சிடீவியால் கிளைகோசைடுகள்(Steviol glycosides) என்பவை தென் அமெரிக்காவின் சூரியகாந்திக் குடும்பத் தாவரம், சிடீவியா ரிபௌடியானாவின் இலைகளுக்கு இனிப்புச் சுவை கொடுப்பதற்குக் காரணமான வேதிச் சேர்மமாகும். சிடீவியா என்ற பெயரிலும் வேறுபல வர்த்தகப் பெயர்களிலும் விற்கப்படும் சர்க்கரைப் பதிலீடுகளில் முக்கியமான உள்ளடக்கப் பொருள்களாக அல்லது தயாரிப்பு முன்னோடிகளாக இவை உள்ளன. சிடீவியா பிளேபோபைலா போன்ற தொடர்புடைய பிற இனங்களிலும், உரூபசு சிங்கை போன்ற பூக்கும் தாவரங்களிலும் இவை கிடைக்கின்றன. சிடீவியாவின் பிற இனங்களில் இது கிடைப்பதில்லை.[1]
சிடீவியா ரிபௌடியானாவிலிருந்து கிடைக்கும் சிடீவியால் கிளைகோசைடுகள் சுக்ரோசை விட 30 முதல் 320 மடங்கு இனிப்பான இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த எண்கள் தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன[1][2]. வெப்பத்தில், அமிலக்காரத்தில் இவை நிலைப்புத் தன்மை கொண்டுள்ளன. மேலும் சிடீவியால் கிளைகோசைடுகள் நொதித்தலுக்கு உட்படுவதில்லை.[3] பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருப்பதால் இவை உணவுக் கூட்டுப்பொருள்களாகப் பயன்படுகின்றன. உடலுக்கு ஏற்றுக் கொள்ளும் அளவு, உடல் எடைக்கு ஏற்றபடி ஒரு நாளைக்கு 4மி.கி/கி.கி சிடீவியால் கிளைகோசைடுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[4]