சியாருடூன் கல்வெட்டு அதன் அசல் இருப்பிடத்தில், சுமார் 1900 இல் | |
செய்பொருள் | கல் |
---|---|
அளவு | 2 இக்கு 1.5 மீட்டர் |
எழுத்து | பல்லவ எழுத்துமுறையில் எழுதப்பட்ட சமசுகிருத கல்வெட்டு |
உருவாக்கம் | 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதி |
கண்டுபிடிப்பு | சியாருடூன் ஆறு, சியாருடூன் இலிர் சிற்றூர், சிபுங்புலாங் மாவட்டம், போகோர் ரீஜென்சி, மேற்கு சாவகம், இந்தோனேசியா |
தற்போதைய இடம் | அமைவிடம்; 6°31′39.84″S 106°41′28.32″E / 6.5277333°S 106.6912000°E |
சியாருடூன் கல்வெட்டு (Ciaruteun inscription) சியாருடோன் அல்லது சியாம்பியா கல்வெட்டு என்றும் அழைக்கப்படுகிறது, இது 5 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஆகும். இது சிசாடேன் ஆற்றின் துணை ஆறான சியாருடூன் ஆறு பாயம் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்தோனேசியாவின் மேற்கு சாவகத்தின் பொகோரிலிருந்து சற்று தொலைவில் உள்ளது. இது இந்தோனேசிய வரலாற்றின் ஆரம்பகால இந்து சாம்ராஜ்யங்களில் ஒன்றான தருமநகர சாம்ராச்சிய காலத்தைச் சேர்ந்தது. [1]:15 தருமநகரை ஆண்ட பூர்ணவர்மன் என்ற மன்னன் என்று கல்வெட்டு கூறுகிறது.
சியாருடூன் கல்வெட்டானது இந்தோனேசியாவின், போகோர் ரீஜென்சி, சிபுங்புலாங் மாவட்டத்தில், சியாருடூன் இலிர் என்ற சிற்றூரில் 6°31'23,6” அட்சரேகை மற்றும் 106°41'28,2” தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. இந்த இடம் பொகோர் நகர மையத்திலிருந்து வடமேற்கே சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இடம் ஒரு சிறிய மலைப் பகுதியாகும் ( சுண்டா : pasir ) இது சிசாடேன், சியான்டென் சியாருட்யூன் ஆகிய மூன்று ஆறுகளின் சங்கமம் ஆகும். 19 ஆம் நூற்றாண்டு வரை, இந்த இடம் பாசிர் முவாராவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இன்று இது சிபுங்புலாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த கல்வெட்டு, உள்நாட்டில் பத்து காளி (ஆற்றுக் கல்) என அழைக்கப்படும் ஒரு பெரிய இயற்கையான கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் எட்டு டன் எடையும், 200 சென்டிமீட்டர், 150 சென்டிமீட்டர் என்ற நீள அகலம் கொண்டது. [1]:16
1863 ஆம் ஆண்டில் டச்சு கிழக்கு இந்தியாவில், பியூடென்சோர்க்கிலிருந்து ( பொகோர் ) சற்று தொலைவில் உள்ள டிஜாம்பியா (சியாம்பியா) அருகே கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஒரு பெரிய பாறை காணப்பட்டதாக அறியப்பட்டது. அது சிசாடேன் ஆற்றின் துணை ஆறான டிஜியாரோடீன் ஆற்றின் கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இன்று சியாருடூன் கல்வெட்டு என்று அழைக்கப்படுகிறது. இது 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது வெங்கி எழுத்துக்கள் (தமிழகத்தின் பல்லவர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது) கொண்டு சமசுகிருத மொழியில் எழுதப்பட்டது. "தருமநகர" என்று இராச்சியத்தின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிடும் ஆரம்பகால கல்வெட்டு இதுவாகும். [1]:15 பூர்ணவர்மன் தருமநகரின் மிகவும் புகழ்வாய்ந்த அரசன் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.[1]:15 இக்கல்வெட்டு கண்டறியப்பட்ட அதே ஆண்டில், கல்வெட்டு குறித்த தகவல் படாவியாவில் உள்ள படாவியாஸ்ச் ஜெனூட்சாப் வான் குன்ஸ்டன் என் வெடென்சாப்பனுக்கு (தற்போதைய இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகம் ) தெரிவிக்கப்பட்டது. 1893 இல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக, கல் பல மீட்டர் தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டு, சிறிது சாய்ந்த நிலையில் காணப்பட்டது. பின்னர் 1903 இல், கல்வெட்டு அதன் அசல் நிலையில் மீட்டெடுக்கப்பட்டது.
1981 ஆம் ஆண்டில், கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் துணைப்பிரிவான பாரம்பரியம் மற்றும் தொல்லலியல் பொருட்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு இயக்குநரகமானது, கல்வெட்டை ஆற்றுப் படுகையிலிருந்து அதன் அசல் இடத்தில் இருந்து சற்று தொலைவில் உயரமான ஒரு இடத்திற்கு இடம் மாற்றியது. இன்று, கல்வெட்டு காலநிலையால் ஏற்படும் அழிவிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பெண்டோபோ கூரை அமைப்பு மூலம் பாதுகாக்கப்ட்டுள்ளது. கல்வெட்டின் மாதிரிகள் மூன்று அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகம் மற்றும் ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் பாண்டுங்கில் உள்ள ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம் ஆகியவை ஆகும். [1]:16
சியாருரூன் கல்வெட்டு பல்லவ எழுத்தில் எழுதப்பட்டது. இது சமசுகிருதத்தில் ஸ்லோக கவிதையாக இயற்றப்பட்டதாக உள்ளது. இது நான்கு வரிகளைக் கொண்டுள்ளது. பொறிக்கப்பட்ட கல்வெட்டின் இறுதியில், இரு பாதச்சின்னங்கள் மற்றும் ஶங்கலிபியும் உள்ளன. [2]
வரி | ஒலிபெயர்ப்பு |
---|---|
1 | விக்க்ரான்தஸ்யாவனிபதே: |
2 | ஸ்ரீமத: பூர்ணவர்ம்மன: |
3 | தாருமநகரேந்த்ரஸ்ய |
4 | விஷ்ணோரிவ பதத்வயம் |
கல்வெட்டின் இறுதியில் அமைந்துள்ள பாதச்சுவடுகள் அரசனின் அதிகாரத்தைக் குறிக்கிறது. இந்து கடவுளான விஷ்ணுவின் பாதங்களுடன் பூர்ணவர்மனின் பாதங்களை ஒப்பீட்டு. பூர்ணவர்மனால் வணங்கப்படும் முக்கிய தெய்வம் விஷ்ணு என்பதைக் குறிக்கிறது. மேலும் பூர்ணவர்மனின் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு காக்கும் கடவுளான விஷ்ணுவைப் போன்று மக்களைக் காப்பவர் என ஒப்பிடுவதாக உள்ளது. அந்த இடத்தில் கால் பாதச்சுவடுகளைப் பயன்படுத்துவது நம்பகத்தன்மையின் அடையாளமாக இருக்கலாம். [1]:16