சிஞ்சியாங் என்பது வரலாற்று ரீதியாக காஷ்மீருக்கு வடக்கே உள்ள ஒரு பகுதியாகும். சிஞ்சியாங்கானது தியான் சான் மலைகளால் இரண்டாக பிரிக்கப்படுகிறது. தியான் சான் மலைகளுக்கு வடக்கே உள்ள பகுதி சுங்கரியா எனவும், தெற்கே உள்ள பகுதி தரிம் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது பெரும்பாலும் உய்குர் இன மக்களே வசிக்கின்றனர். 1884 ஆம் ஆண்டு இப்பகுதி சிஞ்சியாங் என்று பெயரிடப்பட்டது. அதன் பொருள் "புதிய எல்லை" என்பதாகும். அந்நேரத்தில் துங்கன் கிளர்ச்சிக்கு பிறகு சீனாவின் சிங் அரசமரபால் இந்த இரண்டு பகுதிகளும் கைப்பற்றப்பட்டன.
இப்பகுதிக்கு முதல் குடியேற்ற மக்கள் மேற்கில் இருந்து வந்தனர்.[1] தரிம் பள்ளத்தாக்கில் காணப்படும் தரிம் மம்மிக்களில் பழமையானவை கி.மு. 2000மாவது ஆண்டைச் சேர்ந்தவையாகும். அந்த நேரத்தில் இந்தோ-ஐரோப்பிய மக்களான தொச்சாரியர்கள் தரிம் பள்ளத்தாக்கில் வசித்தனர். கி.மு. முதல் 1000 ஆண்டுகளில் தரிம் பள்ளத்தாக்கில் இந்தோ-ஐரோப்பிய நாடோடிகளான யுவேசி மக்கள் வாழ்ந்தனர். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இப்பகுதியானது தற்போதைய மங்கோலியாவை மையமாக கொண்டிருந்த நாடோடி மக்களின் கூட்டமைப்பான சியோங்னு பேரரசின் ஒரு பகுதியானது.