சிபித்தாங் மாவட்டம் Sipitang District Daerah Sipitang | |
---|---|
ஆள்கூறுகள்: 5°5′N 115°33′E / 5.083°N 115.550°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | உட்பகுதி பிரிவு |
தலைநகரம் | சிபித்தாங் |
அரசு | |
• மவட்ட அதிகாரி | பெங்கீரன் ரயிமி அவாங்கு |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,732.5 km2 (1,055.0 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 37,828 |
• அடர்த்தி | 14/km2 (36/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
வாகனப் பதிவெண்கள் | SB |
இணையதளம் | ww2 |
சிபித்தாங் மாவட்டம்; (மலாய்: Daerah Sipitang; ஆங்கிலம்: Sipitang District) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். சிபித்தாங் (Sipitang Town) நகரம், சிபித்தாங் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
லோங் மியோ (Long Mio) மற்றும் லோங் பாசியா (Long Pasia) எனும் சுற்றுச்சூழல் சுற்றுலா கிராமங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இந்தக் கிராமங்களில் தங்கி ஓய்வு எடுப்பதற்காக சபா, சரவாக் மாநிலங்களில் இருந்து அதிகமானோர் வருகை தருகின்றனர். அதே நேரத்தில் சிந்துமின் (Sindumin) எனும் சிறிய நகரம் சரவாக் மாநிலத்தின் நுழைவாயிலாகவும் செயல்படுகிறது.
சபா, உட்பகுதி பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
1884-ஆம் ஆண்டு வரையில், சிபித்தாங் மாவட்டம், புரூணை சுல்தானகத்தின் (Sultanate of Brunei) முன்னாள் பிரதேசமாகும். நவம்பர் 5, 1884-இல், சிபித்தாங்; கோலா பென்யூ ஆகிய நிலப் பகுதிகளை பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு (North Borneo Chartered Company), அப்போதைய புரூணை சுல்தான் (Sultan of Brunei) விட்டுக் கொடுத்தார்.
12 செப்டம்பர் 1901-இல், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம், மெங்கலோங் (Mengalong) மற்றும் மெரந்தாமான் (Merantaman) பகுதிகளைக் கையகப் படுத்தியது.
அப்போது இந்தப் பகுதிகள் புரூணை சுல்தானகத்தின் பரம்பரை ஆட்சியாளரான பெங்கீரான் தெங்கா டாமித் பெங்கீரான் அனாக் பொங்சுவின் (Pengiran Tengah Damit Pengiran Anak Bongsu) மானியத்தின் மூலமாக பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு வழங்கப் பட்டன. இந்தப் பகுதிகள் இப்போது சிபித்தாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளன.[1][2]
1900-ஆம் ஆண்டு வரை, சிபித்தாங் ஆறு, வடக்கு போர்னியோவிற்கும் புரூணை சுல்தானகத்திற்கும் இடையிலான எல்லையாக இருந்தது. 1901-இல் சிபித்தாங் ஆற்றுக்கும் (Sipitang River) துருசான் ஆற்றுக்கும் (Trusan River) இடையே இருந்த நிலப்பகுதி பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தால் கையகப்படுத்தப் பட்டன.
அந்த நிலப்பகுதிக்கு கிளார்க் மாநிலம் (Province Clarke) என்று பெயர் வைக்கப்பட்டது. அப்போது சிப்பித்தாங்கில் ஆண்ட்ரூ கிளார்க் (Andrew Clarke) என்பவர் ஓர் உயர் இராணுவ அதிகாரியாக இருந்தார். அந்த வகையில் அவரின் பெயர் அந்த இடத்திற்கும் வைக்கப்பட்டது. அங்கு ஒரு பிரித்தானிய நிர்வாக அலுவலகமும் நிறுவப்பட்டது.[3]
நிலை | இனம் | தொகை |
---|---|---|
குடிமக்கள் | மலாயர் | 10,762 |
வேறு பூமிபுத்ரா | 22,189 | |
சீனர் | 569 | |
மலேசிய இந்தியர் | 44 | |
வேறு இனத்தவர் | 165 | |
மலேசியர் அல்லாதவர் | - | 4,099 |
மொத்தம் | 37,828 |
புரூணை விரிகுடாவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் சிபித்தாங் கடற்கரை உள்ளது. இந்தக் கடற்கரைதான் புரூணை மற்றும் லபுவானில் இருந்து வரும் பயணிகளுக்கு நுழைவாயிலாக அமைகிறது.
சிபித்தாங் மாவட்டம் ஒரு நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. அதன் வழியாக லுக்குத்தான் ஆறு (Lukutan River), சிபித்தாங் ஆறு (Sipitang River), மெங்காலோங் ஆறு (Mengalong River), பாடாஸ் ஆறு (Padas River) எனும் 4 முக்கிய ஆறுகள் பாய்கின்றன.
தெற்கில் இருந்து தென்மேற்காக சிபித்தாங் மாவட்டத்தைக் கடக்கும் போது இந்த மாவட்டத்தில் இருந்து குரோக்கர் மலைத்தொடரை (Crocker Range) காணலாம். மழைக்காலத்தில் சிபித்தாங்கில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உண்டு. அதற்கு கடலோரப் பகுதிக்கு அருகில் சிறிய குன்றுகளும் சமதளமான நிலங்களும் இருப்பதும் ஒரு முக்கிய காரணம் என அறியப்பட்டு உள்ளது.