சித்தேசுவரன் கோவில் (Siddhesvara Temple) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவிலுள்ள ஆவேரி மாவட்டத்தில் ஆவேரி என்ற நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலாகும். இது பொ.ச.12ஆம் நூற்றாண்டின் மேலைச் சாளுக்கியக் கலைக்கு எடுத்துக்காட்டு என்று கருதப்படுகிறது. மேலும் இதில் இருக்கும் இந்து தெய்வங்களின் பல தளர்வான சிற்பங்களுக்கு நன்கு அறியப்பட்டதாகும். [1] எவ்வாறாயினும், கோயிலின் ஆரம்பம் 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்ததாக கல்வெட்டு சான்றுகள் தெரிவிக்கிறது. [2] கோயிலைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், அனைத்து சாளுக்கிய கோயிகளைப் போலல்லாமல் கிழக்கில் உதயமாகும் சூரியனை எதிர்கொள்வதற்குப் பதிலாக கோயில் மேற்கு நோக்கி உள்ளது. [3] இது தற்போது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சைவக் கோயிலாகப் பயன்படுத்தப்பட்டாலும், எந்த நம்பிக்கை அல்லது பிரிவினரால் கோயில் முதலில் பயன்படுத்தப்பட்டது என்றும், எந்த தெய்வம் இங்கு குடிகொண்டிருந்தன என்றும் வரலாற்றாசிரியர்களுக்கு உறுதியாக தெரியவில்லை. இந்த நிச்சயமற்ற தன்மை தெய்வங்களின் பல தளர்வான சிற்பங்கள் மற்றும் முதன்மை சுவர் உருவங்களின் சீரழிவிலிருந்து உருவாகியிருக்கலாம்.
சோப்புக் கல்லால் கட்டப்பட்ட சித்தேசுவரர் கோயில், [4] நகரத்தின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் இருந்து, ஆவேரி முதலில் நலபுரி என்று அழைக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன கர்நாடகாவின் பழமையான அக்ரஹாரங்களில் (கற்றல் இடம்) ஒன்றாகவும் இருந்துள்ளது. [5] பொ.ச. 1067 தேதியிட்ட ஒரு கல்வெட்டில் 400 பிராமணர்களுக்கு ஒரு கிராமம் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. [6] இந்தக் கோயில் ஆவேரிக்கு அருகிலுள்ள வேறு சில சாளுக்கியக் கோயில்களுடன் ஒத்திருக்கிறது. சௌதையாதானபுரத்தில் உள்ள முக்தேசுவரர் கோயில், அரலஹள்ளியில் உள்ள சோமேசுவரர் கோயில் மற்றும் நிரல்கியில் உள்ள சித்தராமேசுவரர் கோயில் போன்றவை. இந்த கோயிலின் முழு அடித்தளமும் சில அடிகளால் மண்ணில் மூழ்கிவிட்டதால், திறந்த மண்டபத்தில் நடக்கவேண்டியுள்ளது. [3]
இந்தக் கோயில் ஆரம்பத்தில் ஒரு வைணவக் கோயிலாக (விஷ்ணுவுக்கு) புனிதப்படுத்தப்பட்டிருக்கலாம், பின்னர் சமணர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கோவிலில் இருந்து சில உருவங்களை அகற்றியுள்ளனர். இறுதியில் சிவனை கடவுளாக வழிபடுவோர்களால் இது சைவக் கோவிலாக மாறியுள்ளது. [7] கோயிலின் கிழக்கு சுவரில் (பின்புற சுவரில்) சிறிய கீர்த்திமுகங்களுக்கு கீழே சூரியக் கடவுள் சூர்யதேவனின் உருவம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இருப்பினும், சிவனின் உருவம் செதுக்கப்பட்டு விமானத்துக்கும் முன் வைக்கப்பட்டுள்ளது. [3] ஒட்டுமொத்தமாக, கோவில் திட்டம் 11ஆம் நூற்றாண்டின் தரமான சாளுக்கியக் கட்டுமானத்தின் அனைத்து அடையாளங்களையும் திராவிடக் கட்டிடக்கலையின் அனைத்து பாணியையும் கொண்டுள்ளது. இதில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறு மண்டபங்களுடன் கூடிய அலங்கார கோபுரங்கள் சேர்க்கப்பட்டன. [8]