சிஃபி தொழில்நுட்ப நிறுவனம் (Sify Technologies Limited, முன்னதாக Sify Limited and Satyam Infoway Limited) (நாசுடாக்: SIFY) சென்னையிலிருந்து இயங்கும் ஓர் அகலப்பட்டை இணையச் சேவை வழங்கும் நிறுவனமாகும். 1998ஆம் ஆண்டு முதல் இது செயல்பட்டு வருகிறது.[1][2] இதன் வலைத்தளம் சிஃபி.கொமிற்கு 2008ஆம் ஆண்டில் வருகை புரிந்த 1.6 மில்லியன் பயனர்களில்[3] எழுபத்தைந்து விழுக்காடு[4] இந்தியாவிலிருந்து வந்தவர்களாவர். பார்ச்சூன் இதழ் 1999இல் இந்த நிறுவனத்தை "உலகளவில் முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படும் முதல் பத்து தலையாய தொழினுட்ப நிறுவனங்களில்" ஒன்றாக மதிப்பிட்டுள்ளது.[5]
இந்தியாவில் இணைய அணுக்கம் விஎஸ்என்எல்லின் தனியுரிமையிலிருந்து விடுவிக்கப்பட்டு தனியார்த்துறைக்கு திறக்கப்பட்டது. அப்போது இச்சேவையை வழங்கத் தொடங்கிய முதல் இந்திய நிறுவனங்களில் சிஃபியும் ஒன்றாகும். உலக வணிகரிடம் பன்னாட்டு அகலப்பட்டையைப் பெற்று உள்நாட்டு தொடர்புகளை தொலைதொடர்பு நிறுவறங்களிடமிருந்து பெற்று இச்சேவையை வழங்கியது; கடைசி மைலை அடைய பல்வேறு வழிகளைக் கையாண்டது: கூரை மேலான வை-ஃபை தொடர்புகள், தொலைபேசி கம்பிவடங்கள் அல்லது தொலைக்காட்சி கம்பிவடங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியது. மேலும் வணிக நிறுவனங்களுக்கானத் தேவையையும் வழங்கலாயிற்று. தொடரான இணைய உணவகங்களை கிளையுரிமம் வழங்கி நிறுவத் தொடங்கியது. இணையமும் விரைவு உணவுச்சாலையும் இணைந்த இவை இளைஞரிடையே மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றது. இன்று 3300+ இணைய உணவகங்கள் கொண்டுள்ளது.
2007ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தனது கிளைக்கு பதிவு பெற்றுள்ளது.