வழித்தடம் மற்றும் கேஎல்ஐஏ தொடருந்து சேவை ஆகியவற்றுக்கான நிறுத்தமாகவும்; பரிமாற்ற முனையமாகவும் செயல்படுகிறது.[3]
அத்துடன் கொமுட்டர் தொடருந்துகளுக்கும்; இலகு விரைவு தொடருந்துகளுக்கும்; மற்றும் நீண்டதூர பேருந்துகளுக்கும் ஒரு பல்வகை போக்குவரத்து முனையமாகவும் (Terminal Bersepadu Selatan) (TBS) இயங்குகிறது.
இருப்பினும், பயணப் பாதையை மாற்ற விரும்பும் பயணிகள் தங்களின் பயணச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும்; ஏனெனில் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் பயன்படுத்தப்படும் டிக்கெட் அமைப்பு வேறுபட்டது.[4] நவம்பர் 1, 2011 முதல், கோலாலம்பூரில் இருந்து இங்குள்ள பல்வகை போக்குவரத்து முனையத்திற்கு தொடருந்து சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
9-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம், தெற்கு நோக்கிச் செல்லும் விரைவுப் பேருந்துகளுக்கான போக்குவரத்து மையமாக மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகள் இங்கு மாற்றப்பட்டன. RM 570 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட பல்வகை போக்குவரத்து முனையம், 1 சனவரி 2011 முதல் இயங்குகிறது.