பண்டிட் சிதேந்திர அபிசேகி | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | [1] மங்கேசி, போர்த்துகேய இந்தியா (தற்போதைய கோவா (மாநிலம்), இந்தியா) | 21 செப்டம்பர் 1929
இறப்பு | 7 நவம்பர் 1998 | (அகவை 69)
இசை வடிவங்கள் | பாரம்பரியம், அரை பாரம்பரியம், பக்தி, இசை நாடகம் |
தொழில்(கள்) | பாடகர், இசையமைப்பாளர், இசை ஆசிரியர் |
இசைத்துறையில் | 1929–1998 [2] |
இணையதளம் | Official site |
பண்டிட். சிதேந்திர அபிசேகி (Jitendra Abhisheki) (21 செப்டம்பர் 1929 - 7 நவம்பர் 1998)இவர் ஒரு இந்திய பாடகரும், பக்தி இசையின் இசையமைப்பாளரும், இந்தியப் பாரம்பரிய இசையின் அறிஞரும் ஆவார். இந்துஸ்தானி இசையில் இவர் தன்னை வேறுபடுத்திக் கொண்டாலும், 1960களில் மராத்தி இசை நாடகத்திற்கு புத்துயிர் அளித்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர், "தும்ரி, தப்பா, பஜனை மற்றும் பாவகீதம் போன்ற பிற இசை வடிவங்களில் தேர்ச்சி பெற்ற பாரம்பரிய இந்துஸ்தானி இசையின் முக்கியமானவர்களில் ஒருவர் என்று பாராட்டப்பட்டார். மராத்தி சங்கீத நாடகத்தில் இவரது பணி நன்கு அறியப்பட்டதாகும். " [3]
இவரது பெயரில் வருடாந்திர மகோத்சவம் நடைபெறுகிறது. கடைசியாக 2018 அக்டோபர் நடுப்பகுதியில் மகாராட்டிராவின் கோத்ருட்டில் உள்ள யசுவந்த்ராவ் சவான் நாட்டியகிருகாவில் நடைபெற்றது. [3] கோவாவில், உள்ளூர் கலா அகாடமியில் நடைபெற்ற ஒரு பண்டிட் சிதேந்திர அபிசேகி இசை விழாவும் 2018 இல் அதன் 14வது பதிப்பை எட்டியது. [4]
இவர் கோவாவின் மங்கேசியில் பிறந்தார். இவரது குடும்பம் பாரம்பரியமாக சிவபெருமான மங்கேசி கோயிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. இவரது தந்தை, பலவந்த்ராவ் என்கிற பிகாம்பட், தீனநாத் மங்கேசுகரின் சீடரும், கோவில் பூசகரும் ஒரு கீர்த்தங்கரரும் (கீர்த்தனைக் கலைஞர்) ஆவார். பாரம்பரிய இந்துஸ்தானி இசையின் அடிப்படைக் கொள்கைகளை ஜிதேந்திராவுக்கு பலவந்த்ராவ் கற்பித்தார். ஆக்ரா கரானாவின் ஜகன்னத்புவா புரோகித், குர்ஜா கரானாவின் அஸ்மத் உசேன் கான் மற்றும் ஜெய்ப்பூர் கரானாவின் குலுபாய் ஜஸ்தன்வாலா ஆகியோரிடமிருந்து இவர் குரலிசையில் கூடுதல் பயிற்சி பெற்றார்.
சமசுகிருத இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு, இவர் மும்பையில் உள்ள அகில இந்திய வானொலியில் சேர்ந்தார். இவர் பல இசைக்கலைஞர்களுடன் தொடர்பு கொண்டு, வானொலி நிகழ்ச்சிகளுக்கு பல பகுதிகளை இயற்றுவதன் மூலம் தனது இசை திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் பெற்றார். இந்த நேரத்தில், அஸ்மத் உசேன் கானின் கீழ் இந்துஸ்தானி இசையில் மேம்பட்ட பயிற்சிக்காக இந்திய அரசிடமிருந்து உதவித்தொகை பெற்றார்.
ஐஎம்டிபியின் தரவுகளின் படி, இவர் 2015 ஆம் ஆண்டு கத்யார் கல்ஜாத் குசாலி [5] திரைப்படத்தின் இசையமைப்பாளராக அறியப்படுகிறார்.
இவர் 25 மராத்தி நாடகங்களுக்கு குரல் மற்றும் பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். அறுபதுகளின் பிற்பகுதியில் ஓமி பாபா உதவித் தொகையைப் பெற்ற பிறகு, அமெரிக்காவில் சித்தார் கலைஞர் ரவி சங்கரால் நடத்தப்படும் ஒரு இசைப் பள்ளியில் கற்பித்தார். இவர் கலா அகாதமியுடனான தொடர்பு, அந்த மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் மூலம் தனது சொந்த நாடான கோவாவுடனான தனது உறவைப் பேணி வந்தார்.
தனது மகன் சௌனக் அபிசேகியைத் தவிர, இவரது நன்கு அறியப்பட்ட சீடர்களில் ஆஷா கதில்கர், தேவகி பண்டிட் , சுபா முட்கல், மோகன்குமார் தாரேகர், ஹேமந்த் பெண்ட்சே, அஜித் கட்கடே, இராஜா காலே, பிரபாகர் கரேக்கர், விஜய் கோபர்கர், மஜீர் துபர்கர், சமீர் மேர் துப்ளே, முனைவர் இருசிகேசு மசூம்தார், மகேசு காலே ஆகியோர் அடங்குவர்.