சினௌலி தொல்லியல் களம் | |
---|---|
இருப்பிடம் | சினௌலி, பரௌத், பாக்பத் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
ஆயத்தொலைகள் | 29°14′46″N 77°21′03″E / 29.24611°N 77.35083°E |
வகை | கல்லறை அரச குடும்பத்தினரின் இடுகாடு |
வரலாறு | |
கலாச்சாரம் | பிந்தைய அரப்பா காலம் (கிமு 1800 – கிமு 1300) |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 2005-06 2018 |
அகழாய்வாளர் | தி. வி. சர்மா எஸ். கே. மன்சூல் |
மேலாண்மை | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
சினௌலி தொல்லியல் களம் (Sinauli) (தேவநாகரி: सिनौली) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் மேற்கில் அமைந்த பாக்பாத் மாவட்டத்தில் பரௌத் அருகே அமைந்துள்ள தொல்லியல் களம் ஆகும்.[1][2]இத்தொல்லியல் களத்தில் வெண்கலக் காலத்திய திட-வட்டு சக்கர "இரதங்களுக்கு" புகழ் பெற்றது. ஆனால் இதன் இரதம் எனும் தேர் சக்கரங்களுக்கு ஆரங்கள் இல்லை.[3]உள்ளூர் புராணக் கதைகளின் படி, குருச்சேத்திரப் போரைத் தவிர்க்க, பாண்டவர் சார்பில், கிருஷ்ணர் துரியோதனிடம் கேட்ட ஐந்து கிராமங்களில் சினௌலியும் ஒன்றாகும்.[4]சினௌலில் தொல்லியல் களம் சிந்துவெளி நாகரிகத்தின் பிந்தைய அரப்பா காலத்தைச் (கிமு 1800 – கிமு 1300) சேர்ந்ததாகும்.
2005-06-ஆம் ஆண்டுகளில் மற்றும் 2018-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சினௌலியில் அகழ்வாய்வுப் பணி தொடங்கியது. அகழாய்வில் இவ்விடத்தில் பண்டைய அரச குடும்பத்தினரின் இடுகாடு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொல்லியல் அறிக்கையில் சினௌலி தொல்லியல் களம், பிந்தைய கால அரப்பா பண்பாட்டின் நீட்சியாக கருதப்பட்டது.
சினௌலி அரச குடும்பத்தினரின் 125 கல்லறை மரச் சவப்பெட்டிகள், மர வண்டிகள் (தேர்கள்), செப்பு வாட்கள் மற்றும் தலைக்கவசங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மர வண்டி போன்ற தேர்களின் தட்டு போன்ற சக்கரங்கள் செப்புத் தகட்டால் மூடப்பட்டிருந்தது. ஆனால் சக்கரங்களுக்கு ஆரங்கள் இல்லை. [3][5] ஆனால் அஸ்கோ பார்ப்போலா இந்த தேர்களை காளைகள் இழுக்கும் மர வண்டி என்று கூறுகிறார். சில தொல்லியல் அறிஞர்கள் தேருடன் சேர்த்து கண்டுபிடிக்கப்பட்ட சவுக்கை குறிப்பாக ஒரு குதிரையில் பயன்படுத்தப்பட்ட வகையே, ஆனால் ஒரு காளைக்கானது அல்ல என வலியுறுத்துகிறார்கள்.
டிசம்பர், 2018--இல் சினௌலியில் புதிதாக அகழாய்வுப் பணி மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அனுமதி வழங்கியது. தொழில் முறை அல்லாத தொல்லியலில் ஆர்வமுள்ளவர்கள் தற்போது சினௌலியில் அகழாய்வு செய்கின்றனர்.